முனைவர் தொல்.திருமாவளவனின் அரசியலும், அமைப்பாதலும், அங்கீகாரமும்!
முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மாபெரும் சிந்தனையாளர், பேச்சாளர், எழுத்தாளர்,பேரறிவாளர், அவரது எழுத்திலும், பேச்சிலும், கருத்திலும், செயலிலும் சாதி ஒழிப்பையும் சமத்துவத்தையும் காணலாம். முனைவர் தொல்.திருமாவளவன் தனது வாழ்நாள் முழுவதும் இம்மக்களுக்காகப் போராட்ட வீரராகவே, போராளியாகவே வாழ்கின்றார்; தன்னலம் அற்றவராக திகழ்கின்றார்; தமிழினத்திற்குக் கிடைத்த மாபெரும் தலைவராகப் போற்றப்படுகின்றார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகில் எங்கெங்கெல்லாம் அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் நடக்கின்றதோ அங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களுக்குத் துணைநின்று, அவர்களை மேம்படுத்தி வழிநடத்திச் செல்லும் படைத்தளபதியாகவே பயணிக்கின்றார்.
அரசியல் பயணம்
1983-இல் நடந்த ஈழத்தமிழர்களுக்கான மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்ட முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தனது முதல் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். ஈழ விடுதலை ஆதரவு மாநாடு இவரது தலைமையில் நடைபெற்றது.1984இல் ’விடுதலைப்புலி’ என்ற ஈழத்தமிழர் ஆதரவு கையெழுத்துப் பத்திரிக்கையை நடத்தினார். 1986இல் இந்திய அமைதிப்படையின் ஈழ அத்துமீறலைக் கண்டித்து மாணவர் கூட்டமைப்பை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினார். 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ‘இந்திய தலித் பேந்தர்ஸ்’ அமைப்பின் மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் மலைச்சாமி உடல் நலக்குறைவால் இறந்ததும், 1990இல் அந்த அமைப்பின் மாநில அமைப்பாளராக முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் அமைப்பின் பெயரை இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்’ என பெயர் மாற்றி இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட என்ற சொல்லாடலை நீக்கி அமைப்பின் பெயரை விடுதலைச் சிறுத்தைகள்’ என மாற்றினார். அமைப்பிற்கான புதிய கொடியையும் அறிமுகப்படுத்தினார். கொடியில் நீலம், சிவப்பு, சரிபாதியாக இருக்க நடுவில் ஐந்து முனைகள் கொண்ட நட்சத்திரத்திரம் வைத்து
1. சாதி ஒழிப்பு 2. பெண் விடுதலை 3. தமிழ் தேசியம் 4. வர்க்கபேத ஒழிப்பு 5. ஏகாதிபத்திய எதிர்ப்பு என ஐந்து இலட்சினைகளை கொண்டதாக வடிவமைத்து அக்கொடியைப் பட்டித்தொட்டி எங்கும் பறக்கச்செய்தார்.
முனைவர் தொல்.திருமாவளவன் தனது வாழ்நாளை தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட விளிம்பு நிலை மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக அர்பணித்துக் கொண்டவர்.மக்களின் பல்வேறு உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்தியபோது காவல்துறையினர் கைது செய்தனர். அப்பொழுதுதான் அடங்கமறுவோம்! அத்துமீறுவோம்! திமிரிஎழுவோம்! திருப்பிஅடிப்போம்! போன்ற பல முழக்கங்கள் எழுச்சித்தமிழரால் எழுதப்பட்டது. தாமிரபரணி படுகொலை, பரமக்குடி துப்பாக்கி சூடு, சென்னகரம் பட்டி படுகொலை, திட்டக்குடி மற்றும் மேலவளவு படுகொலை போன்றவற்றைக் கண்டித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் என அரசு பணியில் இருந்து கொண்டே நடத்தினார். இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ்ப் பற்றாளர்களின் விருப்பபடி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு அதன் தலைவராக இருந்து ஈழப்போரை நிறுத்த வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கைக்காக சாகும் வரை தொடர் உண்ணா நிலை போராட்டம் அறிவித்து தொடர்ந்து நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அரசியல் களத்தில் பல்வேறு போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினார்.
அமைப்பாய்த் திரள்வோம்
முனைவர் தொல். திருமாவளவன் அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட, `அமைப்பாய்த் திரள்வோம்’ என்ற நூல் கட்சிக்கும் அப்பாற்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுபல்வேறு ஆய்வரங்கம் நடத்தப்பட்டு மிகுந்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.கொள்கை கோட்பாடில்லாதவர்கள் அரசியலுக்கு வரும் இக்காலகட்டத்தில் கொள்கையை முன்வைத்து எழுதப்பட்ட அமைப்பாய்த் திரள்வோம் எனும் நூலானது அமைப்பின் அவசியத்தைப் பற்றியும், அமைப்பின் நோக்கம், கொள்கை, கோட்பாடுகள் பற்றியும், அமைப்பினுள் எழும் சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றியும் விவரிக்கின்றது.
முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தமது கட்சியின் தமிழ்மண் மாத இதழில் ‘அமைப்பாய்த் திரள்வோம்’ என்னும் தலைப்பில் 58 மாதங்கள் தொடர்ந்து எழுதியுள்ளார். அது தான் பின்னர் அமைப்பாய்த் திரள்வோம் எனும் நூலாக வெளிவந்துள்ளது. இந்நூல் மொத்தம் 517 பக்கம், 58 கட்டுரைகளைக் கொண்டது. 2018 ஆம் ஆண்டு நக்கீரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.முனைவர் தொல்.திருமாளவன் அவர்கள் நூல் முன்னுரையில் கூறுகிறார், ‘இத்தொடர் இன்னும் முற்றுப்பெறவில்லை. தவிர்க்க இயலாத காரணங்களால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் தொடங்கி இன்னும் ஏராளம் தொடர்ந்து எழுத வேண்டியுள்ளது’ என்கிறார். தனி உதிரியாக இருக்கும் மக்களை விட அமைப்பாக திரளும் மக்களுக்கே அரசியல் வலிமை அதிகம். ஆகவே ஒரு கட்சியின் சுயநலனுக்காக அல்லது வெறும் வாக்குவங்கியாக மக்கள் திரளாமல் ஒரு அமைப்பாக மக்கள் திரளவேண்டும் என்பதே அந்நூலின் தத்துவமும் கோட்பாடும் ஆகும்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோர் கடந்த காலத்தில் தமது கொள்கையை எழுத்து, பேச்சு மற்றும் உரையாடல் மூலமாகவே மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தனர். அதன் தொடர்ச்சியாகவே அறிவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மக்களை விழிப்படையச் செய்யவும், அரசியல் ரீதியாக ஒடுக்கப்படும் மக்களை அமைப்பாகத் திரட்டவும் எழுத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்திருக்கிறார் என்பது வரவேற்கத்தக்கது. அவரது அரசியல் களப்போரின் கருத்தியல் ரீதியானஎழுத்துவடிவமே, அமைப்பாய்த் திரள்வோம் என்னும் நூலாகும்.முற்போக்கான தத்துவதை முன்வைக்கின்ற, கோட்பாட்டைப் பேசுகின்ற அரசியல் நூல்கள் வெளிவருவது அவசியமாகும். ஒவ்வொரு மனிதனின் செயலுக்குப் பின்னாலும் அறிந்தோ அறியாமலோ அவர்கள் உள்வாங்கியிருகின்ற கோட்பாடுகள்தான் முக்கிய காரணமாகக் காணப்படுகின்றது. அக்கோட்பாடுகள்தான் அவர்களை வழி நடத்துகின்றது. ஒருவன் சாதியவாதியாக, மதவாதியாக, சனாதனவாதியாக ஆணாதிக்கவாதியாக இருப்பதற்கான காரணம் அவர்கள் நம்பும் கோட்பாடே ஆகும். இத்தகைய பிற்போக்குத்தனமான கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்கி முற்போக்குச் சிந்தனையை முன்வைக்கின்றது அமைப்பாய்த்திரள்வோம் எனும் நூல்.
இன்றைக்கு நடைமுறையிலுள்ள சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளையும், அவற்றின் போக்குகளையும் அறிந்துக் கொள்ளவோ, ஆராய்ந்து பார்க்கவோ வாய்ப்பில்லாத, வலுவில்லாத ஒரு வர்க்கம்தான் உழைக்கும் வர்க்கம்! உற்பத்திக்கான ஆற்றலின் வடிவமாய், உடலுழைப்பின் வடிவமாய் விளங்குகிற பெரும்பான்மையான வெகுமக்களின் தொகுப்பே அத்தகைய உழைக்கும் வர்க்கமாகும்! அவ்வர்க்கத்தின் நலன்களைப் பாதுக்காத்திட அல்லது மீட்டெடுத்திடப் போராட வேண்டியது அவ்வர்க்கத்திற்கு இன்றியமையாததொரு தேவையாகிறது. இதைத்தான் இழப்பதற்கு அடிமைச்சங்கிலியைத் தவிர வேறெதுவுமில்லை; ஆனால் அடைவதற்கோர் பொன்னுலகம் இருக்கிறது என்கிறார் மாமேதை காரல் மார்க்ஸ். ஆம், இத்தகைய உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை மீட்டெடுக்க எத்தகைய அமைப்பு தேவை என்பதையே ’அமைப்பாய்த் திரள்வோம்’ எனும் நூலில் மிக விரிவாக ஆராய்கிறார்; அலசுகிறார்; அக்கரைச் செலுத்துகிறார்; ஆழ்ந்த கவலைக் கொள்கிறார்.
ஆம், வர்க்கப்போரில் அல்லது வர்க்கப்போரின்போது முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டியது, அப்போது நிலவும் முரண்பாடுகள்தாம். அதில் எது எது எக்காலத்தில் முன்னுக்குவரும் முரண்கள், அதை எங்ஙனம் கண்டறிவது, களைவது போன்றவற்றை மதிப்பிடுகிறார். அகநிலையிலும், புறநிலையிலும் நிலவுகின்ற முரண்பாடுகளைக் கண்டறிவதும், அவற்றில் மனிதன் விரும்பும் மாற்றத்திற்குரிய அடிப்படையான முரண்பாடுகளைக் கண்டறிவதும், அதிலும் குறிப்பாக இலக்கை நோக்கிய முரண்பாடுகளில், கூர்மைப்படுத்தி, தீர்வுகாண வேண்டிய முதன்மையான முரண்பாடுகளை அடையாளம் காண்பதும், மாற்றத்தை விரும்புவோருக்கான கடமையாகும்” என்கிறார்.
வர்க்க முரண்பாட்டில், பாட்டாளிகள் மக்களாக அணி திரட்டப்பட்டாலும், பாட்டாளி அல்லாத வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், பாட்டாளிகளின் அரசியலை ஏற்றுக் கொண்டு, பாட்டாளியாகவே உணர்ந்து, களப்பணியாற்ற முன்வந்தால், அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சனநாயக சக்திகளாவர். இதோடு அவர் நிற்கவில்லை. பாட்டாளிகளின் சமூக விடுதலையைப் பற்றியும் கவலைக் கொள்கிறார்; சாதிய முரண்பாட்டு தளத்தில் ஒடுக்கப்படும் சாதியைச் சார்ந்தவர்கள், சாதி ஒழிப்பில், சாதி ஆதிக்க ஒடுக்குமுறை எதிர்ப்பில் உடன்பாடு கொண்டு, ஒடுக்கப்படும் சாதியை சார்ந்தவர்களாகவே உணர்ந்து முழு ஈடுபாட்டோடு களப்பணியாற்றினால், அவர்கள் சாதி ஒழிப்புக்கான சனநாயக சக்திகளாவர் என்கிறார். இங்குதான் முனைவர் தொல்.திருமாவளவன் மற்ற நிகழ்கால சமூகசீர்த்திருத்த முன்னோடிகளிடமிருந்து வேறுபட்டு தனித்துவத்துடன் நிற்கின்றார். தலித் மக்கள் விடுதலையை தலித் மக்கள் மட்டுமே செய்து கொள்ளும் ஏற்பாடு அல்லது வேலை என்று தனிமைப்படுத்திடவிடாமல், இன்னும் பிற சாதி சார்ந்த தலித் அல்லாத மக்களும் இணைந்து களப்பணி ஆற்றுவதன் மூலம் தான் அது சாத்தியம் என்பதை இந்நூலில் பதிவுசெய்துள்ளார். ஆம், பொருளாதார விடுதலையும், சமூக விடுதலையும் வேறுவேறு அல்ல; இரண்டும் இரண்டு கரங்கள்; இரண்டு கரங்களும் இணைத்து தட்டினால்தான் ஓசைவரும் என்கிற மார்க்சீய நிலைப்பாட்டை நிறுவியுள்ளார். மாறாதது எதுவுமில்லை; எல்லாம் மாறிக் கொண்டேயிருக்கிறது என்பதைத் தவிர எல்லாம் மாறிக்கொண்டேயிருக்கிறது என்கிறது மார்க்சீயம். உலகில் அனைத்தும் இயங்கி கொண்டேதான் இருக்கின்றன. சில அசைந்து இயங்கும். சில அசையாமல் இயங்கும். சில உருவமும், வடிவமும் கொண்டு இயங்கும். சில உருவமில்லாமலும், வடிவமில்லாமலும் இயங்கும். இயங்காமலிருப்பது என்று ஒன்றுமில்லை.
பொருளாதாரம், அரசியல், சமூகம், பண்பாடு போன்ற வாழ்வியல் தளங்களில் களப்பணியாற்ற வேண்டியவர்களை, அரசுகளின் செயல்பாடுகளில் பாட்டாளி வர்க்க நலன் பாதிக்கப்படுகின்றபோது, அல்லது நசுக்கப்படுகின்றபோது ஆற்றவேண்டிய அரும்பணிகளை இந்நூலில் அள்ளி அள்ளி திகட்டாத அளவுக்கு ஊட்டியுள்ளார். முழுநேர களப்பணியாளர்களுக்கு மட்டுமல்ல, புரட்சிகர மாற்றத்தை இந்திய சமூகத்தில் விளைவித்திட விழையும் யாவருக்குமான அருமையான ஓர் கையேடு எது என்றால் அமைப்பாய்த் திரள்வோம் எனலாம். ஆம், உளவியல் ரீதியில், கேள்விகளை தாமே, தனது வாழ்வியல் கள அனுபவத்திலிருந்தெழுப்பி, அவற்றிக்கு நயமான விடைகளை தேடித்தேடித் தந்திருக்கிறார்.
சமத்துவம் என்பது அனைவருக்கும் சமமான சொத்து. சமமான பதவி. சமமான ஆற்றல். சமமான ஆயுள் என்று பொருளாகாது. வலியோர், எளியோர் என்றில்லாமல் ஒவ்வொருவரின் உணர்வுகளையும், கருத்துக்களையும் மதிப்பதில் சமமான அணுகுமுறையைக் கையாளுவதே ஆகும். இத்தகைய அணுமுறைகள் சகோதரத்துவ உறவுமுறைகளிலிருந்தே தொடங்கிட இயலும். எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் மாறுபாடுகள் இருந்தாலும் தன்னைப்போல் பிறரும் மனிதர்களே என்கிற ஏற்பும் உரிய மதிப்பும்தான் சமத்துவத்திற்கான அடிப்படையாகும் என்கிறார். அரசியல் பயணத்தில் ஓய்வு இல்லாமல் இரவு என்றும் பகல் என்றும் பாராமல் உறக்கம் இல்லாமலும் உணவு உண்ணாமலும் இம்மக்களுக்காகவே தனது வாழ்வை அற்பணித்து வாழ்ந்து வருகின்றார்.
அரசியல் அங்கீகாரம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதன் முதலில் எழுச்சித்தமிழர் அறிவர் தொல்.திருமாவளவன் ஒருவர் மட்டுமே சட்டமன்றத்தில் காலடி எடுத்துவைத்தார். பின்னர் எழுத்தாளர் முனைவர் இரவிக்குமார், செல்வபெருத்தகை என இருவர்சட்டமன்றத்தில் காலடி எடுத்துவைத்தனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவர் தொல்.திருமாவளவன் அவர்களின் கடின உழைப்பால் 1.சிந்தனைச்செல்வன் 2.எஸ்.எஸ்.பாலஜி 3.பனையூர் பாபு 4.ஆளுர் ஷாநவாஸ் என நான்கு சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்திருக்கிறார். மக்களவையில் எழுச்சித்தமிழர் அறிவர் தொல்.திருமாவளவனும் எழுத்தாளர் முனைவர் இரவிக்குமாரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். ஆக, தமிழக அரசியலைப் பொறுத்தவரை தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் அறிவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கின்றார்.விடுதலைச் சிறுத்தைகள்கட்சிதேர்தல் ஆணையத்தால் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு பானை சின்னமும் ஒதுக்கிய நாள் ஜனவரி -10, 2025 ஆம் ஆண்டு ஆகும். தமிழ்நாட்டில் 75 ஆண்டுகால தேர்தல் அரசியல் வரலாற்றில் தலித் ஒருவரால் துவக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்று மாநிலக்கட்சியாக அங்கீகாரம் பெருவது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம், நிரந்தர சின்னம் ஒதுக்குவது எளிதான காரியமல்ல; அடித்தட்டு மக்களை அமைப்பாக்கி, அரசியல்படுத்திஅரசியல் களத்தில் அங்கீகாரமும்,நிரந்தரச்சின்னமும் பெற்ற ‘பேராளுமை’ ஆவார். இதில் ஏரளமான எதிர்ப்புகள்,போட்டிகள், பொறாமைகள்போன்றவை அடங்கியுள்ளது. அரசியல் களத்தில் அவர் எடுத்த நுட்பமான முடிவுகள், போராட்டங்கள், களப்பணிகள், கட்சியின் மறு சீரமைப்புகள் என இரவு-பகல் கண் துஞ்சாமல்,கால் ஓயாமல், உணவு உண்ணாமல் அரசியல்பேசி, அனைவரையும் அரவணைத்துஅமைப்பாய்த்திரட்டி இந்தப் புரட்சியையும் மகத்தான சாதனையையும் நிகழ்த்தி வருகின்றார். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 234 மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்த அரசியல் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று எல்லோருடைய அன்பிற்கும், மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவராக வாழ்ந்து வருகின்றார். அவரது அறிவு, ஆற்றல், துணிவு ஆகியவற்றைக்கண்டுப் பகைவர்களும் பதுக்கினர், மக்கள் வியந்தனர், மகிழ்ந்தனர், தெளிந்தனர். மனிதருக்குள்ளே கற்பிக்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கிய மக்கள் மீதும், மதத்தின் மீதும் சினம் கொண்டு சிறுத்தையாய் சீறினார். மனித இனம் சமத்துவ சமநிலை அடைய வேண்டுமென்று நாள்தோறும் போராடினார். மனிதரில் உயர்வுதாழ்வற்ற சமநிலை உண்டாக்குவதற்கு முயற்சி செய்யும் போதெல்லாம் எதிராளிகளிடமிருந்து எதிர்வரும் எதிர்ப்புகளை முறியடித்தார். ஆதிக்கசாதிகளின் திமிரை எதிர்த்து அடக்கிக் காட்டினர். மக்களின் போராட்டத்திற்காகவே சிறை வாழ்க்கையே வந்தாலும் அதை தவ வாழ்க்கையாக எண்ணி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற துணிவு பெற்றார். தமிழர்களுக்கு ஒரு புதிய எழுச்சியையும் பகுத்தறிவு உணர்வையும் ஊட்டினார். தன் மானத்துடன் வாழ்வதற்கு நல்ல வழிகளைக் காட்டினார் . மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் படித்த மாணவர்கள் தான் விடுதலைச் சிறுத்தைகள். இங்கு இருப்பவர்கள் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், படைப்பாளர்கள், உழைப்பாளிகள், இளைஞர்கள், என அனைத்து சமுதாய மக்களும் இருக்கின்றார்கள். இவர்களுக்கு கற்பித்த மார்க்ஸியம், அம்பேத்கரியம், பெரியாரியம் தான் சமூக மாற்றத்திற்கான முக்கிய சித்தாந்தங்கள்; ஆகும்.
- மார்க்சியம்வர்க்கப் போராட்டத்தையும், பொருளாதார சமத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
- அம்பேத்கரியம் சாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு, சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகத்தின் மூலம் சமூக நீதியை நிலைநாட்டப் போராடுகிறது.
- பெரியாரியம் சாதியையும் மூடநம்பிக்கைகளையும் தகர்த்து, சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது;
இக்கொள்கை, கோட்பாடுகளை போதிக்கும் பல்கலைக்கழகம் தான் விசிக. இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் அறிவர் தொல். திருமாவளவன் ஆவார்.
— முனைவர் சீமான் இளையராஜா








Comments are closed.