‘எலக்சன்’ தயாரிப்பாளர் குறித்து சக்திவேலன் சொன்ன சங்கதி !
‘எலக்சன்’ தயாரிப்பாளர் குறித்து சக்திவேலன் சொன்ன சங்கதி!
ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எலக்சன்’ மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் வெளியிடுகிறார். இதையொட்டி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் மே.11-ஆம் தேதி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா அனைவரையும் வரவேற்றுப் பேசுகையில், ” தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராக நான் அறிமுகமாகி வெற்றி பெறுவதற்கு வழிகாட்டியாக திகழ்ந்த தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமிக்கும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி.
தொடர்ந்து அறுபத்தைந்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய இப்படத்தின் வசனகர்த்தாவும், எழுத்தாளருமான அழகிய பெரியவன், ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு, படத்தொகுப்பாளர் பிரேம்குமார், கலை இயக்குநர் ஏழுமலை, சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம், நடன இயக்குநர் கிரிஷ், ஒலிப்பதிவு மற்றும் ஒலிக் கலவை பணியை மேற்கொண்ட அன்னபூர்ணா ஸ்டுடியோஸ், பாடலாசிரியர்கள் கார்த்திக் நேத்தா, யுகபாரதி மற்றும் ஞானகரவேல், தயாரிப்பு நிர்வாகிகள் குழுவினர், விளம்பர வடிவமைப்பு நிபுணர் கபிலன், ஆடியோ பார்ட்னர் திவோ, சமூக வலைத்தள பக்கங்களில் விளம்பரப்படுத்தும் பணியை ஏற்றிருக்கும் தினேஷ், மக்கள் தொடர்பாளர் யுவராஜ் என படத்திற்காக பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றி.
இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் இருக்கும் வகையில் இயக்குநர் தமிழ் கதையை எழுதி இருந்தார். விஜய்குமார், பாவெல் நவகீதன், திலீபன், நாச்சியாள் சுகந்தி முதல் இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்கி இருந்தனர்.
இதில் கதாநாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் ரிச்சா ஜோஷி ஆகிய இருவருக்கும் கதையை வழிநடத்திச் செல்லும் முக்கியமான கதாபாத்திரங்களை இயக்குநர் தமிழ் அளித்திருக்கிறார். அவர்களும் இதனை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார்கள்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலுடன் இரண்டு முறை தான் தொலைபேசியில் உரையாடி இருக்கிறேன். அவருடன் இரண்டு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இதுவரை அவரிடம் நான் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இந்தப் படத்தையும் அவரிடமே கொடுத்து விட்டேன். அனைத்து விசயங்களையும் அவரே பார்த்துக் கொள்வார். தமிழ்த் திரையுலகில் மிகவும் நேர்மையாகவும், பெருந்தன்மையுடனும் செயல்படும் நபர்.
எல்லோரையும் விட விஜய் குமாரும் நானும் சிறந்த நண்பர்கள். அவர் என்னிடம் எப்போது பேசினாலும் சினிமாவை தவிர்த்து வேறு எதையும் பேசியதில்லை. அவருக்கு சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியாது. இந்தப் படம் உருவாக அவர் மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கிறார். அவரிடம் சினிமாவைப் பற்றி ஏராளமான புதிய புதிய ஐடியாக்கள் இருக்கிறது. சினிமாவில் அனைத்து விசயங்களையும் நன்கு அறிந்தவர். அவருக்கு நன்றி சொல்வதை விட, ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் விஜய் இல்லையென்றால் நான் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
‘எலக்சன்’ ஒரு அரசியல் திரைப்படம். அரசியல் என்றால் மேம்போக்கான அரசியலை சொல்லவில்லை. இதுபோன்ற வகையிலான திரைப்படங்கள் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நான் மிகவும் ரசித்தேன். ஆனால் இந்தத் திரைப்படம் தேர்தல் தருணத்தில் வெளியாகும் என்று நினைக்கவே இல்லை. படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்தது. இதனைத் தொடர்ந்து சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் நல்லதொரு தேதியை தேர்வு செய்து இப்படத்தை வெளியிடுகிறார்.
இதுபோன்ற அருமையான கதையை வழங்கியதற்காக இயக்குநர் தமிழுக்கு நன்றி. இந்த படம் அரசியல் சார்ந்த பிரச்சார படமாக இல்லாமல்.. குடும்ப உறவுகளை அழுத்தமாக பேசும் படைப்பாகவும், நல்லதொரு உச்சகட்ட காட்சியையும் இயக்குநர் வழங்கி இருக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து, படத்தை உருவாக்கிய அவருடைய உதவியாளர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் தமிழுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.
இப்படத்தின் வசனகர்த்தாவும், எழுத்தாளருமான அழகிய பெரியவன் பேசும் போது, “ஜனநாயகம் என்று சொல்லக்கூடிய.. சமத்துவம் என்று சொல்லக்கூடிய.. ஒரு கருத்தியலை… ஒரு அரசியல் கட்சியிடம்.. ஒரு அமைப்பிடம்.. தராமல்.. மக்களிடம் தந்தால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் ஜனநாயகத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள்? ஒரு எளிய மனிதனிடம் அதிகாரம் சென்று சேரும் போது அதை அவன் எப்படி உள்வாங்கிக் கொள்கிறான்? எப்படி அதை பயன்படுத்துகிறான்? என்பதை இப்படம் சொல்கிறது.
ஆனால் ஒரு எளிய மனிதன்… எளிய மனிதனாக இருக்க இந்த சமூகம் விடுவதில்லை. குடும்பம் விடுவதில்லை. அவனுக்கு நெருக்கடியை தருகிறது. இவை எல்லாம் சேர்த்து தான் இந்த படத்தின் கதை உருவாகியிருக்கிறது என நான் கருதுகிறேன.எலக்சன் திரைப்படம் ஒரு யதார்த்தவாத திரைப்படமாக… அரசியலை தீவிரமாக பேசக்கூடிய.. அதனை எளிய மனிதரின் பார்வையிலிருந்து பேசக்கூடிய படைப்பாக உருவாகி இருக்கிறது. இது நிச்சயமாக வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்”.
ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு பேசுகையில், ” இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் ஆம்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. நான் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவன். படப்பிடிப்பு நடைபெற்ற தளங்கள் அனைத்தும் எனக்கு பரிச்சயமானவை. அதனால் படபிடிப்பு நடத்துவது எளிதாக இருந்தது.
எலக்சன் திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது.நாம் உடுத்தும் உடை.. உண்ணும் உணவு.. என பல விசயங்களில் அரசியல் இருக்கிறது. அதனால் அனைவரும் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நடிகர் பாவெல் நவகீதன் பேசுகையில், ” “இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற ஆம்பூர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எங்கள் மீது காட்டிய நிபந்தனையற்ற அன்பு மறக்க இயலாது.
எலக்சன் திரைப்படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்றால்..? இது ஒரு அரசியல் படம்”.
நடிகை ரிச்சா ஜோஷி பேசுகையில்,” இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறேன். விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசுகிறேன். இந்திய சினிமாவிற்கு பல நல்ல படைப்புகளை வழங்கிய தமிழ்த் திரையுலகத்தில் நடிகையாக அறிமுகமாகி, இந்த மேடையில் நிற்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் மொழி உச்சரிப்பில் உதவிய சக கலைஞரான விஜய் குமாருக்கு நன்றி”.
நடிகர் திலீபன் பேசும் போது,” உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. இந்த விசயத்தில் கட்சிதா தலைமை சொன்னால் கூட கேட்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்குள் ஒரு உடன்பாடு… பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற உணர்வு… போன்ற பயங்கரமான அரசியல் பின்னணி உண்டு. இதனை அடிப்படையாக வைத்து வாழ்வியலை படமாக எடுத்திருக்கிறார்”.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசுகையில்,
“ஆதித்யா தயாரித்த ‘ஃபைட் கிளப்’ படத்திற்கு எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. தற்போது தயாரித்திருக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்திற்கும் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இனி மேலும் எங்கள் இருவரிடத்திலும் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளப் போவதில்லை.
படத்தையும் படத்தின் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் அளவு கடந்து நேசிக்கும் ஒரு தயாரிப்பாளரை நான் வியந்து பார்க்கிறேன். இவரைப் போன்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டும். இதுபோன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறும்போது இவரைப் போன்ற ஏராளமான புதிய தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரை உலகத்திற்கு வருகை தருவார்கள். புதிய தொழில்நுட்பக் கலைஞர்களும் நடிகர்களும் அறிமுகமாவார்கள். தமிழ்த் திரையுலகம் மேலும் வலிமை பெறும்.
ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் மகன் அரசியல்வாதியாவது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
விளிம்பு நிலை மக்களின் பார்வையில் இருந்து இப்படி யோசித்தால் தான் இது போன்ற புதிய களம் உருவாகும்.
வழக்கமான திரைப்படங்களிலிருந்து விலகி நேர்த்தியாகவும், கடுமையாகவும் உழைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்”.
நடிகை ப்ரீத்தி அஸ்ராணி, “எப்போது சென்னைக்கு வந்தாலும் மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் உணர்கிறேன். ‘அயோத்தி’ திரைப்படத்திற்கு பிறகு இப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்திலும் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநருக்கும், நடிகர் விஜய் குமாருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய தன்னம்பிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது. இதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆம்பூர் பகுதியில் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கும் நன்றி.”
படத்தின் நாயகனான விஜய்குமார் பேசுகையில், ” உள்ளாட்சித் தேர்தல் அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் திரைப்படம் இது. இந்தப் படத்தில் இயக்குநர் தமிழுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மனநிறைவை அளித்தது.
தயாரிப்பாளர் ஆதித்யாவுடன் இது இரண்டாவது படம். தொடர்ந்து தரமான படங்களை வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம். படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி . எனது முந்தைய திரைப்படமான ‘ஃபைட் கிளப்’ திரைப்படத்தை வெளியிட்ட என்னுடைய நண்பர் லோகேஷ் கனகராஜுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
இயக்குநர் தமிழ் பேசுகையில், ” புகழ், பணம், போதை, பெண்… இதற்காக நான் சினிமாவிற்கு வரவில்லை. என்னை அழ வைத்ததையும், என்னை சிந்திக்க வைத்ததையும் சொல்வதற்காகவே சினிமாவிற்கு வந்தேன். எனது இயக்கத்தில் வெளியான ‘சேத்து மான்’ படத்திற்காக ஆதரவை அள்ளி வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியையும், அன்பையும் பகிர்ந்து கொள்கிறேன்.
சேத்துமான் திரைப்படம் பார்வையாளர்களுடன் எளிதாக தொடர்பு கொண்டது. இந்தப் படம் அது போல் எளிதாக தொடர்பு கொள்ளுமா? கொள்ளாதா? என்ற அச்சத்தில் தான் இங்கு நான் நிற்கிறேன். இங்கு படத்தைப் பற்றி பேசியவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய கோணத்தில் பேசினார்கள். அதனால் படத்தைப் பற்றி நான் ஒரு விசயத்தைக் கூட சொல்லப் போவதில்லை. நீங்கள் படத்தை பாருங்கள். பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.எனக்கு கதை சொல்லத் தெரியாது. அதனால்தான் படத்தின் திரைக்கதையை எழுதி தயாரிப்பாளரிடம் கொடுத்து விடுவேன்.
ஆனால் விஜய்குமார் இப்படத்தின் திரைக்கதையை முழுவதுமாக வாசித்து விட்டார். அவர் இயக்குநர் என்பதால் இப்படத்தின் கதையைப் பற்றி தயாரிப்பாளர் ஆதித்யாவிடம் நிறைய எடுத்துச் சொல்லியிருக்கிறார். இருந்தாலும் தயாரிப்பாளர் கதையை சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டார். விருப்பமில்லாமல் அவரிடம் ஒரு மணி நேரம் கதையை சொன்னேன். நிச்சயமாக அவரிடம் என்ன கதை சொன்னேன் என்று இன்றுவரை எனக்கு தெரியாது.
ஆனால் தயாரிப்பாளர் ஆதித்யாவிடம் விஜய் குமார் விளக்கமாக எடுத்துச் சொல்லி அவரை சம்மதிக்க வைத்து விட்டார். எனவே இந்தத் திரைப்படம் தயாராவதற்கும், நான் இந்த மேடையில் இயக்குநராக நிற்பதற்கும் முழுக் காரணம் விஜய்குமார் மட்டும்தான். இதனை நான் நேர்மையாகவும் உண்மையாகவும் இங்கு பதிவு செய்கிறேன்”.