இந்த குற்றத்தில் உங்களுக்கும் பங்கு இல்லையா ?!
திருவள்ளுரில் நான்கு பையன்கள் சேர்ந்து ஒரு வடமாநில இளைஞரை வைத்து அவரின் அனுமதி இல்லாமல் ரீல்ஸ் செய்கிறார்கள் அதனை அந்த இளைஞன் தடுக்கிறான். இதில் கோபமாகி திருத்தணி வரும்போது ரயிலில் இருந்து அந்த இளைஞனை கீழே இறக்கி அவனை கொடூரமாக வெட்டுகிறார்கள். அதனை அவன்களே வீடியோ எடுத்து ரீல்ஸாக இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள். இயல்பாக பார்க்கமுடியாத அந்த வீடியோவை பத்து முறையாவது திரும்ப திரும்ப பார்த்துயிருப்பேன்.
கெத்துக்காக அத்துமீறும் விடலைகள் !
அவர்கள் தங்களது கெத்து என்ன என்பதை வெளியுலகத்துக்கு காட்டவே அந்த இளைஞனை கெத்திப்போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்கள். மிகமிகமிக குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட அவர்களிடம் இல்லை. அவர்கள் சிறுவர்கள், கஞ்சா போதையில் செய்தார்கள் என இந்த விவகாரத்தை கஞ்சா மீது திருப்புகிறது அறிவுச்சமூகம்.

இந்த இளம் குற்றவாளிகள் உருவாக காரணமே இந்த பொதுச்சமூகம் தான். அதாவது இந்த பையன்களின் குடும்பம், சினிமா, அக்கம் பக்கத்தினர், ஆசிரியர், காவல்துறை, ஊடகம், நீதித்துறை என அனைத்துக்கும் பங்குண்டு. இதனை வாகாக மறைத்துவிட்டு போதை மீதும், அரசு மீது மட்டும் பழிப்போட்டுக்கொண்டு இருக்கிறோம். இது ஒவ்வொரு தனி மனிதனின் உளவியல்.
அரசாங்கத்தின் வேலையா ?
இந்த குற்றத்தை அரசு தான் தடுக்கவேண்டும் எனச்சொல்பவர்களிடம் எனக்கொரு கேள்வியுள்ளது. இந்த குற்றங்களை தடுக்க குடும்பத்தாருக்கும், நமக்கும் ஏன் பங்கில்லை என்பதுப்போல் பேசுகிறீர்கள்?
அரசாங்கம் ஒருவருக்கு உணவு, மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு இதனைத்தான் தரும். அதேபோல் ஒருவர் தவறு செய்தால் தண்டனை வாங்கித்தரும். இதுதான் அரசாங்கத்தின் பணி. ஒவ்வொரு பிள்ளையும் என்ன செய்கிறார்கள் எனப்பார்ப்பது அதன் வேலையல்ல. பள்ளி, கல்லூரிக்கு வரும் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி சூழலைத்தான் அரசாங்கம் அமைத்து தரும். அதைத்தான்டி நாம் பெற்ற பிள்ளைகள் தறுதலையாக வளர்க்கச்சொல்லி அரசாங்கமா சொல்கிறது? சிறார்களின் உளவில் ஐ.நா வழிக்காட்டுதல் போன்றவற்றின்படியே பிள்ளைகளின் உளவியலை உணர்ந்தே கல்வி கூடங்களில் அவர்களை அடிக்கவேண்டாம் எனச்சொல்கிறது அரசாங்கம். அதேநேரத்தில் மிக கடுமையாக மாணவர்களை கையாளும்போது சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது அரசு. தவறு செய்யும் மாணவ – மாணவிகளை ஆசிரியர்கள் கண்டிக்கும்போது, அவர்கள் மீது பாய்கிறார்கள் பெற்றோர்கள். இதில் சாதி – மதம் சார்ந்த பிரச்சனைகளையும் உருவாக்குகிறார்கள், இதன்பின்னால் சாதிய பிரமுகர்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆதரவுகள் சம்மந்தப்பட்ட மாணவர்கள், பசங்களை வளர்பருவத்திலேயே, எனக்கு சப்போர்ட் இருக்கிறது என கெத்து காட்டுகிறார்கள். இதனாலயே அப்படிப்பட்ட மாணவர்களை கைவிடுகிறது ஆசிரியர் சமூகம்.
பெற்றோர்களின் பங்கு என்ன?
உலகின் எல்லா நாடுகளிலுமே போதை பொருட்கள் உள்ளது. இந்தியாவில் போதை இல்லாத மாநிலம் என எதுவுமில்லை. அங்கே இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்கவில்லையா? நடக்கிறது. பிறகு ஏன் தமிழ்நாட்டில் மட்டும் அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டப்படுகிறது? இதன்பின்னால் உள்ள அரசியல் வேறு.
பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. தெரிந்துக்கொள்ள ஆர்வமும் காட்டுவதில்லை. உன் மகன் அல்லது மகள் இப்படி செய்கிறார்கள் என யாராவது சொன்னால், என் பிள்ளை அப்படியெல்லாம் செய்யமாட்டான் … திருந்திடுவான் என சப்போர்ட் செய்வதே பெற்றோர்கள் தான். பள்ளி, கல்லூரி போகும் தறுதலை பிள்ளைகள் புகைப்பது, குடிப்பது பெற்றோர்களுக்கு தெரியாதா? 90 சதவிதம் பெற்றோர்களுக்கு தெரியும். அதனை தாய்கள் மறைத்தே பிள்ளையை பாதுகாக்கிறார்கள். அது பிற்காலத்தில் குற்றச்சம்பவத்தில் போய் நிறுத்துகிறது.
இதற்கு மூலம் சினிமாக்கள் !
நாம் விரும்பும் சினிமா நாயகர்கள் எது செய்தாலும் அதுசரி என்கிற மனநிலையே பெரும்பான்மை மக்களிடம் உள்ளது. சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதை உணராமல் அதுவே வாழ்க்கை என நினைத்துக்கொண்டு உலாவும் மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஹீரோ புகைக்கலாம், குடிக்கலாம், கூத்தடிக்கலாம், ஈவ்டீசிங் செய்யலாம், பஞ்ச் பேசலாம். பத்து பேரை அடிக்கலாம், கொலை செய்யலாம், குற்றம் செய்துவிட்டு சிக்காமல் இருப்பது எப்படி என காட்சிப்படுத்தலாம். அதைப்பார்த்து கைதட்டி ஆதரவு தெரிவிக்கிறது நம் பொதுச்சமூகம்.
பெண் பிள்ளைகளை பொத்தி பொத்தி வளர்க்கும் எந்தப் பெற்றோரும் தங்களது மகன்களிடம் பெண்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என கற்றுத்தருவதில்லை. தவறு செய்தால் சமூகத்தில் கிடைக்கும் மரியாதை என்ன என்பதை சொல்வதில்லை. குற்றம் செய்தால் காவல்துறை, நீதிமன்றம் எப்படி நடத்தும் எனச்சொல்லி தருவதில்லை.
காவல்துறை, நீதிமன்றங்களும் சிறார் குற்றவாளிகளை மேம்போக்காக கையாள்கின்றன. அதற்கு அவர்கள் சட்டப்பிரிவுகளை காரணம் காட்டுகிறார்கள். அது தெரியாமல் தவறு செய்பவர்களுக்கு. தெரிந்தே தவறு செய்யும் பசங்களுக்கு?
போக்சோ சட்டத்தின்படி சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என வேலூரில் காவல்துறை பெண் அதிகாரிகளுக்கு, காவலர்களுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது மாநில மனித உரிமை ஆணையம். போக்சோ ஆக்ட்டிலேயே இப்படி என்றால் மற்றவற்றில் இந்த காவல்துறை எப்படி நடந்துக்கொள்ளும் எனப்பாருங்கள்.
இவர்களா, சின்ன பசங்க?
சின்ன பசங்க சார், வாழ்க்கை போய்டும் என காவல்நிலையங்களில் நடக்கும் கட்டபஞ்சாயத்துகளும், பேரங்களும், பணம் மற்றும் அதிகாரம் இந்த சின்னப்பசங்களை கொள்ளை, கொலை, பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பவைக்கிறது. அதன்பின் அவர்களுக்கு அதிக தைரியம் வருகிறது. சின்ன குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அதன்பின் பெரிய குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். நேர்மையான, மனிதாபிமானம் கொண்ட காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்துக்கு அனுப்பினால், இவர்களை காப்பாற்றவே சில வழக்கறிஞர்கள் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் உள்ளார்கள்.
இப்படி ஒவ்வொரு இடத்திலும் குற்றவாளிகளை காப்பாற்ற, தவறுகளை நார்மலைஸ் செய்ய பலரும் இருக்கிறார்கள். இதனால் தான் தவறுகளை தடுக்கமுடிவதில்லை. தவறு செய்யாத மனிதன் எங்கும் இல்லை. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதேயில்லை. இதற்கு நாம் ஒவ்வொருவருக்கும் பெரும் பங்குள்ளது.
— ராஜ்பிரியன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.