ரெட் பிக்ஸ் ஜெரால்டுக்கு என்னாச்சு ! விடை தெரியாத கேள்விக்கான விடையை கொடுத்த திருச்சி சைபர் க்ரைம் போலீஸ்
ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் வெளியான சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய காணொளி, “சமுதாயத்தில் பல்வேறு துறைகளில், குறிப்பாக காவல் துறையில் பாலின சமத்துவ வேறுபாடின்றி சீரிய முறையில் பணிபுரிந்து வரும், பெண் காவலர்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ள”தாகவும்; ” பெண்கள் அனைவரும் பதவி உயர்விற்காகவும், பணி இட மாறுதல்களுக்காகவும், பாலின ரீதியாக உயர் அதிகாரிகளிடம் சமரசம் செய்து கொள்வதாக கூறி ஒட்டுமொத்த பெண் இனத்தையே இழிவுபடுத்தியுள்ளார்” என்பதாகவும் குறிப்பிட்டு, திருச்சி மாவட்டம், முசிறி உட்கோட்ட டி.எஸ்.பி.யாக பணியாற்றிவரும் செல்வி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மற்றும் வீடியோவை வெளியிட்ட ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
டி.எஸ்.பி.யாசின் அளித்த புகாரின் பேரில் திருச்சி மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண். 21/24 U/s 294(b), 353, 509 IPC, 67 IT act and 4 of TN prohibition of harassment of women act பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, மேற்படி குற்ற செயலுக்கு தூண்டுதலாக இருந்த ரெட் பிக்ஸ் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு இரண்டாம் குற்றவாளியாகவும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை மே-10 அன்று இரவு 11 மணியளவில் ஜெரால்டு கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. திருச்சி எஸ்.பி. வருண் குமாரின் தனிப்படை போலீசார் டெல்லிக்கே சென்று கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, டெல்லியில் இருந்து விமானம் வழியாக திருச்சிக்கு அழைத்து வரப்படுகிறாரா? இரயிலில் அழைத்து வரப்படுகிறாரா? என்ற எந்த தகவலும் போலீசார் தரப்பில் உறுதிபடுத்தாத நிலையில், என் கணவருக்கு என்ன ஆயிற்று என்று கண்ணீரோடு திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் காத்திருந்தார் ஜெரால்டு மனைவி ஜேன் ஆஸ்டின்.
இரண்டு நாளாக எனது கணவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இடையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருப்பதாகவும், உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் இன்ஸ்பெக்டர் வீரமணி என்பவர் பேசினார். அதன் பிறகு அவரும் எனது அழைப்பை தொடர்ந்து நிராகரிக்கிறார். என் கணவரின் நிலை குறித்து எதுவும் அறியமுடியவில்லை. சவுக்கு சங்கருக்கு நிகழ்ந்தது போல என் கணவருக்கும் நிகழலாம் என்பதாக அச்சம் தெரிவித்திருந்தார் ஜெரால்டு மனைவி.
இந்நிலையில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் தற்போது ஜெரால்டு ஆஜர் படுத்தப்பட்டிருக்கிறார். டெல்லியில் இருந்து ரயில் வழி சென்னைக்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் சென்னையில் இருந்து திருச்சி மாவட்ட போலீசாரின் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட தாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
கணவரை காண அவரது மனைவியும் காத்திருக்கிறார். சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்தில் தற்போது விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனையடுத்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நாட்களாக ரெட் பிக்ஸ் ஜெரால்டு க்கு என்ன ஆயிற்று? என்ற விடை தெரியாத கேள்விக்கான விடையை வழங்கியிருக்கின்றனர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார்.
ஆதிரன்.
வீடியோ
https://youtu.be/TBvlVuPnfi8