குடி குடியை கெடுக்கும்.. போதை பொளப்பை கெடுக்கும்..
குடி குடியை கெடுக்கும்.. போதை பொளப்பை கெடுக்கும்..
உலகை தற்போது ஆக்கிரமித்து அடிமை யாக்கும் பிரச்சனைகளுக்கு முக்கியமானதாக கருதப்படுவது போதை பொருட்கள் தான். பெரும்பாலான நாடுகள் இதன் பயன்பாட்டை தடுப்பதற்கும், ஒழிப்பதற்கும் பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் அதனை முற்றிலும் ஒழிப்பது என்பது குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது.
இன்றைய சமுதாயம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இது இருந்து வருகிறது. பொழுது போக்கிற்காகவும், சிறிது நேரம் கிடைக்கும் அற்ப சந்தோஷத்திற்காகவும் பயன்படுத்தப்படும் இந்த போதை பொருட்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவித்து உயிரிழப்புகளை ஏற்படுத்துவதோடு சமூகத்தில் சீர்கேடுகளை தோற்றுவிக்கின்றன. தற்போது போதைப் பொருட்களின் பயன்பாடு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகரித்துச் செல்வதை காண லாம். இதன் பயன் பாட்டை தடுத்து நிறுத்தி அவை தொடர் பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக அவசியமாகும்.
போதைப் பொருட்களை பொழுது போக்கிற் காகவும், உடம்பில் ஒருவித பறக்கின்ற உணர்வை ஏற்படுத்து வதற்காக வும் இதனை போதை ஆசாமிகள் விரும்பி பயன்படுத்துகின்றனர். இதற்காக பலவகை போதை பொருட்கள் உலகெங்கிலும் மலிந்து காணப்படுகின்றன. அவற்றிற்கு உதாரணமாக மதுபானங்கள், புகையிலை, ஹெராயின், அபின், கஞ்சா என அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றில் மதுபானங்கள் மற்றும் புகையிலை போன்றவை வீடுகள் உள்ளிட்ட பொது இடங்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மதுபானங்களினால் ஏற்படும் தீமையை மக்கள் அறிந்திருந்தாலும், அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அசமந்த போக்கிற்கு தம்மை பழக்கப்படுத்தி விட்டனர்.
போதைப் பொருட்கள் பயன்பாட்டினால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன.
மது பயன்பாட்டால் மூளைப் பகுதியும் நரம்பு மண்டல பகுதியும் பாதிக்கப்படுகின்றன. தொடர் ச்சியாக மது குடிப்பதால் கல்லீரல் புற்றுநோயும், புகையிலை பயன்பாட்டால் வாய் தொண்டை புற்றுநோயும் உருவாகிறது ஹெராயின், கஞ்சா பயன்படுத்தும் போது மனநிலை பாதிப்படைவதோடு, உடல் உறுப்புக்கள் பழுதடைந்து மரணம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. மேலும் போதைப் பொருட்களை நுகரும் போது தனி மனிதனுக்கு மட்டுமின்றி சமூக ரீதியிலான பிரச்னைகளையும் இவை உருவாக்குகின்றன.
இதே போல சமூக விரோத செயல்பாடுகளான , கொள்ளை மற்றும் கலாச்சார சீர்கேடுகள் போதைப் பொருட்கள் பயன்பாட்டினால் வெளிப்படுகிறது. அவற்றிற்கு அடிமையாகி நாளடைவில் அவை இன்றி வாழ முடியாத நிலையை உருவாக்கி விடுகிறது. பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதற்கு பிரதான காரணமாக அமைவது அவர்களின் வீட்டின் சூழல். வீட்டில் வசிக்கும் யாரேனும் ஒருவர் மதுபானம், புகையிலை பயன்படுத்துபவராக இருந்தால் அவர்கள் வீட்டில் வசிக்கும் சிறுவர்களும் அதனை பயன்படுத்த தூண்டப்படுவர். மேலும் அத்தகைய பொருட்களை விற்பனை செய்வோர் இளம் வயதினரை குறி வைத்து தனது வியாபாரத்தை மேற்கொள்ள இலகுவாக உள்ளது. மதுபானத்திற்கு அடிமையாகி அதை பயன்படுத்துவோர் தவிர, நாகரீக மோகத்தால், சமூக ரீதியாக தங்கள் செல்வ செழிப்பை காட்டிக் கொள்வதற்காகவும் மதுவை பயன்படுத்துவோரும் உள்ளனர்.
‘ இன்றைய மாணவர்களின் கூடா நட்பு, அதீத பணப்பழக்கம், பெரியோர்கள், பெற்றவர்களை மதிக்காத தன்மை என இவர்களை போதை நோக்கி போவதற்கான பாதையாக அமைந்து விடுகிறது. பொது இடங்களில் மதுபானம் அருந்துவதோ, சிகரெட் புகைப்பதோ கூடாது என்பது பரவலாக கடைபிடிக்கப்படும் விதிமுறை. ஆனால் அதை புறக்கணித்து சமூக அக்கறையற்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் இத்தகைய தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை காணலாம்.
இதற்கெல்லாம் முதல் காரணமான போதை பொருட்கள் கிடைப்பனவைகளை மட்டும் பயன்படுத்தாமல் இருந்தால் மாத்திரமே போதையற்ற, சமுதாயத்தை உருவாக்க முடியும். தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட் களை விற்போருக்கு சிறை தண்டனை வழங்குவதோடு, 18 வயது குறைவானவர்களுக்கு மது, சிகரெட் போன்றவைகளை விற்பனை செய்வோருக்கும் தகுந்த தண்டனை வழங்க வேண்டும். சாதாரண மக்களின் வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது சினிமா. சில திரைப்படங்களில் வரும் குடிபோதை காட்சிகளை நாகரீகமாக கருதி சிலர் போதைக்கு அடிமையாகின்றனர். ஆனால் அதில் குடிப்பதற்கு எதிரான எச்சரிக்கை வாசகங்கள் வந்தாலும், அதை யாரும் கண்டு கொள்வதில்லை. மதுபானங்களுக்கு அதிக வரியை விதிப்பதும் இல்லை. அதனை முற்றிலுமாக விற்க தடை விதித்து ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதும் இதற்கு நிரந்த தீர்வாகும்.
ஒருவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் அவர் நினைத்தால் பழக்கத்திலிருந்து மீண்டெழுந்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். தங்கள் பிள்ளைகள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்கள் என பெற்றோர் அதனை அறிந்து கொண்டால் அவர்களை அடிப்பதோ, குற்றம் சொல்வதோ கூடாது மாறாக அவர்களை அரவணைத்து போதைப் பழக்கத்தால் ஏற்படும் பின் விளைவுகளை எடுத்துக் கூறி, அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அப்பழக்கத்திலிருந்து வெளிக்கொணர வேண்டும்.
மறுவாழ்வு மையங்களில் சேர்க் கப்பட்டு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலமும் போதைப் பழக்கத்திலிருந்து மீட்டுக் கொண்டு வர முடியும். தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு என்பது இந்தியாவில் போதை பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் ஏற்படுத் தப்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பு மருத்துவ உபயோகங்கள் நீங்கலாக மற்ற அனைத்து வகையான போதைப் பொருள் உபயோகத்தை தடுக்க வழிவகை செய்கிறது.
இந்த அமைப்பு இந்தியாவில் நிர்வாக காரணங்களுக்காக மண்டலங்களாகவும், உபமண்டலங்களாகவும் பிரித்து தன் பணியை மேற்கொள்கிறது. போதைக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்தில் இருந்து மீட்க எத்தனையோ மறு வாழ்வு மையங்கள், அலோபதி, ஆயுர் வேதா, சித்தா என எத்தனையோ மருத்துவ முறைகளும் இருக்கின்றன. எனினும் கடவுள் நம்பிக்கையில் தன் மனதை செலுத்தி, இது பாவம் என எண்ணி யார் கைவிடுகின்றனரோ, அவர்களால் மட்டும் தான் இப்பழக்கங்களிலிருந்து மீள்வது சாத்தியமாகும். தற்போது நம் உலகை அச்சுறுத்தும் இந்த போதை காட்டும் அழிவுப்பாதையை தவிர்த்து, தகர்த்தெறிவோம்!
– மூவர் ரவீந்திரன்