பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஆங்கிலத்துறை தலைவரின் கீழ் பணியாற்ற முடியாது ! முதல்வரிடம் கடிதம் கொடுத்த 17 பேராசிரியர்கள்
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஆங்கிலத்துறை தலைவரின் கீழ் பணியாற்ற முடியாது என முதல்வரிடம் கடிதம் கொடுத்த 17 பேராசிரியர்கள்
அரசின் அலட்சியத்தால் மாணவர்களின் கல்விச்சூழல் பாதிக்கப்படும் அவலம்
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை தலைவர் மீது முதுகலை மாணவி ஒருவர் தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்குப் பாலியல் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தி, மாணவியின் புகாரில் உண்மை இருப்பதை அறிந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரிக்கல்வி இயக்குனருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பின் பல நாட்கள் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல்வர், பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக பேராசிரியர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த சூழலில் மாணவிக்கு ஆதரவாக ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பும், பேராசிரியருக்கு ஆதரவாக எஸ்.சி எஸ்.டி பேராசிரியர்கள் சங்கமும், முதல்வருக்கு ஆதரவாக அரசு கல்லூரி பேராசிரியர்கள் கழகமும் களமிறங்கின.
இதனால் கல்லூரியில் இறுக்கமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில்,
ஆங்கிலத் துறைப் பேராசிரியர்கள் அனைவரும் (17பேர்) கல்லூரி முதல்வரைச் சந்தித்து துறைத் தலைவரின் செயல்பாடுகள் தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவதாகவும், அவர் துறைத் தலைவராக இருப்பதை விரும்பவில்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளனர்.
இது கல்லூரி வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்சினையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏதாவது ஒரு வகையில் இதை முடிவுக்கு கொண்டுவர அரசு ஆர்வம் காட்டாமல் இருப்பது மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியில் பயிலும் ஏழை மாணவ, மாணவிகளின் நலன்கருதி, அவர்களுக்கு அமைதியான கல்விச்சூழலை ஏற்படுத்தி தர அரசு முன் வர வேண்டும்.