ஒரு அடி வேணாலும் அடிச்சிக்கோங்க – நெகிழ வைத்த அரசு பேருந்து டிரைவர் ! அமைச்சரே தயவு செய்து கவனிங்க….
ஒரு அடி வேணாலும் அடிச்சிக்கோங்க … என் கையில் எதுவுமே இல்லை – நெகிழ வைத்த ஓட்டுநர் ! திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பெரம்பலூர் மார்க்கமாக கிழுமத்தூர் என்ற குக்கிராமம் நோக்கி பயணமானது அந்த புறநகர் பேருந்து. இரவு 8 மணிக்கு கிளம்பிய பேருந்து என்பதால், பணிமுடித்து திரும்பும் ஆண்களும் பெண்களுமாக பேருந்து இருக்கைகள் நிரம்பியிருந்தது.
பயண தூரத்தில் சரிபாதி தூரத்தைக்கூட தாண்டாத நிலையில் சமயபுரம் டோல்பிளாசாவை கடந்தபோது, பேருந்து கோளாறால் நடுவழியில் நிறுத்த நேரிட்டது. திருச்சி – சென்னை பைபாஸ் என்பதாலும் இரவு நேரம் என்பதாலும் அதிவேகமாக பயணிக்கும் வாகனங்களால் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆமை வேகத்தில் பேருந்தை சற்று தொலைவு நகர்த்தி பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினார், ஓட்டுநர்.
பத்து நிமிட போராட்டத்திற்குப்பிறகு, மீண்டும் புறப்பட்ட பேருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்குள் மீண்டும் பிரச்சினையை எதிர்கொண்டது. இப்போது நிறுத்தப்பட்ட இடம் இருள்சூழ்ந்த இடமாக இருந்த நிலையில், பணிமுடித்து திரும்பிய பெண்களும், குறிப்பாக இளம்பெண்கள் சிலரும் பதட்டமான மனநிலைக்கு ஆளாகினர். இதற்குள்ளாக, என்ன பிரச்சினை? என்ன ஆனது? என்பதையெல்லாம் சற்றும் புரிந்துகொள்ளாமல், சகட்டு மேனிக்கு ஓட்டுநரையும், நடத்துனரையும் வசைபாட ஆரம்பித்துவிட்டார்கள் பேருந்து பயணிகளுள் சிலர்.
“இது டெக்னிக்கல் பிரச்சினை. நான் ஒன்னுமே பண்ண முடியாது. என்னை வேணாலும் ஒரு அடி அடிச்சிக்கோ.” என எகிறிய பயணிகளிடம், பொறுப்பாக பதிலுரைத்த அந்த ஓட்டுநரின் அணுகுமுறை கவனத்தை பெற்றது.
”பிரச்சினையோட இருக்கிற வண்டிய ஏன் சார் எடுத்திட்டு வர்றீங்க? ஏற்கெனவே, இதுமாதிரிதான், வண்டி எப்போ, எங்கே வேனாலும் நின்றிடும். வண்டியில பிரச்சினை இருக்கு. வரும்போதே நாலு இடத்தில நிப்பாட்டி நிப்பாட்டிதான் வந்தோம். எப்படியாவது பெரம்பலூர் டிப்போவில கொண்டுபோய் சேர்க்கனும்னு போய்ட்டு இருக்கோம். நாலு ஸ்டாப் மட்டும் ஏறுங்கனு சொல்லி ஏத்துனாங்க.” என்று தமக்கு ஏற்பட்ட பழைய அனுபவத்தை பகிர்ந்தார் பயணி ஒருவர்.
“இப்பவே, மணி 8.30 ஆச்சு. பெரம்பலூருக்கு முன்னாடியே நின்னுட்டதால பிரச்சினை இல்லை. ஒரு கால் மணி நேரம் காத்திருந்தா, அடுத்த பஸ் வரும் அதுல ஏறி போயிடலாம். இதே, பெரம்பலூர்ல இருந்து கிழுமத்தூர் உள்காட்டு பகுதியில இந்த மாதிரி ஆச்சுனா, என்ன பன்றது? நடுகாட்ல மொத்த பேரும் தவிச்சிட்டு நிக்கிறதா? இதுபோல, பிரச்சினையோட இருக்கிற வண்டிகளை, உட்காடுகளுக்கு போற ரூட்ல விடக்கூடாது.” என தொடர்ந்தார் மற்றொரு பயணி.
”எதுவுமே எங்க கையில் இல்லைங்க. பிரச்சினைனா சொல்லுவோம். சரிசெய்து கொடுப்பாங்க. மோட்டார் பொறுத்தவரைக்கும் எந்நேரம் எது ஆகும்னு கணிக்க முடியாதுங்க. பயணிகளோட நேரடியாக பதில் சொல்ற இடத்துல நாங்க இருக்கிறதால, வேற வழியில்லை. நீங்க சொல்றது கேட்டுதான் ஆகனும். உங்க பிரச்சினையை எங்க மேலதிகாரிக்கும் சொல்றோம்.” என அப்போதும் பொறுமையாகவே பதிலுரைத்தார், அந்த ஓட்டுநர்.
நடுவழியில் பழுதாகி பேருந்து ஒன்று ஓரங்கட்டி நிற்கிறது. பயணிகள் எல்லாம் சாலையோரம் காத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் துளியும் கவனிக்காமல், பெருங்கூச்சல் எழுப்பியதையடுத்து ரொம்பவும் தள்ளி நின்றது பேருந்து ஒன்று. திட்டக்குடி டெப்போ வண்டியாம். பெரம்பலூர் டெப்போவில் பயணித்த பயணிகளை ஏற்றமுடியாது என வாதிட்டார் த.நா.32 நா.4006 என்ற பதிவெண் கொண்ட பேருந்தின் நடத்துனர்.
ஆத்திரமடைந்த பயணிகள் வசைபாட, வேறுவழியின்றி பெரம்பலூர் டிக்கெட் மட்டும் ஏறிக்கொள்ளுங்கள் என மனமிறங்கி ஏற்றிக்கொண்டு சென்றார், அந்த நடத்துனர். நடுவழியில் இருள் சூழ்ந்த இடமாக இருப்பதாலும், பெண் பயணிகள் பலர் இருந்ததாலும், இன்னும் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் பாதுகாப்பாக பேருந்தை நிறுத்தி மாற்றுப் பேருந்தில் மாற்றிவிடலாம் என்ற முடிவோடு மீண்டும் பேருந்து பைய நகர்த்தினார் ஓட்டுநர்.
திருச்சி-சென்னை பைபாஸில் ஆமை வேகத்தில் பேருந்து ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது. பின்னால் வந்துகொண்டிருந்த பெரம்பலூர் டிப்போவை சேர்ந்த ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தை நிறுத்த சொல்லி கையால் சைகை செய்கிறார். முகப்பு விளக்கை அணைத்து சிக்னல் கொடுக்கிறார். இவை எதையும் கண்டுகொள்ளாமல், அந்தப் பேருந்தும் நிறுத்தாமல் கடந்துபோனது. கடைசியாக, அதன்பின் வந்த மற்றொரு பேருந்தில் மிச்சமிருந்த பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள்.
பேருந்துகள் எதிர்பாராமல் பழுதடைந்ததை குற்றமாக சொல்வதற்கில்லை. பி.எஸ்.4 வகையைச் சேர்ந்த பேருந்துகள் அனைத்துமே இதுபோன்ற குறைபாட்டை கொண்டிருப்பதாக சொல்கிறார்கள் ஓட்டுநர்கள் தரப்பில். தமிழகம் முழுவதும் கிட்டதட்ட 13,000 அதிகமான பேருந்துகள் பி.எஸ்.-4 வகையைச் சேர்ந்தவைதான் என்கிறார்கள். எல்லாமே சென்சார் பொருத்தப்பட்டவை என்பதால், ஓட்டுநரால் எந்த வகையிலும் குறைபாட்டை சரிசெய்ய முடியாது என்றும் சொல்கிறார்கள்.
குறிப்பாக, பி.எஸ்.-4 வகை பேருந்துகளின் அதிகபட்ச ஓடுதிறன்5,-6 இலட்சம் கிலோமீட்டர்தான் என்கிறார்கள். ஆனால், தற்போது பயன்பாட்டில் இருந்துவரும் பி.எஸ்.-4 வகை வாகனங்கள் அனைத்துமே குறைந்தபட்சம் 6 இலட்சம் கிலோமீட்டரை கடந்தவை. 14 இலட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்த பேருந்துகளும் இன்னும் பயன்பாட்டில்தான் இருந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவிக்கிறார்கள்.
மேலும், இரவு நேரத்தில் உள் கிராமங்களுக்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் இரவு அங்கேயே ஹால்ட் ஆகும் பேருந்துகளாகவே இருக்கும். குறைந்தபட்சம், இதுபோன்ற வழித்தடங்களுக்கு ஒதுக்கும் பேருந்துகளையாவது, குறைபாடுகள் அற்ற நல்ல நிலையில் இயங்கும் பேருந்துகளை ஒதுக்க வேண்டும் என்பதாக கோரிக்கை விடுக்கிறார்கள், ஓட்டுநர்கள் தரப்பில்.
அடுத்த பிரச்சினை, இதுபோன்ற எதிர்பாராத நேர்வுகளில் அதே வழித்தடத்தில் பயணிக்கும் எந்தவகைப் பேருந்து என்றாலும் அதில் பயணிகளை ஏற்றி அனுப்பிவைப்பதற்கு ஏற்ப நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்பதையே பயணிகள் தரப்பில் எதிர்பார்க்கிறார்கள்.
நடுவழியில் நின்ற பேருந்து சாதாரண பேருந்து. அடுத்து வந்த பேருந்து எக்ஸ்பிரஸ் வகை பேருந்து. இந்த இந்த ஊர் மட்டும் ஏறு என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அடுத்து, நான் வேறு டெப்போ ஏற்ற முடியாது என்பது போன்ற அணுகுமுறையும் ஏற்புடையதுதானா? தினமும் வழிமறித்தா நிறுத்த சொல்கிறார்கள். எதிர்பாராத நேர்வு, இரவு நேரம், இருள் சூழ்ந்த இடம், காத்திருப்பதில் சரிபாதி பெண்கள் அதிலும் குறிப்பாக அருகில் உள்ள கல்லூரி மாணவிகள் இவ்வளவையும் கண்டபிறகும் மனிதாபிமானமின்றி, “எக்ஸ்பிரஸ் – வேறு டெப்போ” என்று சட்டம் பேசுவதை எப்படி புரிந்துகொள்வது?
கட்டணம் இன்றி தனியார் பேருந்திலா இந்த சலுகையை எதிர்பார்க்கிறார்கள்? டெப்போ வேறு வேறாக இருந்தாலும், கும்பகோணம் என்ற கோட்டத்தை சேர்ந்த பேருந்துகள்தானே? இல்லை, அரசுக்கு சொந்தமான பேருந்துகள் தானே?
ஒரு டெப்போவை சேர்ந்த ஓட்டுநர், நடத்துனர் அடுத்த டெப்போவை சேர்ந்த பேருந்தில் ஏறி சலுகை முறையில் பயணம் மேற்கொள்வதே இல்லையா? இல்லை, தமிழகத்தில் இயங்கும் பல்வேறு கோட்டங்களை சேர்ந்த பேருந்து ஓட்டுநர்கள் ஒருங்கிணைந்து பொதுவில் சம்மேளனம் என்பதாக ஒன்றிணைந்து செயல்படவில்லையா? அதிகாரிகளை கை நீட்டுவதல்ல பிரச்சினை. சங்கங்களில் உறுப்பினர்களாக நீடிக்கும் ஒவ்வொரு ஓட்டுநரும் நடத்துனரும் தனிப்பட்ட முறையில் தீர்வு காணக்கூடிய பிரச்சினை.
நடுவழியில் நின்ற பேருந்தில் இருந்த பயணிகளை ஏற்றி சென்றதால், நேரத்திற்குள் பேருந்தை இயக்க முடியாமல் போனதற்காகவோ, வருவாய் இழப்பு ஏற்பட்டது என்பதற்காகவோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் சங்கமாய் நின்று எதிர்கொள்ள முடியாதா, என்ன?
இதுகுறித்து விளக்கம் அறிய பெரம்பலூர் டெப்போ மேனேஜர் ரவி மற்றும் தொழிற்நுட்ப பிரிவு உதவி பொறியாளர் மனோஜ் ஆகியோரை அங்குசம் சார்பில் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை ஏற்று அவர்கள் பதிலளிக்கவில்லை.
இதுபோன்ற எதிர்பாராத நேர்வுகளில், எக்ஸ்பிரஸ் – வேறு டெப்போ என்று சட்டம் பேசாமல், எந்தப் பேருந்தானாலும் ஏற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்று போக்குவரத்து கழகங்களுக்கு எடுத்து சொல்ல முடியாத அளவிற்கா இருக்கிறது, போக்குவரத்து துறை?
வே.தினகரன்