வேர்களைப் பலப்படுத்தி உங்களை மெருகேற்றுங்கள்!
எண்ணத்தை இயக்க இயற்றமிழாய்!
உள்ளத்தை உருக்க இசைத்தமிழாய்!
நல்வழிப்படுத்த நாடகத்தமிழாய் எழுந்தவளே!
முன்னை மொழிகளிலே மூத்தவளே! முக்கனியே! மூவேந்தர் மகளே!
உன்னை வணங்குகிறேன்! உயிர்த்தமிழே நீ வாழ்க!
வெள்ளத்தால் அழியாது;
வெந்தழலால் வேகாது;
வேந்த ராலும் கொள்ளத்தான் இயலாது;
கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது;
கள்ளத்தார் எவராலும் களவாட முடியாது!”
என்கிற விவேகசிந்தாமணியின் பாடல் வரிகளுக்குப் பொன்மணியாம் அணிபூட்டி மணப்பாறையில் நடுவம் கொண்டு, கல்வி வழி மனிதம் வளர்க்கிற சௌமா பப்ளிக் பள்ளியின் பதிமூன்றாவது ஆண்டு விழா அரங்கில் நின்று பேசுவதை என் வாழ்நாளின் பெருமிதங்களுள் ஒன்றாகக் கருதுகிறேன்.
கல்வியின் பணி என்பது மானுட வளர்சிக்கான படிக்கட்டுகளாக அமைய வேண்டும் என்கிற வங்கத்துக் கவிஞன் தாகூரின் கூற்றுக்கிணங்க கல்விப்பணியில் தம்மை கரைத்துக்கொண்ட தலைமகன், பொய்கையில் குளிர்ந்து பூக்களில் மணம் வீசி, புல்லாங்குழலில் இசையாகும் காற்றுபோல குற்றாலத்துக் கொட்டிடும் அருவியென அன்பையும் ஆற்றலையும் கொட்டுகிற… அப்பா என நான் உரிமையோடு அழைக்கிற தகுதியை அடியேனுக்கு அருளி இருக்கிற போற்றுதலுக்குரிய, அரிமா சங்கங்களின் மேனாள் ஆளுநர், சௌமா கல்விக் குழுமங்களின் தாளாளர் MJF Lion சௌமா இராஜரெத்தினம் அவர்களே!
நீலவானத்துக் குளிர்மையை, இலைகளில் பரந்த பசுமையை இதயத்திற்குள் பொதிந்த போற்றுதலுக்குரிய சௌமா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் திருமதி மகேஸ்வரி இராஜரெத்தினம் அவர்களே!
கடந்த காலத்தைப் பாடமாக்கி, நிகழ்காலத்தைப் பார்வையிட்டு, எதிர்காலத்திற்குப் பாதை சமைக்கிற ஆற்றலோடு தன்னை மகரந்தப்படுத்தி உயர்ந்து நிற்கிற விழாவின் சிறப்பு விருந்தினர் பெருமதிப்பிற்குரிய காவல்துறைக் துணைக்கண்காணிப்பாளர் திருமிகு க.வி. காவியா அவர்களே!
சௌமா பப்ளிக் பள்ளி என்னும் போதிமர நிழலில் கல்வியறிவு பெறும் வளர்தலைமுறைச் செல்வங்கள், கல்வி மட்டுமல்லாது அறிவு வளர்ச்சி, ஆளுமைப்பண்பு, தலைமைத்துவத்திறன் என முழு வளர்ச்சிபெற எண்ணற்ற முaற்சிகளை முன்னெடுப்புக்கிற போற்றுதலுக்குரிய பள்ளியின் முதல்வர் அவர்களே!
சிந்தனைத்திறனுள்ள மூளையும், செயல்படுவதற்கான கரங்களும், உந்தித் தள்ளுவதற்கான இதயமும் கொண்டு இந்த வளாகத்தில் உருவாக்குகிற மாணவர்களைச் சிற்பிகளாக உருவாக்குகிற ஆசிரியர் சிற்பிகளே! அலுவலக அன்பர்களே!
பாசத்துக்குரிய பெற்றோர்களே!
மாணவத் தம்பி தங்கையரே!
பெருமதிப்பிற்குரிய மணப்பாறையின் அறிவுடைய பெருமக்களே!
அரிமா சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் தோழமைகளே!
பத்திரிகையாளர்களே!
உங்கள் அனைவரையும் என் தமிழால் ஆராதித்து, தலையால் வணங்கி, எனது உரையைத் தொடங்குகிறேன்.
இந்த ஆண்டு விழா அரங்கில் நின்று பேசுவது என் வாழ்நாளின் பெருமிதங்களுள் ஒன்று உரையின் தொடக்கத்தில் கூறினேன். வெறும் கரவொலி பெறவேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது.
* சௌமா பப்ளிக் பள்ளி இது பெயரல்ல… காகிதத்தையும் ஆயுதமாக்க முடியும்; எழுதுகோலையும் நெம்புகோலாக்க முடியும் என தமிழ்ச் சமுதாயத்திற்கு உணர்த்திய தலைமக்களை தம் மண்ணிற்கு அழைத்து விருதளித்துப் பெருமைப்படுத்துகிற சௌமா இராஜரெத்தினம் எனும் அட்சய பாத்திரம் நடத்துகிற அதியனின் நெல்லிக்கனி.
* சௌமா பப்ளிக் பள்ளி இது பெயரல்ல… தான் எடுத்து வைக்கிற கருத்துக்களைப் பசுமரத்தாணி போல மாணவர்களின் இதயத்தில் பதியம் போட வைக்கிற ஆற்றலும் ஆளுமையும் கொண்ட ஆற்றலாளர்களை ஆசிரியர்களாக் கொண்ட கலைக்கூடம்.
* சௌமா பப்ளிக் பள்ளி இது பெயரல்ல… சமூகப் பற்றுடையவர்களாகப் பண்பட்டு, அறிவின்வழி, ஆய்வின்வழி, திறனின் வழி பலப்பட்டு உயரும் மாணவர்களை உருவாக்கும் அறிவுச் சுரங்கம்.
எத்தனையோ பள்ளிகள் நம்மைச் சுற்றி இருந்தாலும் இந்தப்பள்ளியில் என் குழந்தையின் வேர் பலப்படும் என உணர்ந்து, இந்தப்பள்ளியைத் தெரிவு செய்து தம் குழந்தைகளைச் சேர்த்து அவர்களின் வளர்ச்சிக்கு பலம் சேர்த்திருக்கிற பெற்றோரை வணங்கி மகிழ்கிறேன்.
குழந்தைகளும், வளர் தலைமுறையினருமான மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அருமையான சுவைஞர்கள் நிறைந்த அரங்கம் இது. ஆண்டறிக்கையும், உரைகளும், பரிசளிப்புகளும் நிறைவு பெற்று இரண்டு மணிநேரம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிற விழா. இந்தச் சூழலில் பேச்சாளரைத் தம் கவனிப்பால் உற்சாகப்படுத்துகிற சுவைஞர்கள் நஜிறைந்த அரங்கம் என்ற அடிப்படையில் மகிழ்ந்தும், நெகிழ்ந்தும் போகிறேன்.
- எனக்குக் குழந்தைகளைப் பிடிக்கும் – காரணம்
உங்கள் உலகம் வித்தியாசமானது.
- எனக்கு வளர் தலைமுறையினரைப் பிடிக்கும் – காரணம்
உங்கள் உலகம் புதுமைகளால் நிறைந்தது.
- எனக்கு இளைஞர்களைப் பிடிக்கும் – காரணம்
அவர்கள் உலகம் எதிர்பார்ப்புகளால் நிறைந்தது.
ஒரு தமிழ் ஆசிரியரை ஆங்கிலவழிப்பள்ளியின் ஆண்டு விழாவுக்கு அழைத்திருக்கிறீர்கள். நான் என்ன பேசுவது என்று எண்ணியபோது எனக்கு சில தமிழ் எழுத்துக்கள் துணைக்கு வந்தன. அந்த எழுத்துக்கள் இவைகள்தாம். அ -ஆ – இ – ஈ
- அ – அறிதலை அதிகமாக்கு…
- ஆ – ஆற்றலை அடையாளப்படுத்து…
- இ – இன்னும் அதிகமாக இயங்கு…
- ஈ – ஈடுபாட்டுடன் வாய்ப்புகள் தேடு…

அறிதலை அதிகமாக்கு…
தேடித் தேடிப் படிக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர், நம்மைச்சுற்றியுள்ள சமூகம் சொல்வதை உற்று உற்றுக் கேட்க வேண்டும். அப்போதாம் நம் அறிவும், ஞானமும் உயரும்.அதற்குத் துணையாக ஒரு நிகழ்வைக் குறிப்பிட விரும்புகிறேன்.
“அய்யா வணக்கம். அருகில் இருக்கும் நகரத்திலிருந்து வருகிறேன்” என்றார் ஞானியின் முன் நின்ற அவர். “மிக்க மகிழ்ச்சி!” என்று கூறியபடி முகமலர்ச்சியுடன் வரவேற்றார் ஞானி.“நானும் பல நூல்களைப் படித்து விட்டேன். எல்லாமும் எனக்குத் தெரிகிறது. என்னிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் தினமும் என்னைத் தேடி வருகிறார்கள்.இன்னும் பெரிய அறிவாளியாக மாற வேண்டுமென விரும்புகிறேன். இன்னும் எதையெல்லாம் படிக்க வேண்டும்? எனக் கேட்கவே உங்கள் முன்னால் நிற்கிறேன்”
“நிச்சயமாகச் சொல்கிறேன். அதற்குமுன் தேநீர் சாப்பிடலாமா?” “ஓ! சாப்பிடலாமே!” தேநீர் கூஜா மற்றும் இரண்டு கோப்பைகள் அவர்களுக்கு முன் வைக்கப்படுகின்றன. தேநீர் நிரப்பப்பட்டிருந்த கூஜாவைக் கையிலெடுத்த ஞானி கோப்பையில் ஊற்றத் தொடங்கினார். கால் கோப்பை, அரைக்கோப்பை எனக்கடந்து, நிரம்பும் நிலைக்கு வந்தது. ஞானி நிறுத்தவேயில்லை. ஊற்றிக்கொண்டே இருந்தார். கோப்பை நிரம்பி வழியத் தொடங்கியது. ஞானி நிறுத்தவேயில்லை. அப்போதும் ஊற்றிக் கொண்டேயிருந்தார்.இதைக் கண்ட ஆசிரியர், “கோப்பைதான் நிரம்பிவிட்டதே. அப்புறமும் ஏன் ஊற்றிக்கொண்டே இருக்கிறீர்கள்?”
ஞானி சொன்னார் : “நீங்கள் நிரம்பிய கோப்பையாக இருக்கிறீர்கள். நான் இப்போது என்ன சொன்னாலும் உங்களுக்குள் உள்ளே போகாது. எப்போதுமேநாம் கற்றுக்கொள்ளத் தகுதியுடையவனாக இருக்க வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டுமென்கிற நோக்கத்துடன் மற்றவரை அணுக வேண்டும் அப்படிப்பட்டவராக வாருங்கள்… நிறைய சொல்கிறேன் என்றாராம்.
வெற்றுக்கோப்பையாக இருக்கக் கூடாது. வழிந்தோடும் கோப்பையாகவும் இருக்கக்கூடாது. கற்றுக்கொள்ளும் மனநிலையுடன் தேடல் நிறைந்த மனதுடையவராக நாம் நம்மைப் பண்படுத்துவதே அறிதலை அதிகமாக்கும். அதுவே ஒளியாகத் துணைவரும்.
ஆற்றலை அடையாளப்படுத்து…
இரண்டாவது உங்களால் அடையாளம் காணப்பட்ட உங்களின் ஆற்றலை சரியான நேரத்தில் அடையாளப்படுத்துவது ஆகும். இந்த பிரபஞ்ச வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துக்களில் பதியப்பெற்றுள்ள ஒரு மாவீரனின் வாழ்க்கை நிகழ்வு எனது கருத்தை உங்களுக்குள் பதியமிடத் துணையாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
அது மசிடோனியாவின் விளையாட்டு மைதானம். சுட்டெரிக்கும் சூரியக்கதிரிலும் மக்கள் வெள்ளத்தால் அந்த மைதானம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. எவராலும் அடக்க முடியாத தெஸ்ஸாலி நாட்டைச் சேர்ந்த பியூசிபேலஸ் என்னும் பெயருடைய குதிரை யாரையும் நெருங்கவிடாமல் தனது பலத்தை நிரூபித்துக் கொண்டே இருந்ததது இதை அடங்கப்போகும் வீரன் யார் என்கிற ஆவலுடன் மன்னர் பிலிப் மற்றும் அவர் வீரர்களும் பார்த்துக் கொண்டிருந்தனர். மன்னனின் அருகில் அமர்ந்திருந்த சிறுவனான இளவரசன் அலெக்சாண்டர் தனது தந்தையிடம் அந்தக் குதிரையைத் தான் அடக்கப் போகிறேன் என்றார். இந்தக் குதிரையை மட்டும் நீ அடக்கி விட்டால் அதை உனக்கே பரிசாகத் தருகிறேன் எனச் சொல்லிய மன்னர், தம் வீரர்கள் பக்கம் திரும்பி எச்சரிக்கையாக இருந்து, தேவைப்பட்டால் அலெக்சாண்டரை பாதுகாக்கும்படி கூறி மகனை மைதானத்திற்குள் அனுப்பினார்.
மைதானத்தில் இறங்கிய இளவரசன் அலெக்சாண்டர் குதிரையை நோட்டமிட்டான். குதிரையின் பளபளக்கும் சருமத்தில் விரல்களை மெதுவாக ஓடவிட்டான். வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது அதனை அமைதியாக சுற்றிவந்து, பின் மெதுவாக தொட்டுத் தொட்டு மெல்ல எதிர் திசையில் திருப்பினான் சட்டென்று குதிரையின் மீது பாய்ந்து அமர்ந்தான். மைதானம் முழுவதையும் குதிரையுடன் ஒருமுறை வலம் வர, கரவொலி வானைப் பிளந்தது. மன்னனருக்கு பேரானந்தமும் கூடவே வியப்பும் தொற்றிக் கொண்டன. அவர் உறுதியளித்தபடி பியூசிபேலஸை இளவரசனுக்குப் பரிசளித்தார் மெதுவாக மகனிடம் கேட்டார் எப்படி உன்னால் முடிந்தது?
சட்டென்று சொன்னார் அலெக்சாண்டர் “அப்பா அந்தக் குதிரையின் கண்களில் பட்ட சூரியக் கதிர்கள் அதனை மிரள வைத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். எனவே நான் அதனை அதன் எதிர்திசையில் திரும்பி நிறுத்தினேன் அது அமைதியாகி விட்டது என்று.
அன்புத் தம்பிகளே! தங்கைகளே! இந்தியாவின் பலம் என உலகம் வியக்கும் இளையோர் வளம் நீங்கள். உங்களின் ஆற்றலை பெற்றோரிடம், ஆசிரியர்களிடம் நீங்கள் வெளிப்படுத்தும்போது அது நிச்சயம் உங்களுக்கான அடையாளமாக மாறும். சங்கடங்களில் சலனம் ஏதுமின்றி, சரியான திசையில் பயணிப்பதே உங்கள் ஆற்றலை அடுத்திருப்பவர்கள்முன் அடையாளப்படுத்தும். அப்படி அடையாளப்படுத்திய பெருமக்களைத்தான் நாம் சாதனையாளர்கள், அறிஞர்கள், தத்துவ ஞானிகள் என்றெல்லாம் வரலாற்றின் பக்கங்களில் குறித்து வைத்துள்ளோம்.
இனிமையாக ஏற்றுக்கொண்டால் சுமை தெரியாது…
அவன் ஒரு திடகாத்திரமான இளைஞர். ஒரு கோணிப்பை நிறைய கற்களை அள்ளிப் போட்டுக்கட்டி, தன் தோளில் சுமந்தபடி தினம்தோறும் ஊரைச் சுற்றி வந்தான். பார்த்தவர்கள் அனைவரும் கேலியும் கிண்டலும் செய்தனர். டென்சிங்கின் மனைவிக்கும் அவனது இந்தச் செயல் பிடிக்காததால், அந்த மூட்டையை இரவோடு இரவாக அப்புறப்படுத்த நினைத்தாள்.ஆனால், அவளால் அதை அசைக்கக்கூட முடியவில்லை.
‘‘இத்தனை கனமான சுமையைச் சுமந்துகொண்டு எப்படி உங்களால் சிரிக்க முடிகிறது?’’ என மறுநாள் தன் கணவனைக் கேட்டாள். ‘‘இனிமையாக ஏற்றுக்கொண்டால் சுமை தெரியாது!’’ என்றான் டென்சிங். ‘‘சுமை தெரியவில்லை, சரி… மற்றவர்களின் கேலியும் கிண்டலும் கூடவா உங்களை வேதனைக்குள்ளாக்கவில்லை?’’ என மீண்டும் கேட்டாள். ‘‘அவற்றையும் நான் இனிமையாகவே ஏற்றுக் கொள்கிறேன்’’ என்றான். இமயமலை அடிவாரத்தில் இருக்கும் கும்சிங் கிராமத்தில், ஏழ்மையான குடும்பத்தில் பதினோராவது குழந்தையான அவன், யாக் எருமைகளை மேய்த்துக்கொண்டு இருந்த சமயத்தில் மலையின் உயரம் கிளர்ச்சி ஊட்டியது. மலை ஏறும் தனது ஆசையைத் தாயிடம் சொன்னான்.
‘‘தம்பி! நம்மைப் போன்றவர்கள் மலை ஏறும் வீரனாக அல்ல; ஒரு சுமை தூக்கியாகத்தானப்பா போக முடியும்’’ என்றாள். கோபத்தில், வீட்டைவிட்டு வெளியேறி, நேபாளத்தில் சுமை தூக்கியாக வேலையில் சேர முயன்றான். ஆனால், அவனால் அதிக சுமையைத் தூக்க முடியவில்லை. எனவே, வேலை கிடைக்காத வருத்தத்துடன் அவன் திரும்பிக்கொண்டு இருந்தபோது, தலாய்லாமாவைச் சந்தித்து தன் ஏக்கத்தைச் சொன்னான்.
‘இனிமையாக ஏற்றுக்கொண்டால் எந்தச் சுமையும் தெரியாது!’’ என்றார் அவர். அந்த மந்திரச் சொல்லை மனதில் ஏற்றிக்கொண்டு, தன் உடலை உறுதி செய்யும் விதமாகத்தான் கோணிப்பை நிறையக் கற்களை அள்ளிப் போட்டுக்கொண்டு மகிழ்ச்சியாக சுமக்கத் தொடங்கினான். அவனது உடல் இரும்பு போல் உருமறியது. மலை ஏறும் குழுவில் சுமைதூக்கியாக,. 1937ஆம் ஆண்டு வேலையும் கிடைத்தது. மலையின் மீது குறைவான உணவே கிடைக்கும் என்பதால், பசியுடன் அதிக எடையைச் சுமக்க வேண்டும்.
குளிரும் பனிக்காற்றும் உடம்பை ஊசி போல் குத்தும். பள்ளத்தாக்குகளைக் கடக்கும்போது, பாலம் கட்ட வேண்டும். மலைச்சரிவில் ஏறும்போது கோடரிகளால் பாறைகளை வெட்டி, படி அமைக்க வேண்டும். மிகக் குறைவான நேரமே தூங்க முடியும். பனிப் புயலும், பனிப் பாறைகள் விழுவதும் மரண பயம் தரும். ஆனால், இத்தனை சிரமங்களையும் மீறி, மலைகளின் மீது சர்வ சாதாரணமாக, புன்னகை மாறாமல் நடைபோட்டான்.
உயரம் செல்லச் செல்ல, மற்றவர்கள் சோர்வடைந்துவிட, இவன் மட்டும் உற்சாகமாக தனது இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே இருந்தான். நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் கில்லாரியுடன் ஏழாவது முயற்சியாக எவெரஸ்ட் நோக்கிக் கிளம்பினான். கடுமையான பயணத்துக்குப் பின் 1953 ஆம் வருடம் மே, 29 ஆம் நாள் பகல் 11.30 மணிக்கு எவெரஸ்ட் சிகரத்தின் உச்சியில் நின்றார்கள். முறையான நிறுவனக்கல்வி இல்லாத, வசதியில்லாத, எவ்விதப் பயிற்சியும் இல்லாத குக்கிராமத்தில் பிறந்து உலக வரலாற்றில் இடம்பெற்ற அவனுடைய பெயர் டென்சிங், தன் மகள் ஆசையுடன் கொடுத்தனுப்பிய. சின்னஞ்சிறு பென்சிலை அங்கே நட்டுவைத்த உரக்கக் கத்தினான் “இனிமையாக ஏற்றுக்கொண்டால் சுமை தெரியாது!” இது அவனுக்கு இந்த உலகம் வழங்கிய மந்திரச்சொல். அதை நாமும் நம் வசப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஈடுபாட்டுடன் வாய்ப்புகள் தேடு…
நிறைவாக நான் கூறவருவது ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு. வாய்ப்புகளைத் தேடுவதில் கவனம் இருக்க வேண்டும். வாசலில் நிற்கும் வாய்ப்புகளை வீட்டிற்குள் வரவழைப்பது அவரவர் சாமர்த்தியமே. வாய்ப்புகளைத் தேடித் தேடி, கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி வெற்றியடைந்தவர்களுக்கு இந்த மேடையையே உங்களுக்குச் சான்றாகச் சொல்வேன். ஆம் இளைய வயதிலேயே தம் பெற்றோரின் வழிகாட்டுதலில், தம் கல்வி நிறுவனங்கள் வழங்கிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி ஒளிர்ந்து, போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு, அதில் வென்று துணிச்சலான காவல்துறைப்பணியில் தம்மை இணைத்து நமக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்கிற இன்றைய சிறப்பு விருந்தினர் துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர் திருமிகு க.வி.காவியா அவர்கள் உங்களுக்கான முன்மாதிரி.
பள்ளியின் ஒவ்வொரு விழாவிற்கும் அழைத்து வரப்படுகிற ஒவ்வொரு ஆளுமைகளும் எந்நேரமும் முன்னேறத் துடிக்கிற இதயம் கொண்டவர்களே. என்னை எடுத்தக் கொள்ளுங்கள். காகிதமும் ஆயுதமே! எழுதுகோலும் நெம்புகோலே! மனிதம் மாண்புற வற்றாமல் சுரக்கட்டும் நம் எழுத்து! என்கிற எண்ணத்தோடு தொடர்ந்து இயங்கி என்னை அடையாளப்படுத்தியதாலேயே அரிமா சங்கங்களின் மேனாள் கவர்னரும், இந்தப் பள்ளியின் தாளாளருமான சௌமா இராஜரெத்தினம் அவர்களும், துணைக் கண்காணிப்பாளர் அவர்களும் அமர்ந்திருக்கிற மேடையில் நின்று உரையாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
உழையுங்கள். எந்நேரமும் முன்னேற உழையுங்கள். கிளைகளின் பளபளப்பைவிட வேர்களின் பலத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். வேர்களைப் பலப்படுத்தி உங்களை மெருகேற்றுங்கள் எனச் சொல்லி,
‘தோன்றுக புகழோ’ டென்று
சொன்னது தமிழ்நூல் அன்று!
‘ஆன்றவன் அறிஞன் ’ என்று
அனைவரும் போற்றுமாறும்,
ஈன்றவர்கள் மகிழு மாறும்
இனியதோர் வாழ்வைக் கேட்டேன்;
சான்றென நிற்கும் தெய்வம்
இனிமேலும் தருதல் வேண்டும்!
என்பார் கவிஞர் கண்ணதாசன். ஆம் புகழோடு தோன்றி, ஆன்ற அறிஞரென அனைவரும் போற்றுமாறும், ஈன்றவர்கள் மகிழுமாறும் இனியதோர் வாழ்வை வாழும் போற்றுதலுக்குரிய எங்கள் அப்பா சைளமா இராஜரெத்தினம் அவர்களை வணங்கி,
அறிதலை அதிகமாக்க… ஆற்றலை அடையாளப்படுத்த… இனிமையாக சுமைகளையம் கடந்து… ஈடுபாட்டுடன் உழைத்து… எழ… உயரந்தொட… உங்களை வாழ்த்துகிறேன்.
— முனைவர் ஜா.சலேத்








Comments are closed, but trackbacks and pingbacks are open.