காரணமே இல்லாமல் மன உளைச்சல் வருமா ?
காரணமே இல்லாமல் மன உளைச்சல் வருமா?
காலையில் வாக்கிங் போய்விட்டு வந்தவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார்? மன உளைச்சலில் இருந்தவரை டிபார்ட்மெண்ட் ஏன் கவனிக்கவில்லை? நல்ல வேலையில் இருந்தவருக்கு, எந்த கஷ்டமும் இல்லாதவருக்கு , நல்ல அறிவாளிக்கு எப்படி அந்த எண்ணம் வந்தது? இப்படியான கேள்விகளை அதிகம் பார்க்க முடிகிறது.
ஒரு புறக்காரணம் இல்லாமல் தற்கொலை எண்ணம் வரலாம். பல தீவிரமான மன நல பிரச்சினைகளின் ஒரு பாகமாக தற்கொலை எண்ணம் இருக்கும். அதை மன அழுத்தம், உளைச்சல் என்ற பொதுப்பெயர் வைத்து ஊடகங்கள் எழுதுகின்றன.
செய்தி கண்ட உடனே அதற்கு காரணம் வீடு, பணியிடம் என்றும் முன்முடிவுகளுக்கு வரவேண்டாம். இப்படியான தற்கொலைகள் ஏராளமாக தினசரி நடக்கிறது. இனியும் நடக்கும். வரும் நாட்களில் அந்த எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கவும் செய்யும். இங்கே இதை தடுப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு. வசதிகள் இன்னும் குறைவு.
50 விழுக்காடு மனநல பிரச்சினைகள் 14 வயதுக்கு முன்பே துவங்கிவிடுகின்றன. அதனை கண்டறிந்து தடுக்க/ சரிசெய்ய உரிய mechanism பல நாடுகளில் இன்றுவரை கிடையாது. மனநல மருந்துகளை எடுத்துக்கொள்ள தயங்குவது என்பது கிட்டத்தட்ட இந்தியாவின் பொது மனோபாவம். மக்களை இதற்கு கண்வின்ஸ் செய்வதே களைப்பூட்டும் வேலையாக இருக்கிறது.
உத்திரவாதம் இல்லாத பணிச்சூழல், சமூகத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட வாழ்க்கை முறை, சூழல் சீர்கேடுகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல காரணங்களை மனநல பிரச்சினைகளை பரவலாக்குகின்றன. (பெரும்பாலான, எல்லோரும் அல்ல) இப்போது குழந்தைகளை வளர்க்கும் முறை குழந்தைகளை மன நலனை கட்டாயமாக பாதிக்கும் என்பது இன்னொரு கெட்ட செய்தி.
எதிர்மறையாக பேசுவது என் விருப்பம் அல்ல. ஆனால் கண்ணில் படும் எதிர்வினைகளை பார்க்கையில் இதனை சொல்ல வேண்டியிருக்கிறது.