பொதுபாதையை ஆக்கிரமித்த திமுக வழக்கறிஞர் ; அதிரடியாக அகற்றிய திருச்சி கலெக்டர்!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுமயங்குடி காட்டூர் சவேரியார் நகரைச் சேர்ந்த ஜான் பீட்டர் அந்தப் பகுதியில் சொந்த வீடு கட்டி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் அந்த வீட்டிற்கான அனைத்து ஆவணங்களை வைத்துள்ளார். இந்தநிலையில் லால்குடி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கென்னடி என்பவர் ஜான் பீட்டர் வீட்டிற்கு முன் உள்ள பொது வழியான தென்வடல் தெற்கு வடக்கு என்று சொல்லக்கூடிய இடத்தின் ஒரு பகுதியை 4.7.2020 அன்று ஆக்கிரமிக்க தொடங்கினர். இதையடுத்து ஜான் பீட்டர் லால்குடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளிக்கிறார். மேலும் அந்த புகாரின் நகலை விஏஓ, தாசில்தார், ஆர்டிஓ விற்கும் அனுப்பி வைக்கிறார். இந்த நிலையில் காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் சென்று ஜான் கென்னடியை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று கூறி தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து கென்னடி, ஜான் பீட்டர் மற்றும் அவரது குடும்பத்தின் மீது ஆத்திரம் கொண்டு ஆக்கிரமிப்பை அதிகப்படுத்த தொடங்கியிருக்கிறார். ஜான் கென்னடி ஊராட்சி மன்றத்திலும் பொறுப்பு வகிப்பதாலும், மேலும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும் இருப்பதாலும் அதை பயன்படுத்தி ஜான் பீட்டர் குடும்பத்திற்கு தொடர் அச்சுறுத்தல்களையும் அவர் வீட்டின் முன்பகுதி உள்ள பொது இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்து இருக்கிறார்.
இதையடுத்து ஜான் பீட்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் விஏஓ, சர்வேயர், தாசில்தார் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர், டிஆர்ஓ என்று அனைவருக்கும் புகார் மனு அளித்திருக்கின்றனர்.

மேலும் கடந்த வருடம் லால்குடி காவல் நிலைய ஆய்வாளர், விஏஓ, தாசில்தார் ஊராட்சி மன்ற தலைவர் இடத்தை பார்வையிட்ட வந்து இருக்கின்றனர். அப்போது இடத்தை அளக்கும்போது ஜான் கென்னடி மற்றும் அவரது மனைவி, அவரது உறவினர்கள் இணைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தையால் திட்டி இருக்கின்றனர் இது தொடர்பாக விஏஓ அளித்த புகாரின் பேரில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காகவும் மேலும் அரசு ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் லால்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரது வீட்டின் குறிப்பிட்ட பகுதியே ஆக்கிரமித்து செய்யப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் மார்க் செய்து விட்டுச் சென்றிருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு அதிகாரம் இருப்பதாக கூறி, ஊராட்சி மன்ற தலைவருக்கு கடிதம் தாசில்தார் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டது.
அந்த நேரத்தில் ஜான் கென்னடி அந்த இடத்தை தனக்கு சொந்தமான இடம் என்றும் கூறி, அந்த பாதையை பொது வழியாக தன் முன்னோர்கள் காலத்தில் அளித்துவிட்டதாகவும் கூறி முழுமையாக ஆக்கிரமித்தார். மேலும் இதுதொடர்பாக கென்னடி லால்குடி கீழமை நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து ஜான்பீட்டர் குடும்பத்தின் சார்பாக நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து, அது பொதுவழி என்பதற்கான வாதங்களை முன்வைத்தனர். மேலும் அரசினுடைய இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதற்கான ஆவணங்களையும் காட்டி உள்ளனர். இந்த நிலையில் வழக்கு நிலுவையில் உள்ள நேரத்தில் அந்த முழு பகுதியிலும் மணலைக் கொட்டி ஆக்கிரமிப்பு செய்ய செய்ய தொடங்கிவிட்டார் கென்னடி.
இதனால் வீட்டின் வாயில் முழுவதும் அடைக்கப்பட்ட ஜான் பீட்டரின் குடும்பத்தினர் மீண்டும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர், ஆர்டிஓ, தாசில்தார், விஏஓ, லால்குடி காவல் ஆய்வாளர் மற்றும் பலருக்கு புகார் தெரிவிக்கின்றனர். முதல்நாள் சென்றபோது கலெக்டர் மீட்டிங்கில் இருந்ததால் டிஆர்ஓ-வை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க ஆர்டிஓ சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க கூறியிருக்கிறார்.
ஆனாலும் கென்னடி தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதை காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் ஜான்பீட்டரின் குடும்பத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் தாசில்தார், சமயபுரம் காவல் ஆணையர், விஏஓ, சர்வேயர், பிடிஓ உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆகஸ்ட் 10 இன்று மதியம் 1 மணி அளவில் ஆக்கிரமிப்புகளின் ஒரு பகுதியை மட்டும் தற்காலிகமாக அகற்றியுள்ளனர்.
இன்று ஆக்கிரமிப்பை அகற்றும் போது அதிகாரிகளிடம் இந்த ஊரில் எனக்கு ஒரு பெயர் இருக்கிறது, அதனால் நீங்கள் அப்புறப்படுத்த வேண்டாம் நானே அப்புறப்படுத்தி கொள்கிறேன், தயவு செய்து நீங்கள் ஏதும் செய்ய வேண்டாம் என்று போகச் சொல்லியிருக்கிறார் கென்னடி. ஆனால் அதிகாரிகளோ ஆர்டர் வந்துவிட்டது, அதனால் நாங்கள் நடவடிக்கை எடுத்துதான் ஆகவேண்டும் என்று கூறியிருக்கின்றனர். அதற்கு கென்னடி நான் மண்வெட்டியைக் கொண்டு வேலையை செய்து விடுகிறேன் நீங்கள் சென்று விடுங்கள் என்று கூற, நாங்கள் ஜேசிபியை வர வைத்திருக்கிறோம் அதிலேயே பணியை முடித்து விடுகிறோம் என்று கூறி பணியை செய்துள்ளனர் அதிகாரிகள்.
மேலும் இதுகுறித்து ஜான்பீட்டர் கும்பத்தார் கூறுகையில், அனைத்து ஆவணங்களும் எங்களிடம் சரியாக உள்ளது. ஆனாலும் எவ்வித ஆதாரமும் இல்லாமல், ஆவணங்களும் இல்லாமல் அதிகார பலத்தை மட்டும் பயன்படுத்திக் கொண்டு கென்னடி அவர்கள் தொடர்ந்து இடையூறு கொடுத்து வருகிறார். மேலும் அவர் வீடு அமைந்து இருக்கக்கூடிய இடத்திற்கே அவரிடம் தோராயப்பட்டா மட்டும்தான் உள்ளது என்று கூறினார்,
இது மட்டுமல்லாது எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்கு கொடுத்திருக்கிறார். இப்படி தொடர்ந்து எங்கள் குடும்பத்தை மன உளைச்சலுக்கு உண்டாக்கி கொண்டிருக்கிறார்.
எங்களுக்கோ அவரிடம் எதிர்த்து சண்டையிடுவதற்கு விருப்பமில்லை, ஆனால் அவரோ பொது வழிக்கு போலியான ஆவணங்களை தயாரித்து, எவ்வித சரியான ஆவணங்களும் இல்லாமல், பட்டாவும் இல்லாமல் ஆக்கிரமித்து இருக்கிறார். ஒரு வருட காலமாக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். இதற்காக எத்தனையோ அதிகாரிகளை பலமுறை சந்தித்து புகார்களை அளித்திருக்கிறோம். இப்படி அனைத்தையும் நியாயமான முறையில் எதிர் கொண்டு வருகிறோம்.
இந்நிலையில்தான் உரிய ஆவணங்கள் அனைத்தும் எங்களிடம் இருந்தும் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகே ஆக்கிரமிப்பின் ஒரு பகுதி தற்போது தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.
வழக்கறிஞர் கென்னடி தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி அரசாங்க அதிகாரிகளின் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்து வருகிறார்.