பாஜகவிலிருந்து வந்தவர் … பத்து ரூபாய்க்கு சாப்பாடு போட்டவர் … யார் இந்த ஆற்றல் அசோக்குமார் ?
சேவை வழங்கியதை விளம்பரங்கள் செய்து அதை ஓட்டுக்களாக அறுவடை செய்ய நினைக்கிறார் எனவும் ... அதிமுக வேட்பாளர்கள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் பாஜகவில் இருந்து வந்தவர்கள் ...
பாஜகவிலிருந்து அதிமுகவுக்கு வந்தவர் … பத்து ரூபாய்க்கு சாப்பாடு போட்டவர் … யார் இந்த ஆற்றல் அசோக்குமார் ?
2021-ல் இருந்து பாஜக ஓபிசி அணியின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஆற்றல் அசோக்குமார், கடந்த ஆண்டு நவம்பரில் அதிமுகவில் இணைந்தார். இணைந்த 4 மாதங்களிலேயே ஈரோடு அதிமுக வேட்பாளராக ஆற்றல் அசோக் குமார் களமிறக்கப்பட்டிருக்கிறார்.
யார் இந்த அசோக்குமார்?
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே புதுப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் குமார். மாநில ஜெயலலிதா பேரவையின் இணை செயலாளராக பதவி வகிக்கிறார். இவருடைய தாயார் கே.எஸ். சௌந்தரம் அன்றைய திருச்செங்கோடு (இன்றைய ஈரோடு) லோக்சபா தொகுதியில் 1991-ல் எம்.பி.யாக வென்றவர். மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மகளான கருணாம்பிகாவை திருமணம் செய்துள்ளார் ஆற்றல் அசோக்குமார்.
அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த அவர், கோவையில் இளநிலை பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்காவில் முதுநிலை பொறியியல் படித்தவர், அங்கேயே மைக்ரோசாஃப்ட், இண்டெல், ஜெராக்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
தனது பெற்றோரைப் போல கல்வியாளர், அரசியல்வாதியாக விரும்பி, தாய்நாடு திரும்பிய அசோக் குமார், தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் – (TIPS) பள்ளி, கல்லூரி குழுமங்களைத் தொடங்கினார். ஆற்றல் அறக்கட்டளை என்னும் பெயரில், டிப்ஸ் கலை, அறிவியல் கல்லூரி, டிப்ஸ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட், தி டிப்ஸ் குளோபல் இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
ஆற்றல் உணவகம் என்ற பெயரில் ரூ.10-க்கு மலிவு விலை உணவகத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த உணவகங்கள் ஈரோடு, குமாரபாளையம், தாராபுரம், காங்கயம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அதேபோல, ஆற்றல் மருத்துவமனை என்ற பெயரில்ரூ.ரூ 10-க்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றது. இங்கு குறிப்பிட்ட மருந்துகள் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல 90-க்கும் மேற்பட்ட கிராமப்புற அரசுப் பள்ளிகளையும் சீரமைத்து உள்ளதாகவும் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
சொத்து மதிப்பு எவ்வளவு?
ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கு ரூ.526 கோடியே 53 லட்சத்து 9500 ரூபாய் அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும். வங்கிக் கணக்குகளில் ரூ.6.99 கோடி ரொக்கமும், 10.01 கிலோ நகையும் கையிருப்பு ரூ.10 லட்சம் ஆகியவை உள்ளன. இத்துடன் குடும்ப சொத்து மற்றும் தனது சுய சம்பாத்திய சொத்து என மொத்தம் ரூ 56.95 கோடி அசையா சொத்துகளும் அசோக் குமார் வசம் உள்ளன. அசோக்குமாருக்கு மொத்தமாக ரூ.582.95 கோடி சொத்து உள்ளதாக தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு சொந்த கார், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள அசோக்குமார், ரூ.12 லட்சம் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகள் :
பதவி சுகம் காண வரி ஏய்ப்பு செய்ய அறக்கட்டளையை காரணம் காட்டி சமூக சேவை என்ற பெயரில் சில வருடங்களாகவே ஆற்றல் அசோக்குமார் பெயரில் 10 ருபாய் சாப்பாடு, 10 ருபாய் ட்ரீட்மெண்ட் என வழங்கி வந்தவர் தற்போது பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவி எம்பி சீட் பெற்று உள்ளார். என்கிறார்கள்.
”சேவை வழங்கியதை விளம்பரங்கள் செய்து அதை ஓட்டுக்களாக அறுவடை செய்ய நினைக்கிறார் எனவும் இவருடைய தாயார் அதிமுக எம்பியாக இருந்த போது எந்த திட்டமும் செய்யவில்லை” என்று திமுக வேட்பாளர் பிரகாஷ் பிரசாரத்தில் குற்றம்சாட்டினர். இதை சாக்காக வைத்து எடப்பாடி பழனிச்சாமி கையில் எடுத்த அதே ஆயுதத்தை, எனது தாயாரை கேவலப்படுத்தியும், இழிவு படுத்தியும் பேசுவதாக வதந்தியை பரப்பி வருகிறார்” என குற்றஞ்சாட்டுகின்றனர் தொகுதிவாசிகள்.
அதிமுக வேட்பாளர்கள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் பாஜகவில் இருந்து வந்தவர்கள் என்று சில தினங்களுக்கு முன்னர் இந்திய கம்யூனிஸ்டு சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.எம்.ஜி.