திராவிடம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதா? தோழர் தியாகு (பாகம் – 01)
திராவிடம் – வரலாறு
திராவிடம் என்பதை பெரியார் கண்டுபிடிக்கவில்லை. வேறு திராவிட இயக்கத் தலைவர்களும் கண்டுபிடிக்கவில்லை. வடமொழி இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல் உள்ளது. கார்டுவெல் தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணத்தில் என்ன சொல்கிறார் என்றால், தமிழ் தனித்து இயங்கும் வல்லமை கொண்ட மொழி. அதற்கென்று இலக்கணம் உள்ளது என்றார்.
அதற்கு முன்னர் எல்லீஸ் என்ன சொன்னார் என்றால் தமிழும், தெலுங்கும் தனித்து இயங்கும் வல்லமை கொண்ட மொழி என்றார். தமிழ் தனித்தியங்கும் வல்லமை கொண்ட மொழி என்பதை முதன்முதலில் நிறுவியவர் கார்டுவெல் என்று மொழிஞாயிறு தேவநேய பாவணார் கூறுகின்றார்.
தமிழ்மொழி என்ற மொழி குடும்பத்திற்கு ஒரு பெயர் சூட்டவேண்டும் என்று கார்டுவெல் விரும்புகிறார். திராவிட மொழியில் இருவகையான மொழிகள் உள்ளன. ஒன்று செப்பமுற்ற மொழிகள் மற்றொன்று சொப்பமுறாத மொழிகள். இதில் செப்பமுற்ற மொழிகள் ஐந்து. 1.தமிழ் 2. மலையாளம் 3. தெலுங்கு 4. கன்னடம் 5.துளு. இதில் முதன்மை மொழி தமிழ்.
தமிழை முதன்மையாகக் கொண்ட இந்த மொழிக் குடும்பத்தைத் திராவிட மொழிக் குடும்பம் என்று அழைக்கலாம் என்று பரிந்துரை வழங்கியவர் கார்டுவெல். இப்படித்தான் திராவிடம் என்ற சொல் உள்ளே நுழைந்தது. அறிஞர்களும் கார்டுவெல்லின் கருத்தை ஏற்றுக்கொண்டுதான் உள்ளனர். யாரும் மறுக்கவில்லை.
பாவாணர் என்ன சொன்னார் என்றால், தமிழ் முதன்மைமொழி. திராவிட மொழிக் குடும்பத்தின் தலைமை மொழி தமிழ் என்று கூறினார். மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டின்போது இ.கே.நாயனார் தமிழும் மலையாளமும் சகோதரி மொழிகள் என்று பேசியபோது, அப்போதைய முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ‘இல்லை. தமிழ் தாய். மலையளாம் மகள் என்று பதில் கூறினார்.
இந்த மொழிகள் பேசும் நிலபரப்பு சென்னை மாகாணத்தை ஒட்டி இருந்தது. இதனால்தான் இந்த மொழிபேசக்கூடிய நிலபரப்பைத் திராவிட நாடு என்று அழைக்கும் வழக்கம் வந்தது. இப்போது திராவிடர் என்ற ஒரு இனம் இல்லை. திராவிடம் என்ற ஒரு நாடு இல்லை. தங்களைத் திராவிடர்கள் என்று கருதிக்கொள்வோர் உண்டு. அவர்கள் திராவிடர் இல்லை. இந்தியர்கள் என்று தங்களைக் கருதிக்கொள்வோரும் உண்டு. அவர்கள் இந்தியர்கள் இல்லை. நாம் எல்லாரும் தமிழர்கள்தாம்.
இந்தியாவை ஒரு நாடு என்று அம்பேத்கர் ஒத்துக்கொள்ளவில்லை. 4000 சாதிகளை வைத்துக்கொண்டு இந்தியா எப்படி ஒரு நாடாக இருக்கமுடியும் என்ற அம்பேத்கர் கேள்வி கேட்டார். சாதி ஒழிப்பு சிந்தனையோடு சமூகநீதி சிந்தனையோடு வந்த அயோத்திதாசர் போன்றவர்கள் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
பெரியார் 1925இல் குடிஅரசு இதழ் தொடங்கி, சுயமரியாதை இயக்கம் தொடங்கி, சாதி ஒழிப்பு, சமூக நீதி சிந்தனையோடு இருந்தார். இதற்கு முன்பு தந்தை பெரியார் தென்னிந்திய நலஉரிமை சங்கம் தொடங்கினார். தென்னிந்தியா என்பதும் திராவிடம் என்பதும் சென்னை மாகாணம் என்பதும் ஏறத்தாழ ஒருங்கமைகின்றன.
1938இல் தமிழ்நாட்டின் சுயநிர்ணய உரிமைக்கான முழக்கத்தை தந்தை பெரியார், மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தரபாரதியார் போன்றவர்கள் எழுப்பினார்கள். இந்த முழக்கத்தை ஓர் இயக்கமாகக் கொண்டு சென்றவர் தந்தை பெரியார்தான். 1956ஆம் ஆண்டு தொடங்கி அவர் மறைகின்ற 1973ஆம் ஆண்டு வரை, இறுதி சொற்பொழிவு வரை ‘தமிழ்நாடு தமிழர்கே’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதை விரும்பாதவர்கள் வெளியேறலாம் என்று கடுமையாகப் பேசியவர் தந்தை பெரியார். திராவிட கருத்தியலின் மூலவர் தந்தை பெரியார்தான்.
அடுத்த பதிவில் தமிழ்த்தேசியத்தின் வரலாறு பற்றி பார்ப்போம்.
(தொடரும்)
— முனைவர் தி.நெடுஞ்செழியன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
[…] […]