அங்குசம் பார்வையில் ஹாட் ஸ்பாட் !
இப்படி நான்குவிதமான கதைகளைச் சொல்லி பார்வையாளனுக்கு செம ஹாட் & ஹீட் ட்ரீட் கொடுத்து அசத்திவிட்டார் டைரக்டர் விக்னேஷ் கார்த்திக் ...
அங்குசம் பார்வையில் ஹாட் ஸ்பாட் !
தயாரிப்பு; ’கே.ஜே.பி. டாக்கீஸ்’ கே.ஜே.பாலமணி மார்பன், சுரேஷ்குமார், கோகுல் பினோய். வெளியீடு: சிக்ஸர் எண்டெர்டெய்ன்மெண்ட். எழுத்து & இயக்கம்: விக்னேஷ் கார்த்திக். நடிகர்—நடிகைகள்: கலையரசன்– சோஃபியா, சாண்டி—அம்மு அபிராமி, சுபாஷ்—ஜனனி அய்யர். ஆதித்யா பாஸ்கர்—கெளரி கிஷன். இசை: சதீஷ் ரகுநாதன் & வான். ஒளிப்பதிவு: கோகுல் பினோய், எடிட்டிங்: முத்தையன். நிர்வாகத் தயாரிப்பாளர்: ஆர்.பாலகுமார். பி.ஆர்.ஓ.வேலு.
இந்தப் படத்தின் டைரக்டர் விக்னேஷ் கார்த்திக்கும் அவரது கதையும் தான் ஹீரோக்கள், ஹீரோயின்கள். சினிமா தயாரிப்பாளர் ஒருவரிடம் உதவி இயக்குனர் ஒருவர் கதை சொல்வது போல் தான் படம் ஆரம்பிக்கிறது. அந்த உதவி இயக்குனர் தான் படத்தின் நிஜ இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். கதை கேட்க ஆரம்பிக்கிறார் தயாரிப்பாளர்.
“ஓப்பன் பண்ணா” என ஆரம்பிக்கிறார் விக்னேஷ் கார்த்திக். ஆதித்யா பாஸ்கர்-கெளரி கிஷன் லவ் ஜோடி. கல்யாணத்தை தள்ளிப்போடலாம் என்கிறார் கெளரி கிஷன். காரணம் கேட்கிறார் ஆதித்யா பாஸ்கர். இமேஜினேஷன் ஸ்டார்ட் ஆகிறது.
மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்கப் போவார்கள். பெண்ணிடம் காபி கொடுத்து அனுப்புவார்கள். தலைகுனிந்தபடியே வந்து எல்லோருக்கும் காபி கொடுத்துவிட்டு, “எடுத்துக்கங்க” என மாப்பிள்ளையிடன் காபி டம்ளரை நீட்டுவார் பெண். இது தான் அப்போதிலிருந்து இப்போது வரை வழக்கம். ஆனால் ஆதித்யா பாஸ்கரின் இமேஜினேஷனில் இதற்கு நேர்மாறாக இருக்கிறது. தலைகுனிந்தபடி காபி ட்ரேயுடன் வருகிறார் ஆதித்யா. கல்யாணத்தின் போது ஆதித்யா பாஸ்கருக்கு கெளரி தாலி கட்டுகிறார். அதன்பிறகு கெளரி வீடு தான் ஆதித்யாவுக்கு புகுந்த வீடாகிறது. மனைவி வேலைக்குப் போகிறார். ஆதித்யா சமைத்துப் போடுகிறார், துணி துவைக்கிறார், பெற்றவர்களைப் பார்க்க மனைவியிடம் பெர்மிஷன் கேட்கிறார். திடீரென தாலியைக் கழட்டி வைத்துவிடுகிறார். திடுக்கிட்டு முழிக்கிறார். கனவு கலைகிறது.
அதன் பின் வழக்கமான முறையில் பெண் பார்க்கும் படலம் நடக்கிறது. கனவில் கண்டதெல்லாம் நடக்கணும் என்கிறார் ஆதித்யா பாஸ்கர். ‘பிராக்டிக்கலா அது எப்படி முடியும்” என்கிறார்கள் பெருசுகள். ”முதன் முதலில் விதவையான பெண் வெள்ளைச் சேலை கட்ட மறுத்த போதும், முதன்முதலில் நிலாவில் கால் வைத்த போதும் இது பிராக்டிக்கலா முடியுமா என யோசிச்சிருந்தா” இந்த பொளேர் வசனத்தை ஆதித்யா பாஸ்கர் பேசுவதுடன் முதல் கதையை முடிக்கிறார் விக்னேஷ் கார்த்திக்.
அடுத்து இரண்டாவது கதை ஸ்டார்ட் …
சாண்டியும் அம்மு அபிராமியும் லவ்வர்கள். பெத்தவர்கள் சம்மதிக்கமாட்டார்கள் என்பதால், ”என்னோட ஃப்ரண்ட் பவித்ராவை லவ் பண்றேன். அவளைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என குண்டைத் தூக்கிப் போடுகிறார் அம்மு அபிராமி. ‘என்னடி இது கருமம். ஒரு ஆம்பளய லவ் பண்ணித் தொலைச்சிருந்தாலும் சந்தோஷப்பட்டிருப்போம்” என்கிறார்கள் பெத்தவர்கள். ’இதைத் தான் எதிர்பார்த்தேன்’ என்றபடி சாண்டியுடனான காதலைச் சொல்கிறார் அம்மு அபிராமி.
அதன் பின் சாண்டியின் அம்மா—அப்பாவைப் பார்க்கப் போகிறார் அம்மு. அப்போது தான் தெரிகிறது சாண்டியின் அம்மாவும் அம்முவின் அம்மாவும் கூடப்பிறந்த அக்கா—தங்கைகள் என்று. பேரிடி தலையில் விழுந்தது போல உணர்கிறார்கள் சாண்டியும் அம்முவும். தங்கள் கழுத்தில் தாங்களே கத்தியை வைக்கிறார்கள். இரண்டாவது கதையைச் சொல்லி முடிக்கிறார் விக்னேஷ் கார்த்திக்.
ரெஸ்ட் ரூம் போகிறார் தயாரிப்பாளர். இடைவேளை …
மூன்றாவது கதை ஆரம்பிக்கிறார் விக்னேஷ். டி.வி.சேனல் ஒன்றில் ரிப்போர்ட்டராக இருக்கும் ஜனனி ஐயர், ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் சுபாஷை லவ் பண்ணுகிறார். ஆபீஸ் ரெஸ்ட் ரூமில் எசகுபிசகாக மாட்டியதால் வேலையைவிட்டு நிற்கிறார் சுபாஷ். ஒரு ஆள்( திண்டுக்கல் சரவணன்) மூலம் பணக்கார ஆண்ட்டிகளை சேடிஸ்ஃபைட் பண்ணும் ஆண் விபச்சாரகனாகிறார் சுபாஷ். பணம் கொட்டுகிறது. ஒரு கட்டத்தில் ஜனனிக்கு இது தெரிந்துவிடுகிறது. ”அடச்சீ’’ என காரித்துப்புகிறார். ஆனால் சுபாஷோ அது வெறும் ‘லஸ்ட்’ உன்மேல் வச்சிருக்கிறது லவ் என்கிறார் சுபாஷ்.
“இதையே நான் பண்ணா பிராத்தல். நீ பண்ணா லஸ்ட்டா” என பொளேர் என போட்டுத் தாக்குகிறார் ஜனனி.
தண்ணி குடிக்கிறார் தயாரிப்பாளர். நான்காவது கதை ஸ்டார்ட் ஆகிறது.
ஆட்டோ டிரைவர் கலையரசன். அவரது மனைவி சோஃபியா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றில் மகளை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற பேராசை சோஃபியாவுக்கு. அந்த ஷோ நடத்துபவர்களின் விபரீத ஸ்கிரிப்ட்டால் பலியாகிறாள் கலையரசனின் மகளான அந்த சிறுமி. இதனால் அதே ஷோவில் “குழந்தைய குழந்தையா வளருடங்கடா நாசமாப்போறவனுகளா” என வெடித்துக் குமுறுகிறார் கலையரசன்.
இப்படி நான்குவிதமான கதைகளைச் சொல்லி பார்வையாளனுக்கு செம ஹாட் & ஹீட் ட்ரீட் கொடுத்து அசத்திவிட்டார் டைரக்டர் விக்னேஷ் கார்த்திக். நான்கு கதைகளிலுமே சட்டேரென வசனங்கள் வைத்து லாஜிக் மீறாமல் கொண்டு போயிருப்பது தான் டைரக்டரின் வித்தைக்காரத்தனம். படத்தின் எல்லா கேரக்டர்களுமே மனதில் நிற்பது தான் படத்தின் மிகப்பெரிய பலம். மியூசிக் டைரக்டர்கள் இருவருமே மிகச் சரியான இடத்தில் மிகச்சரியான உணர்வுகளை நமக்குள் கடத்த ரொம்பவே உழைத்திருக்கிறார்கள்.
இந்த ‘ஹாட் ஸ்பாட்’ சூப்பர்குட் ஸ்பாட். வாழ்த்துக்கள் விக்னேஷ் கார்த்திக் ப்ரோ.
மதுரை மாறன்