மனதை கொள்ளை கொண்ட ஏலகிரி பொங்கல் விழா கொண்டாட்டங்கள் !
மனதை கொள்ளை கொண்ட ஏலகிரி பொங்கல் விழா கொண்டாட்டங்கள் !
தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா, தமிழரின் வாழ்வியலோடும் உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடும் இணைந்து நன்றி தெரிவிக்கும் விழாவாகும். உழவர்கள் தமது உழைப்பிற்கும் தங்களுக்கு உதவிய இயற்கை மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்விழாவை கொண்டாடி வருகின்றனர்.
பயிர்த்தொழில் செய்பவர்களின் வாழ்வின் உற்பத்தி சார்ந்த இந்த விழா, மத உணர்வும், இன உணர்வும் , கடந்து பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டின் வெளிப்பாடாகவே பல ஆண்டுகளாக உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
மலை கடல் மட்டத்தில் இருந்து 1,700,20 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள்ளது ஏலகிரி. ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர் ,மலையில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி மக்கள் இன குழுக்களாக பரவி உள்ளனர். இவர்களில் குடும்ப நிகழ்ச்சிகள், கிராமிய கலாச்சாரங்கள் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை பாரம்பரிய முறைப்படி பின்பற்றி வருகின்றனர்.
ஏலகிரியில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் இப்பகுதியின் கலாச்சார பன்முகத்தன்மை மாறாமல் மத நல்லிணக்கத்தின் வண்ணமயமான பிரதிபலிப்பாகும். இம்மலையில் உள்ள பழங்குடி மக்கள் அவர்கள் வாழ்வியல் சார்ந்த முறையில் பொங்கல் வைத்து கொண்டாடி வருவதை அறிந்து அய்யன் திருவள்ளுவர் தினமான மாட்டு பொங்கல் அன்று ஏலகிரி மலைக்கு பயணம் ஆனோம்.
”இங்கு தை மாதம் அறுவடை காலமாக இருந்தது. இப்பொழுது காலநிலை மாறுபாட்டால் பங்குனி அறுவடைக் காலமாக ஆகிவிட்டது. முற்காலத்தில் தைப் பொங்கல் விழா அறுவடை விழாவாகவே கொண்டாடப்பட்டது. இன்று தைமாதம் அறுவடைக் காலமாக இல்லாவிட்டாலும் வழக்கத்தையொட்டி இன்று தைமாதப் பிறப்பை அறுவடை விழாவாகவே கொண்டாடி வருகிறோம். நாங்கள் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில்லை. இங்கு பொங்கல் பண்டிகை தான் சிறப்பு” என்கிறார், ஏலகிரி மலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அச்சுதன்.
மேலும், ”இந்த மலையில், நிலாவூர், அத்னாவூர், மங்கலம், கொட்டையூர், என, 14 குக்கிராமங்கள் உள்ளது. மலையடிவாரத்தில் இருந்து 14 கிலோமீட்டரில் , 14 கொண்டை ஊசி வளைவுகளை கடந்துதான், ஏலகிரி மலைக்கு வர வேண்டும். இந்த மலையில் வாழும் எங்கள் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள்.மா, பலா, வாழை விளைவிக்கின்றனர். இங்கு விளையும் மசாலா பொருட்கள் சிறந்தது இம்மலையில் மித மிஞ்சிய பனியாலும் அளவு கடந்த மழையாலும் விளையும் பயிர்கள் சேதம் ஆகிறது.
எங்களுக்கு எந்த அரசும் உதவி செய்வதில்லை. இம்மலையில் கிழே இருந்து வந்து ஓட்டல்களை கட்டி டூரிஸ்ட் ஸ்பாட்டாக எங்கள் மலையை மாற்றி விட்டதால் விவசாயம் செய்ய , குடிக்க, தண்ணீர் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது இதையும் கடந்துதான் வாழ்ந்து வருகிறோம்.” என ஆதங்கத்தையும் வருத்தங்களையும் நம்மிடம் இறக்கி வைத்தார், அச்சுதன்.
அங்கிருந்து அப்படியே நிலாவூர் பொங்கல் விழாவை காண பயணமானோம். குளிர் நம்மை வாட்டி வதைத்தது. கொம்புகளுக்கு இரு வண்ணங்கள் பூசி நெற்றியில் மஞ்சள் குங்குமம் இட்டு கழுத்தில் பூ மாலை இட்டு அலங்காரத்தோடு வழி நெடுக மாடுகள் எதிர்பட்டன. நிலாவூரில் மக்கள் புத்தாடை அணிந்து பெருமாள் கோயில், அம்மன் கோயில்களில் தோரணங்களும் வண்ண வண்ண விளக்குகளாலும் அலங்கரித்திருந்தனர். கற்களால் ஆன பத்திற்கும் மேற்பட்ட மாடுகளை அடைக்கும் பட்டிகள் சுற்றி இருந்தன. ஒவ்வொரு பட்டியும் ஒவ்வொரு வகையறாக்களுடையது .
கோவிலை சுற்றி ஏராளமான சுற்றுலா பயணிகள் அமர்ந்து இருந்தனர். அவர்களோடு வெளிநாட்டு பயணிகளும் அமர்ந்திருந்தது நம்மை வியப்பில் ஆழ்த்தியது. மாடுகளை அவிழ்த்து விடும் நேரம் நெருங்கும் போது விழாவின் முக்கியஸ்தராக முன்னின்று நடத்திக் கொண்டிருந்த நிலாவூரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெரியவர் கோவிந்தசாமி அவர்களிடம் நம்மை அறிமுகம் செய்து கொண்டோம்.
இரு கரத்தையும் பற்றி வாஞ்சையுடன் நம்மை வரவேற்று சிறிய இடைவெளியில் சுருக்கமாக இங்கு நடைபெறும் மாட்டு பொங்கல் சிறப்பை எடுத்துரைத்தார் அவர். ”போகி பண்டிகை நாளில் தொடங்கி தொடர்ந்து ஐந்து நாட்களாக எங்கள் இன குழுக்களின் வகையறாக்களின் மாடுகளை இங்கு உள்ள அவரவர் பட்டிகளில் அடைத்து தினமும் குளிப்பாட்டி பூஜைகள் செய்வோம். சுவையான பழவகைகள் கொண்டு மாடுகளுக்கு விருந்து அளிப்போம்.
விளைந்த புது நெல் அரிசியை விரதம் இருந்து பயபக்தியோடு கொண்டு சோறு வடித்து அத்தோடு வேக வைத்த பருப்பு கடைசல் , பூசனைகாய் , நெய் , உப்பு, தயிர் , ஏலக்காய் சேர்த்து ஒன்றாக குழைத்து உருண்டை பிடித்து பிரசாதமாக கொடுப்போம். அது ஒருவித சுவையில் இருக்கும். அவசியம் எங்கள் பொங்க சோறு உருண்டையை சாப்பிட வேண்டும்.” என்றார் வாஞ்சையோடு.நாமும் நாவில் எச்சில் ஊற பொங்கல் உருண்டைக்காக காத்து கிடந்தோம். ஒருவழியாக கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு ஆளுக்கொரு உருண்டையோடு ருசிக்கத் தொடங்கினோம். ஆஹா, புதுவிதமான சுவை. முற்றிலும் வேறுபட்ட அனுபவம்.
விழாவின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை , மற்றும் எம்எல்ஏக்கள் தேவராஜ் , நந்தகுமார் , முன்னாள் அமைச்சர் வீரமணி ஆகியோர் கிராம முக்கியஸ்தர்களால் சிறப்பிக்கப்பட்டனர்.
விழாவின் நிறைவாக, பட்டியிலிருந்து வெளியேறிய மாடுகள் நாலாபுறமும் சீறிப்பாய்ந்தன. வண்ணமயமான, இன்பமயமான பொங்கல் விழா சட்டென்று நிறைவடைந்துவிட்டதே என்ற ஏக்கத்தில் ஆழ்த்தியது. பொங்கல் விழா கொண்டாட்டங்களை அசைபோட்டபடியே இறங்கினோம் மலையை விட்டு மனம் விலகாமலே.
– மணிகண்டன்.
பழங்குடி மக்களின் பொங்கல் விழா கட்டுரை அருமை
பொங்கல் உரண்டை கலவை சூப்பர்