தேனி மா.செ. தங்க தமிழ்ச்செல்வனை கண்டித்து திமுக உறுப்பினர் அட்டையை ஒப்படைக்க திட்டம் !
தேனி மாவட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனை கண்டித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் உறுப்பினர் அடையாள அட்டை ஒப்படைக்க முடிவு.
தேனி மாவட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு செயலாளர், பேரூராட்சி செயலாளர், நகராட்சி செயலாளர், உள்ளிட்ட கட்சி பதவிக்கு அதிமுக, தினகரன் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தன்னுடைய சமூகம் சார்ந்தவர்களுக்கு கட்சி பதவிகள் வழங்கி இருப்பதாக, மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தேனி வடக்கு மாவட்ட திமுக தொண்டர்கள் இன்று 26.06.2022 மாலை போடி மீனாட்சிபுரம் ஸ்ரீ செல்லாயி அம்மன் கோவில் மண்டபத்தில் திமுக கட்சியின் தலைமையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் வடக்கு மாவட்டம் செயலாளர் தங்கத்தமிழ் செல்வனுக்கு எதிராக போடி -சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
விரைவில் தமிழக முதல்வர் தங்கதமிழ்செல்வன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் சென்னை அறிவாலயம் சென்று தங்களது உறுப்பினர் அடையாள அட்டையை அட்டையை ஒப்படைக்க இருப்பதாக திமுக முக்கிய நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கு இடையே தேனியில் ஓ.பி.எஸ்.க்கு எதிர் அரசியல் செய்ய எடப்பாடி காய் நகர்த்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..