எடப்பாடி எனக்குத் துரோகம் செய்தார் ! மனந்திறந்த சசிகலா
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா நேரடியாக அரசியல் மேடையில் தோன்றினார். 2017ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அவர் முதல்வர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டாலும், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காரணமாக பதவி ஏற்க முடியவில்லை. 4 ஆண்டுகள் சிறைததண்டயை பெங்களூரு பாப்பரன அக்கரகாரத்தில முடிந்து 2021 -ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். தமிழக எல்லையான ஓசூர் தொடங்கி பிரமண்டமான வரவேற்பு சென்னை வரை கொடுக்கப்பட்டது. அப்போது முதல் அமைச்சர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி உட்பட எந்த மந்திரியும் மரியாதை நிமித்தம் சந்திக்கவில்லை.
தொடர்ந்து நடந்த சட்டமன்ற தேர்தலில் அம்மா ஆட்சி அமைய ஒத்துழைப்பு தருவேன் என்று கூறி மறைமுகமாக அதிமுகவை ஆதரித்தார். எங்கும் பிரச்சாரம் செய்யவில்லை. அதிமுக ஆட்சியை இழந்தது. எடப்பாடி – பன்னீர் இடையே மோதல் வெடித்து அதிமுக பிளவுபட்டது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவை ஒருங்கிணைத்து வெற்றி பெறவைப்பேன் என்று சூளுரைத்தார். அதை யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. உடன் இருந்த டிடிவி தினரகன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். சசிகலாவின் ஆதரவு அந்தக் கட்சிக்கு இருந்தது.
இந்நிலையில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் எடப்பாடியை துரோகி என்று வர்ணித்த டிடிவி பாஜகவோடு கூட்டணி சேர்ந்து எடப்பாடியை முதல் அமைச்சர் ஆக்குவேன். நாங்கள் அம்மாவின் பிள்ளைகள் ஒன்றுசேர்ந்துவிட்டோம் என்று எடப்பாடியோடு கைக்குலுக்கிவிட்டார். எஞ்சியிருந்த ஒ.பன்னீர்செல்வம் தனிக்கட்சித் தொடங்க மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டார். அவரிடமிருந்து பிரிந்து பண்ருட்டி இராமச்சந்திரன் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கி தவெகவை ஆதரிக்கும் என்று அறிவித்துவிட்டார். அதிமுவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். கூடவே பல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்துவிட்டனர். பன்னீர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவில் சேர்ந்துவிட்டனர்.
இந்நிலையில் செய்வது அறியாது தவித்த சசிகலா பிப்.24ஆம் நாள் இராமநாதபுரத்தில் கமுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதில்,“நான் நம்பி முதல் அமைச்சர் பொறுப்பில் உட்கார வைத்த எடப்பாடி தனக்கு செய்த துரோகங்களைப் பட்டியிலிட்டு, தனக்காக அனுதாப அலையை ஏற்படுத்தினார். மேலும், விரைவில் புதிய கட்சியைத் தொடங்கப்போகிறேன். அது குறித்து விரைவில் செய்தியைத் தெரிவிப்பேன் என்று கூறி, தொடங்க உள்ள கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார். மேல கருப்பு கீழே சிவப்பு நடுவில் வெள்ளி நிறம். அதில் அண்ணா, எம்ஜிஆர். ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. புதிய கட்சியை விரைவில் தொடங்கி துரோகிகளையும் எதிரிகளையும் வேரறுப்போம் என்று சூளுரைத்து கூட்டத்தை முடித்துக்கொண்டார்.
சசிகலா புதிய கட்சி தொடங்குவது அல்லது தனது உறவினர் திவாகரன் நடத்தும் அண்ணா திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்பட்டு வந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில், குறிப்பிட்ட சமூக வாக்குகள் அதிகமாக உள்ள தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் திட்டம் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதற்காக ஓ. பன்னீர்செல்வத்தையும் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் இணைந்தால், தற்போது தினகரனின் முக்கிய ஆதாரமாக கருதப்படும் தென் மாவட்ட வாக்கு வங்கி பிளவுபடும் வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
டிடிவி தினகரன் இந்த சூழ்நிலையை முன்னிட்டு, இதுவரை சசிகலாவை வெளிப்படையாக விமர்சிக்காத டிடிவி தினகரன் சமீபத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது. சசிகலாவின் அரசியல் முயற்சிகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. மேலும், ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் இணைந்து செயல்படக் கூடாது என்று டிடிவி தினகரன் அறிவுறுத்தியதாகவும், ஆனால் அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் பின்னணியில், தென் மாவட்ட அரசியல் சமநிலையில் மாற்றம் ஏற்படும் என்ற அரசியல் கணக்கீடுகள் முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றன. மொத்தத்தில், சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் இணையும் சாத்தியம் இல்லை என்று தமிழக அரசியலில் கூறப்படுகின்றது.
உண்மையை சொல்லப்போனால் எப்படியாவது அதிமுகவுக்குள் செல்ல வேண்டும் என்பதுதான் டிடிவி தினகரனின் எண்ணம். அதற்காக முதல் கட்டமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். அதே நேரத்தில் சசிகலா தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதால் அவர் மீது அதிருப்தியில் இருக்கும் டிடிவி தினகரன் தொடர்ந்து அவரை விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக சசிகலா குறித்து பேசாமல் இருந்த டிடிவி தினகரன் சசிகலாவின் முடிவால் தான் தற்போது அவரை விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தென்மாவட்டங்களில் டிடிவி தினகரன் அதிமுக+பாஜக கூட்டணியில் இணைந்தது பிடிக்கவில்லை என்று அறிக்கை விட்டவர்களை அமமுகவிலிருந்து வெளியேற்றி வருகிறார். அதில் சிலர் திமுகவில் சேர்ந்துள்ளனர். பிளவுபட்டுள்ள டிடிவி தினகரன் கட்சியினரை நம்பித்தான் சசிகலா கட்சி தொடங்கப் போவதாக அரசியல் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. சசிகலா இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்துவிட்டாரா? தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு அதிமுக+பாஜக+அமமுக வாக்கு வங்கியைச் சிதைக்கப்போகிறாரா? அல்லது டிடிவி தினகரன் கட்சியினரின் வாக்குகள் எடப்பாடிக்கு எதிராக திமுகவுக்குச் செல்லாமல் புதிய கட்சியைத் தொடங்கி அதைத் தக்கவைத்து அதிமுக ஆட்சிக்கு வர உதவப்போகிறரா? என்பதற்கெல்லாம் தற்போதைக்கு விடை கிடைக்காது. என்றாலும் தேர்தல் அறிவிக்கப்பட்டால் ‘கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு வந்தாகவேண்டும்” என்ற கதையாகத்தான் இருக்கப்போகிறது. தமிழ்நாட்டில் 4 முனைப்போட்டி என்றிருந்து சசிகலா வரவால் 5 முனைப்போட்டியாக மாற இருக்கிறது. இதனால் யார் பயன்பெறுவார்கள். பொறுத்திருந்து பார்போம்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.