இவரு தான் ரேஷன் சேகரு… ரிட்டயர்டு ஆகியும் 6 வருஷம் ஆனாலும் இவரு தான் அதிகாரி ! அது எப்படி ?
இவரு தான் ரேஷன் கடை சேகரு… ரிட்டயர்டு ஆகியும் 6 வருஷம் ஆனாலும் இவரு தான் அதிகாரி ! அது எப்படி ?
துறையூர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் அதிகாரம் செய்து வரும் ரிட்டயர்டு நபரின் அட்ராசிட்டி தான் இந்த செய்தி. இதை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதற்கு காரணம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
திருச்சி மாவட்டம், துறையூர் மலையப்பன் சாலையில் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி எதிரே அமைந்துள்ளது. நெம்பர் -ஆர்.1215. துறையூர் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனையாளர் சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த வளாகத்தினுள் 2 நியாய விலைக்கடைகள் மற்றும் பொருட்கள் வைக்கும் குடோன்கள் உள்ளிட்டவை உள்ளன. இதில் நியாய விலைக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து கடந்த 2016-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற சேகர் என்பவர் தற்போது கூட்டுறவு விற்பனையாளர் அலுவலகத்தில் அதிகாரி போல் பணி செய்து கொண்டு வருகிறார். பணி ஓய்வு பெற்று சுமார் 6 வருட காலமாகியும் , அலுவலகத்தை விட்டு வெளியேறாமல், அதிகாரிகளின் துணையோடு அலுவலகத்திலும், எதிரே உள்ள பொருட்கள் வைப்பு குடோனை வீடு போல் மாற்றி சகல வசதிகளுடனும் ஜல்சா வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
மேலும் ரிட்டயர்டு நபரான சேகர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை ரேசன் கடை விற்பனையாளர்களே முன் வைக்கின்றனர். துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பிளாக்கில் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சிக்கத்தம்பூர், வெங்கடேசபுரம், நாகலாபுரம், கண்ணனூர், உப்பிலியபுரம், கோட்டப்பாளையம், எரகுடி, புலிவலம் உள்ளிட்ட 24 கூட்டுறவு சங்கங்கத்திற்குட்பட்ட சுமார் 167 ரேஷன் கடைகள் உள்ளது.
இது தவிர முசிறி பிளாக்கிற்குட்பட்ட 22 நியாய விலை கடைகளும் உள்ளடக்கி, இதில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை,துவரம் பருப்பு உள்ளிட்டவற்றை துறையூர் சிவில் சப்ளைமூலம் எடுத்து அனுப்புகிறார்கள். இவற்றில் கூட்டுறவு சங்கங்களுக்குட்பட்ட 167 ரேஷன் கடைகளுக்கும் 40 ஆயிரம் காலி 50 கிலோசாக்குகளை ரேஷன் கடை விற்பனையாளர்கள் திரும்ப இங்கு வந்து ஒப்படைக்க வேண்டும். இதனை இணைப்பதிவாளர், குறைந்தது 3 மாத காலத்திற்குள் விலைப்புள்ளி நிர்ணயம் செய்து ஆன்லைன் மூலம் ஏலம் விடுவது தான் நடைமுறை. இதற்கான விலைப்புள்ளியை திருச்சி இணைப்பதிவாளர் கொடுத்து விடுவார்.
அந்த விலைப்புள்ளி விபரத்தை, கடந்த 2011-ம் வருடம் முதல் 2018 – வரை 24 சங்கங்களின் எந்த ஒரு கூட்டுறவு சங்க செயலாளருக்கும் விலைப்புள்ளியின் காப்பியைக் கொடுக்காமல், ஓய்வு பெற்ற பின்னும் தற்போது வரை அலுவலகத்தில் அமர்ந்து அதிகாரி போல் பணி செய்யும் சேகர் என்பவரே ஒரு விலையை நிர்ணயம் செய்து காலி சாக்குகளை விலைப்புள்ளி தொகையை விடகுறைந்த விலைக்கு விற்று பல லட்சங்கள் வரை சுருட்டியுள்ளதாக விற்பனையாளர்களே புகார் கூறுகின்றனர்.
மேலும் இந்த அலுவலகத்தில் இரவு நேர வாட்ச்மேன் கிடையாது, சிசிடிவி கண்காணிப்பு கேமராவும் இதுவரை வைக்கப்படவில்லை. சிஎம்சி என சுருக்கமாக கூறப்படும் கூட்டுறவு கடன் சங்க வளாகத்திற்குள் நியாய விலைக்கடைகள் , கோதுமை மாவு அரைக்கும் இயந்திரங்கள், பொருட்கள் குடோன்கள் மற்றும் லாக்கர் உள்ளிட்டவை இருந்தும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் பாதுகாப்பற்ற சூழ்நிலையும், இரவு நேரங்களில் மர்மநபர்கள் பலர் வளாகத்திற்குள் வந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வருகிறது.
சர்வ அதிகாரங்களுடன் வலம் வரும் ரிட்டயர்டு நபரான சேகர் தனது பணிக் காலத்தில் ரேசன் பொருட்களை அதிக விலைக்கு வெளிச்சந்தையில் விற்றது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 4 முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளாராம். 2011 முதல் 2018 வரை விற்ற காலி சாக்குகளின் விபரங்களை முழுமையாகஆய்வு தணிக்கை செய்தால் இவரது ஊழல்கள், உண்மைகள் வெளிவரும் என்பது நிச்சயம் என்றும், இவரால் அரசிற்கு எவ்வளவு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தெரியும் என்பது தற்போது உள்ள விற்பனையாளர்களின் குற்றச் சாட்டாக உள்ளது. தற்போது வரை பல்வேறு முறைகேடுகளும் நடக்கின்றன என்றும் கூறுகின்றனர்.
திருச்சியில் நடைபெறும் இணை பதிவாளர் மீட்டிங்கிலும் , முசிறியில் நடைபெறும் துணைப் பதிவாளரின் மாதாந்திர கூட்டங்களிலும் ரிட்டயர்டு சேகர் கலந்து கொள்வதுண்டாம். சேகரின் ஊழல்கள் பற்றி கடந்த 4 ஆண்டுகளாக புகார் செய்தும் உயர் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிய வருகிறது. சேல்ஸ்மேன் 5 நபர்கள் , அலுவலக பணியாளர்கள் 3 பேர், பொருட்கள் எடுத்துச் செல்ல 3 பேர் என மொத்தம் 11 நபர்கள் வேலைப் பார்க்கக் கூடிய சிஎம்சி அலுவலகத்தில் பணி ஓய்வு பெற்ற சேகர், பொது மேலாளர் கற்பகம் , மேலாளர் பாலசுந்தரம் உள்ளிட்ட 3 நபர்களும் சேர்ந்து கொண்டு கூட்டுறவு பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கு பணி உயர்வு வழங்காமல் , அலுவலகத்திற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை எனவும் குறை கூறுகின்றனர்.
அதிகாரிகள் அலுவலக சம்பந்தமாக தகவல்கள் பெற பொது மேலாளரான கற்பகம் என்பவரைத்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற சூழலில் , ரிட்டயர்டு ஆகி 6 வருடத்திற்கு மேலாக அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வரும் சேகர் என்பவரிடம் தான் அதிகாரிகள் தொடர்பு கொள்கின்றனர்.
மேலும் இது குறித்து பொது மேலாளரான கற்பகம் தகவல் தர மறுக்கவே , கூட்டுறவு சார்பதிவாளரான (கூடுதல் பொறுப்பு) கள அலுவலர் உப்பிலியபுரம் இளங்கோ என்பவரிடம் விளக்கம் கேட்டபோது , “சேகர் என்பவரை நாங்கள் தான் பணி செய்ய வைத்துள்ளோம். அவர் எந்தப் பணி செய்தாலும் அதனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அவர் ரிட்டயர்டு ஆகி தற்போது சம்பளம் இல்லாமல் தான் வேலை பார்க்கிறார். எங்களுக்கு உதவி செய்கிறார். அவர் அலுவலகத்தில் வேலை செய்ய நாங்கள் தான் அனுமதி அளித்துள்ளோம் , மேலும் அவர் அங்கு தங்கி வருவதில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை” எனக் கூறினார்.
பணி ஓய்வு பெற்று 6 வருடங்கள் மேலாகியும் முன்னாள் விற்பனையாளரான சேகர் சர்வ அதிகாரங்களுடன் , சிஎம்சி குடோனில் அதிகாரிகளின் உறுதுணையோடு ஜல்சா வாழ்க்கை வாழ்ந்து வருவதைப் பார்க்கும் பொதுமக்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பூனைக்கு மணி கட்டப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
-ஜோஸ்