”திவ்யாவும் ஆனந்தும் நிஜ கேரக்டர்கள் தான்” ‘டி.என்.ஏ.’ தேங்க்ஸ் கிவிங் மீட்டில் டைரக்டர் சொன்னது!
‘ஒலிம்பியா மூவிஸ்’ ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்து, நெல்சன் வெங்கடேசன் இயக்கிய ‘டி.என்.ஏ.’ படம் கடந்த 20-ஆம் தேதி ரிலீசாகி, ரசிகர்களின் ஆதவுடனும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் மிகவும் மகிழ்ச்சியான படக்குழுவினர், பத்திரிகையாளர்களுக்கும் மக்களுக்கும் நன்றி சொல்லும் நிகழ்வை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூன்.24—ஆம் தேதி நடத்தினார்கள்.
நிகழ்வில் பேசியவர்கள்…
எடிட்டர் சாபு ஜோசப்,
“இந்த தருணத்திற்காகத் தான் நாங்கள் ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தோம். கடுமையாக உழைத்ததற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது”.
ஒளிப்பதிவாளர் பார்த்திபன், “நெல்சன் வெங்கடேசனின் முதல் படமான ‘ஒருநாள் கூத்து’ படத்திலிருந்து அவருடன் நட்பாக உள்ளேன். என்னுடைய முதல் படமான ‘பேச்சி’ ரிலீசாவதற்கு முன்பே இந்த டி.என்.ஏ.வுக்கு ஒளிப்பதிவாளராகினார். அவருக்கும் படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமாருக்கும் இதில் நடித்த நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்கள், படம் வெற்றி பெறக்காரணமான பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி”.
நடிகர் போஸ் வெங்கட்,
“கதாசியர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கென்று தனிப்பிரிவு இயங்கினால் தமிழ் சினிமா இன்னும் சிறப்பாக இருக்கும்”.
கதாசிரியர் அதிஷா,
“சினிமா கதைகளில் 90% உண்மைச் சம்பவங்கள் இருந்தால் அந்தப் படம் ஜெயிக்கும். அந்த வகையில் இந்த ‘டி.என்.ஏ.வின் கதை, சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, கஸ்தூரிபா மருத்துவமனையில் நடந்த சில சம்பங்களும் ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் புத்தகத்தில் இருக்கும் சில சம்பவங்களும் தான். குழந்தை கடத்தும் பாட்டியாக நடித்துள்ள சாத்தூர் ஜெயலட்சுமி கூட நான் சந்தித்த நிஜ கேரக்டர் தான். அதனால் இந்தக் கதையில் 90% உண்மை இருக்கு, 10% தான் கற்பனை இருக்கு”.
ஹீரோயின் நிமிஷா,
“இப்படத்தில் திவ்யா கேரக்டருக்குக் கிடைத்த பாராட்டுகளுலெல்லாம் இயக்குனர் நெல்சனுக்குத் தான் போய்ச் சேரும். ஏன்னா அவர் சொன்னதை நான் செய்தேன். எனது நடிப்பைப் பாராட்டி எழுதி ஊக்கப்படுத்திய மீடியாவுக்கு நன்றி”.
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்,
“ஒரு இயக்குனர் நல்ல படம் எடுத்தால் மட்டும் வெற்றி பெறாது. அதை வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் விரும்ப வேண்டும். அதற்காக படத்தை பல வகைகளிலும் விளம்பரப்படுத்த வேண்டும். இப்படி எல்லோரின் ஆதரவுடன் தான் இப்போதைய தமிழ் சினிமா வெற்றி பெறுகிறது. இதான் எதார்த்தம். அதர்வா—நிமிஷாவின் கேரக்டர்களான ஆனந்தும் திவ்யாவும் நான் உண்மையிலேயே சந்தித்த கேரக்டர்கள். இப்போதும் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தனித்தனி திருமணம் செய்து கொண்டு. எனவே இப்படத்தின் வெற்றியை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இக்கதை மீதும் என் மீதும் நம்பிக்கை வைத்துத் தயாரித்த அம்பேத்குமார் சார், அவரிடம் கதை சொல்ல பேருதவியாக இருந்த பி.ஆர்.ஓ.சுரேஷ் சந்திரா, ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்ட அதர்வா, ஹீரோயின் நிமிஷா உட்பட மற்ற கலைஞர்கள், என்னுடைய உதவி இயக்குனர்கள், பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், ரிலீசுக்கு முன்பும் இப்போது நான்கு நாட்களாகவும் நாங்கள் நிம்மதியாக இருக்கக் காரணமான படத்தின் பி.ஆர்.ஓ.யுவராஜுக்கும் தொடர்ந்து என்னை ஊக்குவித்து உத்வேகம் அளிக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் அமோக ஆதரவளித்த மக்களுக்கும் பெரும் நன்றி”.
ஹீரோ அதர்வா,
“டைரக்டர் நெல்சன் வெங்கடேசன் என் மீது நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டேன் என நினைக்கிறேன். இப்படத்தின் ஷூட்டிங் நடந்த போது எனக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. படம் ரிலீசான பிறகு பல ஊர்களுக்கு தியேட்டர் விசிட் போன போது வெளிப்பட்ட மக்களின் பேரன்பு என்னை நெகிழ்ச்சியடையச் செய்தது. அப்போது உலகிலேயே மகிழ்ச்சியான மனிதனாக என்னை உணர்ந்தேன். படத்தைத் தயாரித்த அம்பேத்குமார், ஹீரோயின் நிமிஷா, சக கலைஞர்கள், பின்னணி இசையை சிறப்பாக வழங்கிய ஜிப்ரான் உட்பட அனைத்து டெக்னீஷியன்களுக்கும் நன்றி”.
— மதுரை மாறன்