கேரள அரசியலைப் பதம் பார்க்க வருகிறார் ‘எம்புரான்’
நாளை (மார்ச்-27) உலகமெங்கும், திரையரங்குகளில் மோகன்லாலின் ‘எம்புரான்’ ரிலீஸ் ஆகிறது. இதனால் கேரளாவில் ஆரம்பித்த புரமோஷன், கடைசியாக சென்னையில் மார்ச் 24- ஆம் தேதி படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழாவுடன் நிறைவுற்றது . சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த
இந்நிகழ்வினில்
இசையமைப்பாளர் தீபக் தேவ், ஹீரோயின் மஞ்சு வாரியர், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, சவுண்ட் இன்ஜினியர் ராஜாகிருஷ்ணன், நடிகர்கள் டொவினோ தாமஸ், அபிமன்யூ சிங், கார்த்திகேயா தேவ் ஆகியோர் பேசி முடித்ததும், தமிழில் வசனம் எழுதியுள்ள இயக்குநர் ஆர்.பி. பாலா பேசினார்.
“நான் முதலில் புலிமுருகன் படம் முடித்து லூசிஃபர் படத்திற்குச் செய்த போது, மோகன்லால் சாரை டப்பிங் பார்க்க அழைத்தேன். ஆனால் வரவே மாட்டேன் என்றார். என் கட்டாயத்தால் பார்க்க வந்தார். பாதி படம் பார்த்து விட்டு சூப்பராக செய்திருக்கிறாய் எனப் பாராட்டினார். அப்போதே எம்புரான் நீங்கள் தான் செய்கிறீர்கள் என்றார். அவரால் தான் என் வாழ்க்கை மாறியுள்ளது. என் வாழ்க்கையை புலி முருகனுக்கு முன் புலி முருகனுக்குப் பின் எனப் பிரிக்கலாம்.நான் இன்று நன்றாக இருக்கக் காரணம் மோகன்லால் தான்”.
இயக்குநர் பிருத்திவிராஜ்
“என்னைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான நிகழ்வு. முதல் பாகம் வந்த போது இப்படத்தை இந்திய அளவில் வெளியிடும் வசதி, படத்தைப் பற்றிப் பேச வைக்கும் வசதி இல்லை. இந்த 6 வருடத்தில் பல விசயங்கள் மாறியிருக்கிறது. இது முழுக்க முழுக்க கேரள அரசியல் பற்றிப் பேசும் படம்.

ஆனால் ஐந்து மொழிகளிலும் ரசிக்கும் வண்ணம் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தப்படம் மலையாள சினிமாவின் பெருமை. இப்படி ஒரு படம் செய்யக் காரணமான மோகன்லால் சார், ஆண்டனி பெரும்பாவூர் சார் ஆகியோருக்கு நன்றி. அனைவரும் படம் பார்த்து ரசியுங்கள் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மோகன்லால்
“இது ஒரு டிரையாலஜி படம். முதலில் லூசிஃபர், இப்போது எம்புரான், அடுத்து இன்னொரு படம் வரவுள்ளது. இது மலையாள சினிமாவுக்கே மிக முக்கியமான படம். கொஞ்சம் புதுமையாக பல விசயங்களை முயற்சி செய்துள்ளோம். தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளோம். இது தமிழிலும் நல்ல வரவேற்பை பெறும் .இந்த மாதிரி படம் ஓடினால் தான் பல பெரிய படங்கள் வரும். அதற்காகவும் இப்படம் ஓட வேண்டும்”.

நடிகர், இயக்குநர் பிருத்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
— மதுரை மாறன்.