அடுத்தடுத்து அவமதிப்பிற்குள்ளாகும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ! அரசியல் செய்கிறார்களா அதிகாரிகள் ?
அடுத்தடுத்து அவமதிப்பிற்குள்ளாகும் எம்.எல்.ஏ.க்கள் ! அரசியல் செய்கிறார்களா அதிகாரிகள் ? திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியின் சார்பில் நிறுவப்பட்ட கல்வெட்டுக்களில் உள்ளூர் எம்.எல்.ஏ. பெயரை திட்டமிட்டே புறக்கணித்துவிட்டார்கள் என்ற புகைச்சல் கிளம்பியிருக்கிறது. மிக சமீபத்தில்தான், ”லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் இயற்கை எய்திவிட்டதால் லால்குடி தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது.” என்று இலால்குடிசட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியனே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தார். அதன் அதிர்வலையே இன்னும் ஓயாத நிலையில் இப்போது அடுத்த சர்ச்சை.
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதியதாக கட்டப்பட்ட குட்டக்கரை பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பழைய நகராட்சி பின்புறம் உள்ள புதிய நூலகம் மற்றும் அறிவுசார் மையம், அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்ட நோயாளிகளுடன் தங்குபவர்களுக்கான கட்டிடம் ஆகியவற்றை கடந்த ஜனவரி -05 ஆம் நாளன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வழியே திறந்து வைத்தார்.
புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்து ஆறு மாதங்களை கடந்த நிலையில், கடந்த வாரத்தில் துறையூர் நகராட்சியின் சார்பில் புதியதாக கல்வெட்டுகளை நிறுவியிருக்கிறார்கள். இந்த கல்வெட்டுதான் தற்போது புகைச்சலை உண்டாக்கியிருக்கிறது.
தற்போது நிறுவிய இந்த கல்வெட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் பெயரும் கூடவே மற்றொரு கல்வெட்டில், நகர்மன்றத் தலைவர் தொடங்கி, நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டு, நகராட்சி ஒப்பந்ததாரர் பெயர் வரையில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால், துறையூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் பெயர் மருந்துக்குக்கூட கல்வெட்டில் இடம்பெறவில்லை.
கல்வெட்டில் பெயர் இல்லாததை கண்டு ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள், எம்.எல்.ஏ.வின் கவனத்திற்கு கொண்டு செல்ல; எம்.எல்.ஏ.வும் திருச்சி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல; அவரும் அதிகாரிகளை “ரவுண்டு” கட்ட, வேறு வழியின்றி தற்போது பிழையான அந்த கல்வெட்டை பெயர்த்து எடுத்திருக்கிறார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால், இந்த லோக்கல் பாலிடிக்ஸில் கல்வெட்டில் கலெக்டர் பெயரும் விடுபட்டு போயிருப்பது தான். என்னதான் பிரச்சினை என்பதை அறிய, நேரடியாக எம்.எல்.ஏ.விடமே பேசிவிடுவோம் என தொடர்புகொண்டோம். வாட்சப்பிலும் தகவலை தெரிவித்திருந்தோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.
அவரது ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். “அண்ணன் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றிருப்பதால் பேசாமல் இருந்திருப்பார்.” என்பதாக சொன்னவர்களிடம், ”என்னதான் பஞ்சாயத்து” என்றோம்.
”இந்த மூன்று கட்டிடங்களையும் கட்டி முடிப்பதற்கு முழு காரணம் (எம்.எல்.ஏ.) அண்ணன் தான். 2017-லிருந்து தொடர்ந்து மெனக்கெட்டிருக்கிறார். இப்போ இருக்கிற சேர்மன்லாம் அப்போ கிடையாது. நகராட்சிக்கு எலக்சனே நடக்கல. அதுக்கப்புறம்தான் இவங்களாம் வந்தாங்க. குறிப்பாக, நகர்ப்புற சுகாதார நிலையம் காய்கறி மார்க்கெட் பின்புறம் ஆலமரத்து சந்துலதான் இருந்துச்சி. கடுமையான இட நெருக்கடி. அவசர ஆத்திரத்துக்கு வாகனம் உள்ள போகவே முடியாது.
இதனால கர்ப்பிணிகள் ரொம்பவே சிரமப்பட்டாங்க. இதற்கு தீர்வு காணும் விதமாகத்தான் குட்டக்கரை பகுதியில் அரசுக்கு சொந்தமான காலி இடம் இருப்பதை அறிந்து பல்வேறு துறை அதிகாரிகளிடம் பேசி இந்த இடத்தை பெற்றுத் தந்தார். இந்த கட்டிடங்கள் உருவாக காரணமாக இருந்த எம்.எல்.ஏ. பெயரையே புறக்கணிச்சுட்டு கல்வெட்டு வச்சிருக்காங்க. ” என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
“இதுக்கு முன்னாடி நகராட்சி நிர்வாகம் முழுக்க மெடிக்கல் முரளியோட கட்டுப்பாட்டில் தான் இருந்துச்சி. சுழற்சி முறையில தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடுக்கு மாறிய பிறகு செல்வராணி மலர்மண்ணன் சேர்மன் ஆனாங்க.
அதன்பிறகும் துணை சேர்மனாக இருந்துகொண்டு மெடிக்கல் முரளி எல்லா டீலிங்கையும் கவனிச்சிட்டு இருந்தாரு. இதனால அதிருப்தியடைந்த கவுன்சிலர்கள் எல்லாம் ஒன்றுகூடி தலைமை கழகம் வரைக்கும் சென்று புகார் தெரிவிச்சாங்க. எப்படியும் மூன்று முறைக்கும் மேல மெட்றாசுக்கு போயிருப்பாங்க. அதன்பிறகுதான், அவரோட ஆதிக்கம் குறைஞ்சது.
இப்போ, செல்வராணியின் கொழுந்தனார் நகர செயலரா இருக்கும் இளங்கோவன் அந்த பொறுப்புகளை கவனிச்சிட்டு வர்றாரு. முறைப்படி கவுன்சிலர்களை அவரு கவனிச்சிடுறாரு. அதனால பிரச்சினை இல்லாம போயிட்டிருக்கு. செல்வராணியோட இன்னொரு கொழுந்தனாரு சுரேஷ் குமார்ன்றவரு எப்படியும் இந்த முறை எம்.எல்.ஏ. சீட்டை வாங்கிடனும்னு ரொம்பவே மெனக்கெடறாரு.
ஏரியா பக்கம் ஒரு கல்யாணம், காதுகுத்து நிகழ்வையும் விடறதில்லை. ஊர் முழுக்க பேனர் வச்சி பிரம்மாண்டமாக தன்னை ஃபோகஸ் பன்னிட்டிருக்காரு. ரொம்ப வருஷமாவே சிட்பண்ட்ஸ் நடத்திட்டு வந்தவரு.
காசு பணம் நல்லா புழங்குது. ஊர் திருவிழா, கபாடி மேட்ச்-க்கு பரிசளிக்கிறதுனு நல்லாவே தாராளம் காட்டுறாரு. இந்த பாலிடிக்ஸ்தான் எம்.எல்.ஏ. பெயர் விடுபட்டு போனதுக்கு காரணம். ” என்கிறார்கள் மற்றொரு தரப்பில்.
“தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்து தொகுதிக்கு நல்லது நிறைய செஞ்சிருக்காரு. அவரோடு பணியை குறை சொல்ற மாதிரி எதுவும் இல்லை.
எப்படியும் இவருக்கு மூனாவது முறையும் சீட்டு கொடுக்க மாட்டாங்க. இந்த நம்பிக்கையில இருந்துதான், சுரேஷ்குமாரும் இப்போதிலிருந்தே தனக்கான இமேஜை ஏரியாவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் பன்னிட்டு வர்றாரு. என்ன இருந்தாலும், எம்.எல்.ஏ. பெயர் இல்லாம கல்வெட்டு வச்சது தப்புதான்.” என்கிறார்கள் எதிர்தரப்பிலும்.
துறையூர் நகராட்சி ஆணையரிடம் அங்குசம் சார்பில் பேசினோம். “இது சின்ன எர்ரர் சார். இதெல்லாம் பெரிசுபடுத்தாதீங்க. கலெக்டரும் பேசினாங்க. எங்க கவனத்திற்கு வந்தவுடன் உடனே சரி செய்திட்டோம். பிரச்சினையெல்லாம் இல்லை. ” என்கிறார் அவர். நகராட்சி சேர்மன் செல்வராணியை தொடர்புகொள்ள முயற்சித்தோம். அவரும் நமது அழைப்பை ஏற்று பதிலளிக்கவில்லை.
ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளை அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை என்ற புகார் தமிழகம் முழுவதுமே பரவலாக எழுந்து வரும் நிலையில் இந்த சர்ச்சை முக்கிய கவனத்தை பெற்றிருக்கிறது. அதுவும் கலெக்டரின் பெயர் இல்லாமல், உள்ளூர் எம்.எல்.ஏ. பெயர் இல்லாமல் கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஏதோ ஒரு எழுத்து விடுபட்டுவிட்டதை போல, எர்ரர் என்கிறார் ஆணையர்.
கல்வெட்டில் இன்னார் பெயர் இடம்பெற வேண்டும் என்று யார் முடிவெடுத்தது? கல்வெட்டை நிறுவுவதற்கான பொறுப்பு யாருடையது? அவரே இந்த தவறுக்கான முழுப்பொறுப்பையும் ஏற்றாக வேண்டும்.
”அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என சம்பந்தபட்ட எம்.எல்.ஏ.வேகூட கடந்து போகலாம். அது அவரது பெருந்தன்மை. ஆனால், அரசியல்வாதிகளைப் போல அதிகாரிகளும் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார்களோ என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது, அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கும் விவகாரம்.
– ஆதிரன்.