சிசிடிவி தந்த துப்பு… உண்டியல் திருடனை கச்சிதமாக தூக்கிய போலீஸ்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழஒட்டம்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் சில நாட்களுக்கு முன்பு உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சாத்தூர் நகர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கண்காணிப்பு கேமரா பதிவுகள் திருடனை அடையாளம் காட்டின.
விசாரணையில், மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சேடப்பட்டியைச் சேர்ந்த தங்கபாண்டி (23) என்பவர் திருட்டில் ஈடுபட்டது உறுதியானது. அவரை தேடி வந்த போலீசார், நேற்று சிவகாசி பகுதியில் சுற்றித் திரிந்தபோது சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தங்கபாண்டியிடம் நடத்திய விசாரணையில், கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், திருட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தங்கபாண்டியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். கோவில் திருட்டு வழக்கை விரைவாகக் கண்டுபிடித்த சாத்தூர் நகர் போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.
— மாரீஸ்வரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.