போலி ஒப்பந்த பத்திரம்..! சிபிசிஐடி வழக்கில் சிக்கும் அதிமுக பிரமுகர்
-அங்குசம் டீம்
கரூர் மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள நல்லியம்பாளைத்தை சேர்ந்த பாப்பாத்தி, சரஸ்வதி, அர்ஜுனன் இவர்களுக்கு சொந்தமான 24 ஏக்கர் நிலத்தை கடந்த 2007ஆம் ஆண்டு கோடந்தூர் கிராம ஊராட்சித் தலைவரும் அதிமுகவை சேர்ந்தவருமான தொழிலதிபர் ரவிச்செல்வன் என்பவர் 20 ரூபாய் பத்திரத்தில் மோசடியான முத்திரைத்தாள் மூலம் அர்ஜுனன் மட்டும் கிரய ஒப்பந்தம் செய்து கொடுத்ததாகக் கூறி, பதிவு செய்யப்படாத ஒரு போலியான கிரைய ஒப்பந்தத்தை உருவாக்கி அதன் மூலம் முழு சொத்தையும் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாப்பாத்தி கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் பாப்பாத்தி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் கடந்த 10ஆம் தேதி அர்ஜுனன், பாப்பாத்தி, சரஸ்வதி ஆகியோரிடமிருந்து 24 ஏக்கர் நிலத்தை மோசடி முத்திரைத்தாள் மூலம் ரவிச்செல்வன் அபகரிக்க முயன்றாரா என்பது குறித்து கரூர் சிபிசிஐடி விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. விசாரணையை 12 வாரத்தில் முடித்து அறிக்கையை தாக்கல் செய்யவும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், “தொழிலதிபர் ரவிச்செல்வன் மீதான வழக்கு விசாரணையை சிபிசிஐடி நடத்த உள்ள நிலையில், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என மூதாட்டி பாப்பாத்தி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
மூதாட்டி பாப்பாத்தியை ஏமாற்றியதாக கூறப்படும் ரி.ஸி.ரவிச்செல்வன் கோடந்தூர் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்தபோது கோடந்தூர் ஊராட்சியில் செய்த நிதி முறை கேடுகள், ஊழல்கள், மோசடிகள் மட்டுமின்றி அவர் மீது அரசு நில அபகரிப்பு, தீண்டாமை கம்பிவேலி அமைத்து ஆக்கிரமிப்பு, மின்சார திருட்டு, நடுஆற்றில் வட்டக்கிணறு அமைத்து தண்ணீர் திருட்டு, சட்ட விரோத ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு, பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதையில் ஆபத்தான மின்சார வயர்களை புதைத்து ஆக்கிரமிப்பு, பொதுமக்கள் குடிநீர் கைப்பம்பிற்கு அருகில் சட்ட விரோத ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் திருடுவது என ஏராளமான புகார்களுக்கு உள்ளாகியுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழக நெடுஞ்சாலைத்துறை என அரசுத்துறைகளே இவர் மீது தென்னிலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
மேலும் அதே பகுதியை சார்ந்தவரை காரில் கடத்தி சென்று துப்பாக்கி முனையில் மிரட்டி வெற்று பத்திரத்தாள்களில் கையொப்பம் பெற்ற வழக்கு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் புகார்கள் குறித்து ரவிச்செல்வனிடம் கேட்ட போது, “நான் வெளியூரில் இருக்கிறேன். நேரில் வந்து பேசிக் கொள்ளலாம். மேலும் இந்த புகார் பொய்ப் புகார்” என கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்