முத்திரை பதித்த முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி !
இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்பதற்கு பல்வேறு துறைகள் இருந்தாலும் அவற்றில் அடிப்படையான துறை பள்ளிக் கல்வித்துறை. இந்திய மாநிலங்களிலேயே கல்வித்துறையை, பள்ளிக் கல்வித் துறை என்றும் உயர்க் கல்வித்துறை என்றும் இரண்டாக வகுத்து இரு துறைகளை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்.
இடைநிற்றலைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டம்; கலைத் திருவிழா, அறிவியல் திருவிழா, அயல் நாடுகளுக்குச் சிறந்த மாணவர்களை அழைத்துச் செல்கின்ற திட்டம்; பெண் கல்வி வளர்ச்சிக்குப் புதுமைப்பெண் திட்டம்; திறன் மேம்பாட்டிற்கு நான் முதல்வன் திட்டம்; கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் தமிழக பள்ளிக்கல்வித்துறையை பல மாநிலங்கள் பின்பற்றும் அளவிற்கு வளர்த்திருக்கிறது. மாணவர் சேர்க்கை விகிதம் GER என்று சொல்லப்படுகின்ற பள்ளியில் தொடர்ந்து பயிலும் மாணவர் எண்ணிக்கை சதவீதத்திலும் அடிப்படையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இத்தகைய பின்னணியில்தான் பள்ளிக் கல்வித்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்டத்தின் கழக செயலாளரும் திருவெறும்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முனைவர் பட்ட ஆய்வை முடித்திருக்கிறார்.
“அரசு பள்ளியில் கற்றல் கற்பித்தல் திறன் மேம்பாட்டில் உடற்கல்வியின் பங்களிப்பு – இயந்திரக் கற்றல் வழி” என்ற தலைப்பில், அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி சிபிஎஸ்சி, பள்ளி உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளி மாணவர்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி அவருடைய ஆய்வில் ஒன்பது வகையான மேம்பாட்டு திறன்களுக்கான கூறுகளை முன்மொழிந்திருக்கிறார்.
திருச்சி தேசியக் கல்லூரி உடற்கல்வியியல் துறையின் கீழ் அவர் மேற்கொண்ட முனைவர் பட்டத்திற்கான பொதுவாய்மொழித் தேர்வை தமிழருடைய பண்பாட்டு திருவிழாவாக மாற்றி அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார். பொதுவாக ஒருவர் தன் வாய்மொழி தேர்வில் தனது ஆய்வைச் சமர்ப்பிக்கின்ற பொழுது, ஆய்வினுடைய தலைப்பு ஆய்வின் நோக்கம், ஆய்வின் வரையறை மற்றும் அதனுடைய விளக்கம் சொல்லித் தொடங்கி முழுமையாக முடிப்பதற்கு தடுமாறி நிற்பர், நெறியாளர் உதவி செய்யும் நிலை இருக்கும். ஏறத்தாழ 80-க்கும் மேற்பட்ட ஸ்லைடுகள் கணினி மூலம் ppt அடிப்படையில் ஆய்வுத் தகவல்களை பார்க்காமலேயே தனது ஆங்கில உரையில் வெளிப்படுத்திய விதமும்; தெளிந்த நிலையில் எல்லோருக்கும் புரிகின்ற ஆங்கிலத்தில் சரளமாக இனிமையாக எடுத்துரைத்த பாங்கும் அத்தனை பேரையும் வியப்பில் ஆழ்ந்தியது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பேராசிரியர்கள் துறைத் தலைவர்கள் புலத் தலைவர்கள், ஆய்வார்கள் உடற் கல்வித்துறை மாணவர்கள் என பல துறை சார்ந்தவர்களும் பங்கேற்ற அந்த வாய்மொழித் தேர்வில் தன்னுடைய ஆய்வை மிகத் திறம்பட எடுத்துரைத்ததோடு, பார்வையாளர்களிடமிருந்து எழுப்பப்பட்ட கேள்விகளை சாதுர்யமாக எதிர்கொண்டு சரளமான பதிலையும் பதிவு செய்தார்.
இதன்வழியே,“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”, “அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” ஆகிய புறநானூற்று வரிகளை மெய்ப்பித்து காட்டியிருக்கிறார்.
விளையாட்டுக் கல்வி என்னும் உடற்கல்வித் துறையால் மாணவர்களுடைய கற்றல் திறன் திறன் மேம்பாடு வளர்ச்சி பெரும் பாங்கினை நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், ஆங்கிலத்தில் உள்ள ஆய்வேட்டினைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால் அடுத்தடுத்து வரும் தலைமுறைகள் விளையாட்டுக் கல்வி, உடற்கல்வி மீதான பார்வை சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
போலி ஆசிரியர்களையும், போலி பட்டம் பெற்றவர்களையும் கொண்டு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேசியக் கல்விக்கொள்கையை வகுத்துக் கொண்டிருக்கும் அவலநிலைக்கு மத்தியில், பள்ளிக்கல்வித்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் ஒருவர் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருப்பதோடு, கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், சமூகவியல் அறிஞர்கள், ஊடகத்துறை நண்பர்கள், என்ஐடி, அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அறிவுசார் அறிஞர்கள் முன்னிலையில் தனது முனைவர் பட்ட பொது வாய்மொழி தேர்வை எதிர்கொண்டிருக்கிறார் என்பது இங்கே அழுத்தமாக பதிவு செய்ய வேண்டியதாகிறது.
கல்வி என்பது சமூக மாற்றத்தின் மிகப்பெரிய இயக்கம் என்பதை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் நிறுவியிருப்பதோடு, தமிழ்நாட்டின் மாண்பை மெருகேற்றியிருக்கிறார்.
கல்வியை எந்தச் சூழலிலும் எவர் வேண்டுமானாலும் கற்று மேல்நிலைக்கு வர முடியும் வரலாம் என்பதற்கான அடையாளமாக மட்டுமின்றி; எத்தகைய தடைகளும் வஞ்சித்தலும் வடக்கே இருந்து வந்தாலும் அதையெல்லாம் தவிர்த்து, உடைத்து நாம் தனித்துவத்தோடு தமிழ் மொழிபோல நாம் எழுந்து நிற்க வேண்டும் என்ற உந்துதலை தந்திருக்கிறது. இதுதான் திராவிட மாடல் என்பதற்கான இலக்கணத்தையும் வகுத்தளித்திருக்கிறது.
சின்ன சின்ன தோல்விகளைகூட எதிர்கொள்ள முடியாமல் எதிர்மறை எண்ணங்களோடு தற்கொலை முடிவுகளை நாடும் Gen Z தலைமுறை காலத்தில், கல்வி புலத்தில் கருத்தூன்றி பயின்றால் சாமானியனும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தமிழகத்தில் திராவிடம் சாதித்தது என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையிலும், நூற்றாண்டு கால பெருமை கொண்ட சுயமரியாதை இயக்கத்தின் தன்னிகரற்ற களப்பணியின் அறுவடையாகவும் திராவிட மாடலின் அடையாளங்களுள் ஒன்றாகவும் அமைந்திருக்கிறது, அமைச்சரின் முனைவர் பட்ட ஆய்வு.
பெரும்பாலும் மக்களின் எண்ணங்களில் அரசியல்வாதிகள் எம்.எல்.ஏ.க்கள் படிப்பு வாசனையற்றவர்கள் என்னும் நிலை மாறி, தற்போதைய திராவிட மாடல் அரசில் இளங்கலை, முதுகலை, மருத்துவம் படித்தவர்கள் எம்.எல்.ஏ.க்களாக, அமைச்சராக வலம் வருகிறார்கள். குறிப்பாக, திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்களாக திகழ்கிறார்கள். கல்வியாலும், அறிவாலும் மேம்பட்டவர்களை கொண்ட அவையாக, தமிழக சட்டமன்ற பேரவை மாறியிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் என்ற முன்மாதிரி முத்திரையை பதித்திருக்கிறது.
— ஆநிறைச்செல்வன்










Comments are closed, but trackbacks and pingbacks are open.