பொங்கல் பரிசு சிக்கலில் தி.மு.க அமைச்சர்கள்-அப்சட்டில் தொண்டர்கள்.!
பொங்கல் பரிசு வழங்குவதாக தி.மு.க-வின் இரண்டு அமைச்சர்கள் தங்களது தொகுதியை மட்டும் கவர் செய்த சம்பவம் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும், உயர்க்கல்வித் துறை அமைச்சருமாக இருப்பவர் கோவி.செழியன். முதலமைச்சரின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் ஒருவரும், துணை முதல்வரின் அரசியல் ஆசானாக கருதப்படும் இவர். சமீபத்தில் தனது தொகுதிக்குள் செய்த சம்பவம் ஒட்டுமொத்த தஞ்சை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளையும் டிஸ்டர்ப் செய்துள்ளது என்கின்றனர்.

இதுகுறித்து பேசும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க சீனியர்கள் சிலர், ”முன்னாள் அமைச்சர் கோசி.மணிக்கு பின், திமுக-வில் தஞ்சைக் கென்று அமைக்கப்பட்ட அமைச்சர் என்று பார்த்தால் அமைச்சர் கோவி.செழியன் மட்டும் தான். அப்படி தலைமை ஒவ்வொன்ரையும் கவனித்து கட்சி வளர்ச்சிக்காக செயலாற்றி வருகிறது. ஆனால் சமீபத்தில் அமைச்சர் கோவி.செழியன் தனது சொந்த தொகுதியான திருவிடைமருதூர் சுற்றுவட்டாரங்களில் மட்டும் பொங்கல் பரிசாக ஒவ்வொரு வீடுகளுக்கும், புடவை, சில்வர் பாத்திரங்களான அண்டா, குண்டா என்று வாரி வழங்கியுள்ளார். இதனால் பயனடைந்தது அவர் தொகுதி மக்கள் மட்டும் தான். இதனால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதி மக்களுக்கு பெரும் ஏமாற்றம் மட்டும் தான் கிடைத்தது. ஒரு மாவட்டத்திற்கு பொதுவான அமைச்சர் என்பவர் மற்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை எதிர்ப்பார்க்காமல், மாவட்டம் முழுமைக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை” என்கின்றனர்.
இந்த பிரச்னை ஒருபக்கம் கொழுந்துவிட்டு எரிய தி.மு.கவைச் சேர்ந்த மற்றொரு அமைச்சர் ஒருவர் செய்த தரமான சம்பவம் மேலும் தி.மு.க தலைமையை டிஸ்டர்ப் செய்துள்ளது. சேலம் மாவட்டம் தி.மு.க., வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், சுற்றுலாத்துறை அமைச்சருமாக இருப்பவர் தான் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன். வீரபாண்டியாருக்கு பின் சேலத்தில் ஒரு அமைச்சர் கூட இல்லை என்று உடன்பிறப்புகளின் நீண்டநாள் கவலையை துடைக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் ராஜேந்திரனை அமைச்சராக்கினார். ஆனால், அமைச்சர் ஒருவர் சேலத்தில் இருக்கிறாரா என்று யோசிக்கும் விதமாக தான் அவருடைய பர்ஃபாமன்ஸ் இருந்து வருகிறது என்கின்றனர் கட்சி தலைமையை சேர்ந்தவர்கள்.

பெருமளவு கட்சி வளர்ச்சிக்கு களத்தில் வேலை பார்க்கமாட்டிகிறார் என்பது ஒருபக்கம் இருந்தாலும், மாவட்டச் செயலாளராக இருந்தபோது, கட்சி நிர்வாகிகளை அரவணைத்தவர். அமைச்சராகிய பிறகு ஒவ்வொரு சீனியர் நிர்வாகிகள் முதல் கட்சிக்கு வேலை செய்யக்கூடிய தொண்டர்கள் வரை எல்லோரையும் ஒதுக்கி வைக்கிறாராம். இதனால் அவர்கள் அனைவரும் மாற்றுக்கட்சியான அதிமுக-வில் இணைந்து வரும் தேர்தலில் தி.மு.கவுக்கு எதிராக வேலைப்பார்க்க தொடங்கியுள்ளனராம். அதிமுக கோட்டையாக விளங்கும் சேலத்தில், ராஜேந்திரன் எந்த தொகுதியில் வேட்பாளராக நிற்கிறாரோ அங்கே அவர் மட்டும் தான் வெற்றி பெறுவார் என்று தலைமைக்கே தெரியும். ஆனால் அவருக்கு பொறுப்பான மற்ற தொகுதிகளை கவனிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் தனது சொந்த பணத்தில் தனது வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்களுக்கு மட்டும் புடவை மற்றும் சில்வர் பாத்திர பொருட்கள் வழங்கியுள்ளார். இதனால் திமுக அமைப்பு ரீதியாக மத்திய மாவட்டதிற்குள் இருக்கும் மற்ற தொகுதி மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்” என்கின்றனர்.
— ஜெ. ஜான் கென்னடி








Comments are closed, but trackbacks and pingbacks are open.