வீட்டிலேயே வெடி மருந்து ஃபேக்டரி ! சாத்தூர் ஷாக் ! பெரும் விபத்தை தடுத்த போலீசார் !
வீட்டிலேயே வெடி மருந்து ஃபேக்டரி ! சாத்தூர் ஷாக் !
பெரும் விபத்தை தடுத்த போலீசார் !
விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, பகுதிகளை உள்ளடக்கி நாளுக்கு நாள் சட்டவிரோத பட்டாசு உற்பத்திகள் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. அதை காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாக்பூர், சென்னை, மாவட்ட நிர்வாகம் என மூன்று வகைகளாக பல்வேறு துறையினரின் சட்ட விதிமுறைகளை பின்பற்றி பல கோடி ரூபாய் முதலீடு செய்து, பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி பெற்று பட்டாசு உற்பத்தி செய்து வருகின்றனர், ஆலை உரிமையாளர்கள்.
இவ்வளவு கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் அதையெல்லாம் ஓவர் டேக் செய்து, சட்டவிரோதமாக மாநில வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் கீழ் இருக்கும் முக்கிய வெடி மூலப் பொருள்கள் சாதாரணமாக கிடைக்கப்பெற்று, ஆங்காங்கே வீடுகளிலும் குடோன்களிலும் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்து வருகின்றனர்.
அப்படி ஒரு சம்பவம் தான் இங்கு அரங்கேறி உள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர் பகுதி எல்லைக்கு உட்பட்ட போக்குவரத்து நகரில் பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி அருகே, மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்த உஷா என்ற நபருக்கு சொந்தமான கட்டிடத்தை சிவகாசி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்தக் கட்டிடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அங்கு ஆய்வு மேற்கொண்ட போது, காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்படவில்லை. மாறாக, பெரிய அளவில் விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய பேன்சி வெடிகளுக்கு பயன்படுத்தப்படும் மணி மருந்து கலவைகளும் முக்கிய வெடி மூலப்பொருட்கள் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போயினர்.
மணி மருந்து கலவைகள் குறிப்பிட்ட கால அளவிற்குள் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அதிக வெப்பமானாலும், அல்லது ஈரப்பதம் ஆனாலும், உடனடியாக வெடிக்கும் தன்மை கொண்டது. அப்படிப்பட்ட மணி மருந்து கலவைகளை உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு தண்ணீர் ஊற்றி மணி மருந்து கலவைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி பெரும் விபத்தை தடுத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் மீதும் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு மூலப்பொருள் கலவை உற்பத்தி செய்தது மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது என இரண்டு பிரிவின் கீழ் சாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்ததின் பேரில் சாத்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்., இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ரகசியமாக பட்டாசு உற்பத்தி செய்பவர்கள் குறித்த தகவலை 94439 67578 என்னில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், ஆலைகளின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பட்டாசு தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இதே அலைபேசி எண்ணிற்கு வாட்ஸ் ஆப் செய்யவும். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும், என மாவட்ட நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தொடர்பு எண் கொடுக்கப்பட்டது.
அதில் தற்போது வாட்ஸ் அப் செயல்படவில்லை போன் செய்து பார்த்தால் இந்த எண் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை என சொல்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். உடனடியாக இந்தக் குறைபாடுகளை சரி செய்ய வேண்டுமென கோரிக்கையும் வைக்கின்றனர்.
மாரீஸ்வரன்.