எப்படிப் பார்த்தாலும் அரசியலில் ஐந்து பைசாவுக்குக் கூடத் தேறாத விஜய் !
விஜய் பரிதாபங்கள் !!
ஈரோடு வந்திருந்த விஜய் வெளிப்படையாக தமது அறியாமையை மட்டுமல்லாமல் தமது பக்குவமற்ற ஆளுமையை மேடை போட்டுத் தாமே வெளிப்படுத்தியிருக்கிறார்.
காளிங்கராயன் வாய்க்காலின் அடிப்படை சிறப்பு என்பது பள்ளமான பகுதியில் இருந்து மேடான பகுதிக்குத் தண்ணீர் கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படும் வியக்க வைக்கும் திட்டம்.
மின்சாரம், எந்திரம் இன்றி பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு எப்படி தண்ணீரை கால்வாய் மூலம் எடுத்துச் செல்வது ? அதுதான் காளிங்கராயன் வாய்க்காலின் இயற்கை அறிவியல் தொழில் நுட்பம்.
தண்ணீரை ஓடவிட்டு அதை வேகப்படுத்தும் விதமாக சிறு சிறு தடுப்பு (அணை போன்ற) சுழற்சி ஏற்படுத்தி தண்ணீருக்கு ஒரு வேகத்தை உண்டாக்கி மேட்டுக்குக் கொண்டு சென்று இருக்கிறார். மேலும், தானோ தமது வாரிசுகளோ எவரும் ஒருபோதும் காளிங்கராயன் வாய்க்கால் நீரை குடிக்கக் கூடப் பயன்படுத்த மாட்டோம் என்று சபதம் செய்து கொடுத்தவர் காளிங்கராயன்.
இதுகுறித்து எந்த ஒரு சிறு குறிப்பும் விஜயின் பேச்சில் இல்லை.
மாறாக சம்பந்தமே இல்லாமல் அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தையும் காளிங்கராயன் கால்வாய் திட்டத்தையும் ஒப்பிட்டு ஏதோ உளறுகிறார்.
அடுத்து வகுப்பு வாத பிரதிநிதித்துவம் கொண்டுவர போராட்டம் நடத்தி அதனைக் கொண்டு வந்தவர் ஈ.வெ.ராமசாமி என்று ஒரு அண்டப்புளுகை அவிழ்த்துவிட்டுளார் விஜய்.
வகுப்பு வாத பிரதிநிதித்துவம் Communal Reservation சட்டம் முதன் முதலில் அமல் படுத்தப்பட்டது பரமசிவன் சுப்பராயன் (கவுண்டர்) சென்னை மாகாண முதலமைச்சராக (பிரதமர்) இருந்த போது. அவர் திருச்செங்கோட்டை சேர்ந்தவர். ஈரோடு வந்திருந்த விஜய் இவர் குறித்து மூச்சே விடவில்லை.
பரமசிவன் சுப்பாராயன் அவர்கள், “சென்னை மாகாணத்தின் மேனாள் பிரதமர் (முதல்வர்) ஆவார். திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதுவர், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், மாநிலங்கவை உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மகாராட்டிர மாநில ஆளுநர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார்.”
இதெல்லாம் விஜய்க்குத் தெரியுமா ??!
நாடு விடுதலை அடையும் வரை சுப்பராயன் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்த வகுப்பு வாத பிரதிநிதித்துவ சட்டம்தான் சிறு சிறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு அமலில் இருந்தது. எனினும் முதன் முதலில் பிராமணர் அல்லாதவர்க்கும் வகுப்பு வாத பிரதிநிதித்துவ இட ஒதுக்கீட்டு சட்டத்தை அமல் படுத்தியவர் சுப்பராயன்தான்.
“ப.சுப்பராயன் (கவுண்டர்) ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் முதன் முறையாக அரசாங்க வேலைகளில் பிராமணர்கள் அல்லாத தலித்துகளுக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அரசாணை (Communal G. O. 1071) அமல் படுத்தப்பட்டது.
இதன்படி அரசு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் பன்னிரெண்டில் ஐந்து பங்கு (5/12) பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கப்பட்டது.
பிராமணர், ஆங்கிலோ இந்தியர், முஸ்லீம்கள் ஆகியோருக்கு தலா 2/12 பங்கும், தாழ்த்தப் பட்டோருக்கு 1/12 பங்கும் ஒதுக்கப்பட்டது. இவ்வாணை 1947 இல் இந்தியா விடுதலை பெறும் வரை அமலில் இருந்தது. 1947 இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், இது சற்றே மாற்றியமைக்கப்பட்டது.
பிரமணரல்லாத இந்துக்களுக்கு பதினான்கில் ஆறு பங்கும் (6/14), பிராமணர், தாழ்த்தப்பட்டோர், ஹரிஜனர் ஆகியோருக்கு தலா 2/14 பங்கும், ஆங்கிலோ இந்தியர், முஸ்லீம்களுக்கு தலா 1/14 பங்கும் வழங்கப்பட்டன.”
என்றால் வகுப்பு வாத பிரதிநிதித்துவதில் ஈ.வெ.ராமசாமியின் பங்களிப்பு என்ன ?
1921 ம் ஆண்டு செப்டம்பர் 16 ம் தேதியே வகுப்பு வாத பிரதிநிதித்துவ சட்ட அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது. சில அரசாணைகள் வெளியிடப் பட்டாலும் சட்டம் முறையாக அமலுக்குக் கொண்டு வரப்பட்டது 1926 க்குப் பிறகுதான். அதுதான் சுப்பராயன் சென்னை மாகாண முதலமைசராக (பிரதமராக) பொறுப்பு வகித்த காலகட்டம். (அதுவரை சில ஆண்டுகள் நீதிக்கட்சி ஆட்சியை இழந்திருந்தது, சுப்பராயன் சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருந்தார். அவரது ஆட்சி மீதும் இரண்டு முறை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆக 1921 முதல் 26 வரை வலுவான ஆட்சி இல்லாதிருந்ததும் சட்டம் அமலுக்கு வராமல் இருந்த காரணம்)
ஈ.வெ.ராமசாமி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக 1919 ம் ஆண்டில் இருந்து 1925 ம் ஆண்டுவரை ஆறு ஆண்டுகள் மட்டுமே இருந்தார். இந்த கால கட்டத்தில் சில ஆண்டுகள் மாகாண காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் செயலாற்றினார்.
வகுப்பு வாத பிரநிதித்துவதை அமல் படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஆண்டு மாநாட்டிலும் தீர்மானம் நிறைவேற்ற ஈ.வெ.ராமசாமி வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரது தீர்மானம் ஒவ்வொரு ஆண்டும் காங்கிரஸ் கட்சியால் நிராகரிக்கப்பட்டது.
இறுதியில் திரு.வி.க. தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் ஈ.வெ.ராவின் வகுப்பு வாத பிரதிநிதித்துவ தீர்மானத்தை நிராகரிக்கவே காங்கிரசில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கிறார் ராமசாமி.
ஆக, வழக்கம்போல தாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு குரல் கொடுப்பது, பத்திரிகைகளில் அறிக்கை வெளியிடுவது ஆகியவையே ஈ.வெ.ராமசாமி செய்த செயல்கள். அதனைக் கொண்டுவர வேண்டும் என்பதில் முனைப்பாக ராமசாமி இருந்தார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால், இதில் வகுப்பு வாத பிரதிநிதித்துவ சட்டத்தையே ஈ.வெ. ராமசாமிதான் அமல் படுத்தினார் என்பது போல விஜய் உருட்டுவது அபத்தமானது.
அவர் எதையாவது உளறிக்கொண்டு போகட்டும், அவர் சொல்வதே கட்டளை – சாசனம் என்று வெறியோடு திரிந்து கொண்டிருக்கும் அவரது ரசிகர்களும் மூடத்தனமான பொய்யான ஒரு வரலாற்றையே கற்றுக்கொள்வார்கள் என்பதுதான் கவலை தரும் செய்தி.
இந்த சிறு சிறு அடிப்படைத் தகவல்களை அளிக்கக் கூடவா விஜயை சுற்றி அறிவாளிகள் இல்லை ?!
விஜய்க்கும் – விஜய்க்காக மின்சார விளக்கு கம்பத்தில் ஏறி நிற்கும் ரசிகர்களுக்கும் இடையே எந்த அறிவாளிகளுக்கும் எந்த வேலையும் இல்லை போல !
— வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.