தேமுதிக பொதுக்குழு – பொதுச் செயலாளராகிறார் பிரேமலதா !
தேமுதிக பொதுக்குழு – பொதுச் செயலாளராகிறார் பிரேமலதா !
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிச-14 அன்று சென்னை திருவேற்காடு, பெருமாள் அகரம், ஜி.பி.என். பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக, அக்கட்சியின் தலைமைக்கழகத்திலிருந்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தேமுதிக கட்சியின் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு மத்தியில், மருத்துவ சிகிச்சை முடித்து அவர் வீடு திரும்பியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
கடந்த 2022 – இல் கடும் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்தின் கால் விரல்கள் சில அகற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து தைராய்டு பிரச்சினையால் அவரது பேச்சு பறிபோனது. அப்போது முதலாக, வீட்டில் குழந்தையைப் போலவே அவரது குடும்பத்தார் கவனித்து வந்த நிலையில் தற்போது சிறுநீரக பிரச்சினை, முதுகு தண்டு வட பிரச்சினைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த பின்புலத்திலிருந்து கூட்டப்படும் இந்த பொதுக்குழுவில் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. கடந்த 2022 – இல் உடல்நலக்குறைவால் அவரது அன்றாட செயல்பாடுகள் முடங்கியபோதே, பொதுக்குழுவைக் கூட்டி பிரமேலதாவை பொதுச்செயலாளராக அறிவிப்பார்கள் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ”பொதுச் செயலாளராகிறார் பிரேமலதா” என அங்குசம் இதழிலும் அப்போதே பதிவு செய்திருந்தோம்.
தற்போது, ஓராண்டு காலம் உருண்டோடிய நிலையில் பொதுக்குழுவை அறிவித்திருக்கிறார்கள். பிரேமலதா பொதுச்செயலாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் எகிறிக்கிடக்கிறது.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து முதல்வரான எம்.ஜி.ஆர். பாணியில், தமிழக அரசியலில் தனக்கான தனி முத்திரையை பதித்த ஒரு அரசியல்வாதி விஜயகாந்த்.
2005 – இல் கட்சியைத் தொடங்கி, வெறும் ஏழே ஆண்டுகளில் 29 இடங்களில் வெற்றிபெற்று எதிர்கட்சித் தலைவராக விஜயகாந்த் உருவெடுத்ததை பலரும் புருவம் உயர்த்தித்தான் பார்த்தார்கள்.
2011-இல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சியாக ஆகும் வரையில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்தே தேர்தலை சந்தித்து 8 முதல் 10 சதவீத வாக்குகளை பெற்றதும் தனிச்சிறப்பான ஒன்றுதான்.
வெற்று பந்தா இல்லாத மனிதர், இரக்க குணம் கொண்டவர், துணிச்சலான பேசக்கூடியவர், சட்டசபையிலேயே ஜெ.வுக்கு எதிராக சண்டமாருதம் புரிந்தவர் என்பதெல்லாம் இவரது தனித்த அடையாளங்களாக இருந்தன.
ஜெ.வுடனான மோதலையடுத்து அதிமுகவுடனான உறவில் விரிசல் ஏற்பட, கட்சியின் வளர்ச்சியில் தொய்வை ஏற்படுத்தியது. 2016 -இல் வைகோ, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் இணைந்து களம் கண்ட ‘மக்கள் நலக்கூட்டணி அஸ்திரமும் கை கொடுக்கவில்லை.
இந்த கெரகங்களோடு, விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவும் ஏற்பட, அவரைப்போலவே கட்சியின் செயல்பாடுகளும் ஏறத்தாழ முடங்கியதாகவும்; கூடவே, மனைவி பிரேமலதா மற்றும் மச்சான் சதீஷ் ஆகியோரின் தலையீடு கட்சிக்குள் அதிகரித்ததாகவும்; மனைவி, மச்சான், மகன்கள் உள்ளிட்டு மொத்த குடும்பமும் கட்சியின் பலம் பலவீனம் அறியாமல் அகங்காரமாக பேசிய பேச்சுக்களாலும்தான் தேமுதிக கட்சி பின்னடைவை சந்தித்ததாகவும் குற்றச்சாட்டுகளும் அதிருப்திகளும் எழுந்தன.
குறிப்பாக, திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக தேமுதிக-வை நம்பி அதிலும் குறிப்பாக கேப்டனை நம்பி துடிப்போடு வந்தவர்களெல்லாம் சொந்த காசையும் கட்சிக்காக செலவழித்துவிட்டு விரக்தியில் அடுத்தடுத்து வெளியேறியதாகவும் சொல்கிறார்கள்.
இந்த பின்னணியிலிருந்தும், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையிலும் தற்போது கூட்டப்பட்டிருக்கும் இந்த பொதுக்குழு அந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளிடையே புதுத்தெம்பை உண்டாக்கியிருப்பதாக மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார்கள்.
“கட்சியின் நிறுவனத் தலைவராகவும், பொதுச்செயலராகவும் கேப்டனே தற்போதுவரை தொடர்ந்து வருகிறார். அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் வந்து கொண்டிருக்கிற சூழலில், அவர் நல்ல நிலையில் இருக்கும் பொழுதே பிரேமலதாவை பொதுச்செயலராக அறிவிப்பார் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம். எதிர்காலத்தில் யாரும் எதுவும் பேசும் நிலையை உருவாக்கிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.” என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள் வட்டாரத்தில்.
கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாநில – மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் பணி செயலாளர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள் உள்ளிட்டு பொதுக்குழு அந்தஸ்து பெற்ற இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இதுதவிர, புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தலைமைக் கழக செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த பொதுக்குழுவில் கேப்டன் விஜயகாந்த் கலந்துகொள்வார் என்றும்; கழகத்தின் ஆக்கப்பணிகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உரையாற்றுவார்கள் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.
”தலைவரை மீட்ட எங்கள் அண்ணியார், தேமுதிக கொடி வெல்ல .. தலைவரின் கொள்கையை தமிழகத்தில் செயல்படுத்துவார்.” என உற்சாக பெருக்கில் திளைக்கிறார்கள் தேமுதிக தொண்டர்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.