கொடூரமாகத் தாக்கப்பட்ட DYFI நிர்வாகி ! திக்.. திக்… திருச்சி !
கொடூரமாகத் தாக்கப்பட்ட DYFI நிர்வாகி !
திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி தவ்பிக் அதே பகுதியைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். உடல் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆழமான வெட்டுக்காயங்களுடன், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார், தவ்பிக். கஞ்சாவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதால், ஆத்திரமுற்ற கஞ்சா வியாபாரிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்கிறார்கள், DYFI தோழர்கள். ”அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, இது ஏரியா தகராறுதான் என்கிறார்கள்” போலீசார்.
என்ன நடந்தது? இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலர், லெனினை தொடர்புகொண்டோம்.
“அம்மாகுளம் கிளைச் செயலராக இருக்கிறார், தவ்பிக். அதே பகுதியில் வசிப்பவர் வினோத். இவர் மீது கொலை வழக்கு, செயின் திருட்டு, பைக் திருட்டு உள்ளிட்டு பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளது. இவரது வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை தங்க வைத்திருக்கிறார். அவர்கள் எப்போதும் ஒரே கேங்காக ஏரியாவை வலம் வருவார்கள். இதே பகுதியில் சமீபத்தில் நடந்த திருவிழாவில்கூட, வினோத் கேங் பசங்க வெட்டரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர்.
எங்கள் அமைப்பின் கிளைச்செயலராக இருக்கும் தவ்பிக், போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை இப்பகுதியில் நடத்தியிருக்கிறார். தவறான சகவாசம் வைத்திருக்கும் இளைஞர்களை அழைத்து அறிவுரை வழங்கியிருக்கிறார். குறிப்பாக, அவரது நெருங்கிய நண்பர் ஒருவரின் உடன்பிறந்த தம்பி, வினோத் கேங்கோடு சுற்றி வந்திருக்கிறார். நண்பரின் தம்பி என்ற உரிமையில் அந்த பையனை அழைத்து, அவர்களோடு சேரக்கூடாது என கண்டித்திருக்கிறார்.
இந்த விசயம், ஒன்றுக்கு இரண்டாக அவர்களின் காதுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. அதிலிருந்து, கட்டம் கட்டிய அந்தக் கும்பல், தவ்பிக் தனியே இருந்த தருணத்தைப் பார்த்து தங்களது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தாக்குதல் தொடுத்த சமயத்தில் வினோத் ஏரியாவில் இல்லை. ஆனால், அவரது தூண்டுதலில் பாதுசா தலைமையிலான எட்டு பேர் கொண்ட கும்பல், தவ்பிக் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.” என்று குற்றஞ்சாட்டுகிறார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ப.லெனின்.
”நைட் எட்டு மணிக்கு சம்பவம் நடந்துச்சு. நாங்க போலீஸ்ல புகார் சொல்றோம். தலையில பலமா வெட்டு விழுந்திருக்கு. டாக்டர் 48 மணிநேரம் கழிச்சுதான் எதுவும் சொல்லமுடியும்னு சொல்றாங்க. இப்பவே ரெண்டு விரலோட இயக்கம் போச்சு. சாகடிக்கனும்னு கொலைவெறியோடு தாக்கியிருக்காங்க. இவ்ளோ நடந்தும், கொலையாளிகளை பிடிக்க போலீசார் ஆர்வம் காட்டல. போனோம், வந்தோம், ஆளில்லைனு சொன்னாங்க. அப்புறம், நீங்க வந்து ஆள அடையாளம் காட்டுங்க. வீட்டை காட்டுங்கனு எங்ககிட்டயே கேட்குறாங்க. அதான், திருச்சி ஜி.எச். வாசல்லயே போராட்டம் செஞ்சோம்.” என்கிறார், லெனின்.
DYFI தோழர்களின் குற்றச்சாட்டு குறித்து, அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் அவர்களிடம் கேட்டோம். “என்ன காரணமா இருந்தாலும், கும்பலா வந்து தவ்பிக்க வெட்டுனது தப்பு. நடந்த சம்பவத்துக்கு ஆறு பேரை அரஸ்ட் பன்னியிருக்கோம். பாதுஷா இன்னும் சிக்கல. சிக்கிட்டா நாங்களே குண்டாஸ் போடலானுதான் இருக்கோம்.
அவங்க சொல்ற வினோத் மேல, பாதுஷா மேல பழைய வழக்குகள் இருக்கு. அவங்க ஹெச்.எஸ். குற்றவாளிகள்தான். வினோத் மேல கடந்த 3 வருசத்துல எந்த வழக்கும் இல்லை. வினோத் இப்போ ஏரியாவிலேயே இல்லை. கஞ்சாவுக்காகவே 6 கேஸ் போட்டிருக்கேன். கஞ்சா வித்துச்சுனு, மாசமா இருக்க பொண்ணுனு கூட பார்க்காம ரிமாண்ட் பன்னியிருக்கேன்.
கஞ்சா விக்கிறாங்கனு அவங்க அமைப்பு சார்பா, எங்ககிட்ட புகார் கொடுத்து நாங்க நடவடிக்கை எடுக்காம இருந்திருக்கோமா? இல்லை, வேற எங்கேயும் பெட்டிசன்தான் கொடுத்து இருக்காங்களா? இதே தவ்பிக் மேலயும் அடிதடி கேஸ் இருக்கு. இவங்க அமைப்புல இருக்கிற நவநீதகிருஷ்ணன் ஒரு ரவுடி குருப்புக்கு ஆதரவாதான் இருக்காரு. இவங்க பன்றது அந்த குரூப்புக்கு பிடிக்கல. அவங்கல இவங்களுக்கு பிடிக்கல. இந்த மோட்டிவ்லதான் இந்த சம்பவம் நடந்துருக்கு. இவங்க பன்ற தப்புக்கு அமைப்பை துணைக்கு இழுக்கிறார்கள்.” என்கிறார்.
– ஆதிரன்