அங்குசம் வழியே அம்பலமான முறைகேடு – அதிகாரிகள் 11 பேர் மீது பாய்ந்தது வழக்கு

0

பிரதமர் வீடு கட்டும் திட்டம் : அங்குசம் வழியே அம்பலமான முறைகேடு – அதிகாரிகள் 11 பேர் மீது பாய்ந்தது வழக்கு –  பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் பயணாளிகளுக்கு வீடு ஒதுக்கியதில் முறைகேடு நிகழ்ந்ததாக எழுந்த புகாரில் சிக்கிய அதிகாரிகள் 11 பேர் மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்திருக்கும் நிலையில், எந்நேரமும் கைது நடவடிக்கை பாயலாம் என்ற அச்சத்தில் உறைந்து கிடக்கிறார்கள் ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகள்.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு

திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம், மருதூா் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த ஊழலை, “லால்குடி ஒன்றிய பகுதியில் ரூ.18 இலட்சம் கையாடல். இறந்த பின் பயணாளிகளின் கைரேகையைப் பயன்படுத்தி பணம் எடுத்தது அம்பலம்!” என்ற தலைப்பில், கடந்த டிசம்பர்-2022 ஆம் ஆண்டில் முதன் முதலாக செய்தி வெளியிட்டது அங்குசம் இதழ்.

அங்குசம் இதழ் வெளியே வெளிச்சத்துக்கு வந்த இந்த முறைகேடு குறித்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமை செயலயகத்திலிருந்து உத்தரவு பறக்க, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஐ.ஏ.எஸ். உரிய விசாரணை செய்து நிகழ்ந்த முறைகேடு மற்றும் முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகளின் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பித்திருந்தார்.

- Advertisement -

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில், திருச்சிராப்பள்ளி மாவட்ட உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு) மற்றும் உதவி திட்ட அலுவலர் (ஊ.வே) ஆகியோரால் தள விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமர்ப்பித்த அறிக்கையில், “மருதூர் ஊராட்சியில் தங்கப்பொண்ணு க/பெ பெரியண்ணன் என்பவருக்கும் இவரது மகனான நீலகண்டன் த/பெ பெரியண்ணன் என்பவருக்கும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதும்; 16.10.2020 அன்றே தங்கப்பொண்ணு இறந்துவிட, வேறொரு நபரால் தரைமட்டம் வரை கட்டப்பட்ட வீட்டினை புவிசார் குறியீடு போட்டோ எடுத்து 09.12.2020 மற்றும் 28.04.2021 ஆகிய தேதிகளில் இரண்டு தவணைகளில் முறைகேடான முறையில் பணம் வழங்கப்பட்டிருக்கிறது.” என்பதை பதிவு செய்திருக்கிறார்கள். மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர் பதவிகளை பட்டியலிட்டு, அவர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதி எண் 17ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஆட்சியரின் அறிக்கையில் தெளிவுபடுத்தியிருந்தார்.

4 bismi svs

இதற்கிடையில், அதே மருதூர் ஊராட்சியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களை பயனாளிகளாக காட்டியும், ஒரே வீட்டை இருவரது வீடாக காட்டியும் இறந்தவா்களின் பெயா்களில் வீடுகள் ஒதுக்கியும் சுமார் 70 வீடுகளுக்கு முறைகேடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இலால்குடியை சேர்ந்த உதயகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, தொடர்புடைய அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும்; அவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுப்பது தொடா்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகவும் அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இவ்வழக்கில், “ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் இது தொடர்பாக விசாரணை நடத்தி, தவறிழைத்த அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற உத்தரவைப் பிறப்பித்தது, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றி, தற்போது பல்வேறு இடங்களுக்கு பணியிடமாறுதல் பெற்று பணியாற்றி வரும் தொட்டியம் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணகுமாா், புள்ளம்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன், புள்ளம்பாடி துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா், துறையூா் ஓவா்சியா் வெங்கடேஷ்குமாா், முன்னாள் தொழில்நுட்ப உதவியாளா் கிளிண்டன், மண்ணச்சநல்லுாா் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லோகநாதன், புள்ளம்பாடி மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பால்ராஜ், அந்தநல்லுாா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காளிதாஸ், இளநிலை பொறியாளா்கள் ரங்கநாதன், தாத்தையங்காா்பேட்டை பரணிதா், இவா்களுக்கு உடந்தையாக இருந்ததாக தனிநபா் தமிழ்செல்வன் ஆகிய 11 போ் மீதும் சட்டத்துக்கு புறம்பாக போலி ஆவணங்களை உருவாக்குதல், அரசுக்கு இழப்பு ஏற்படுத்துதல், கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு

நீதிமன்ற உத்தரவையடுத்து இலஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தாலும், இதுவரை கைது நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. டிசம்பர் – 2022 ஆம் ஆண்டு அம்பலமான ஒரு முறைகேடு தொடர்பான விவகாரத்தில், வழக்குப்பதிவு செய்யவே ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் நீண்ட நெடிய சட்டப்போராட்டத்தை நடத்த வேண்டியிருப்பதென்பது, காலக்கொடுமை. இலஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவு செய்த வழக்கில் கைது நடவடிக்கைக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதையும் பொருத்திருந்துதான் பார்ப்போமே!

– ஆதிரன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.