பாசத்தின் காரணமாகவே இந்த திருமண விழாவிற்கு நான் வந்திருக்கிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
நகர் மன்ற முன்னாள் தலைவர் மா. பாலகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் எம்.எல்.ஏ. பரணிக்குமார் பாலகிருஷ்ணன் -மகாலட்சுமி பரணிக்குமார் தம்பதியரின் மகனுமான டாக்டர் ஆதித்யா பாலா பரணி குமாருக்கும், சென்னை கே. மோகன்- எம். சாந்தகுமாரி மகள் டாக்டர் எம். மீனாட்சிக்கும் திருமண விழா இன்று (புதன்கிழமை) திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் , துணைவியார் துர்கா ஸ்டாலினுடன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுக்க மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் மணமக்கள் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்களுக்கு பரிசு வழங்கி குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்து பேசினார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்று பேசினார்.விழாவில் திருச்சி மாநகராட்சி மேயரும், நகர செயலாளருமான அன்பழகன்,திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற, இன்னாள் , முன்னாள் , உறுப்பினர்கள், மாவட்ட ,மாநகர, ஒன்றிய நகர பகுதி பேரூர் வட்ட கழக செயலாளர் மாமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
முடிவில் முன்னாள் எம்.எல்.ஏ பரணிகுமார் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பே சியதாவது;- கழகம் வளர்வதற்குத் திருச்சியில் முக்கியக் காரணமாக இருந்தவர்களில் பெரியவர் பாலகிருஷ்ணனும் ஒருவர். அண்ணா, கலைஞர் மற்றும் பேராசிரியருடன் நெருக்கமாக இருந்தவர். அவரது மகன் பரணிகுமார் என்னோடு 20 ஆண்டுகாலமாகச் சுற்றுப்பயணங்களில் நிழல் போலத் தொடர்ந்தவர்.
நான் இளைஞரணி தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தபோது, எனது காரை ஓட்டியவர் பரணிகுமார் தான். அவர் கார் ஓட்டும்போது எனக்கு எந்த அச்சமும் இருக்காது. பல நேரங்களில் இரவு 2 அல்லது 3 மணி வரை காரை ஓட்டிவிட்டு, மீண்டும் அதிகாலையிலேயே தயாராகிவிடுவார். பல கிராமங்களில் நான் கொடியேற்றச் செல்லும்போது, மக்கள் அவரைப் பார்த்து “டிரைவர் இவ்வளவு குண்டாக இருக்கிறார், தலைவர் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறார்” என்று பேசிய நகைச்சுவையான சம்பவங்களையும் அவர் என்னிடம் பகிர்ந்திருக்கிறார்.
தேர்தல் நெருங்கும் வேளையில் மிகவும் பிஸியாக இருந்தாலும், பாலகிருஷ்ணன் மற்றும் பரணிகுமார் குடும்பத்தின் மீது கொண்டுள்ள பாசத்தின் காரணமாகவே இந்த விழாவிற்கு நான் வந்திருக்கிறேன். திருச்சியில் விரைவில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாட்டை அமைச்சர் கே.என்.நேரு நடத்த உள்ளார். மணமக்கள் வீட்டிற்கு விளக்காகவும், நாட்டிற்குத் தொண்டர்களாகவும் வாழ வேண்டும் எனப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வரிகளைக் கூறி வாழ்த்துகிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.