பாலியல் சீண்டல் ! டி.ஐ.ஜி.க்கு 3 ஆண்டு தண்டனை ! சபாஷ் பெண் எஸ்.பி !
பெண் போலீசு அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை பெற்றிருக்கிறார், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ்.
கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி -21 ஆம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்டா மாவட்டங்களை பார்வையிடுவதற்காக திருச்சி வருகை தந்தபொழுது, முதல்வரின் பாதுகாப்புக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ராஜேந்திரதாஸ். அந்த சமயத்தில், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.யான அந்தப் பெண் அதிகாரியை அவசியமே இல்லாத நிலையில், முதல்வரின் பாதுகாப்பு விசயம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென்று கூறி தனது வாகனத்தில் ஏறச் சொல்லியிருக்கிறார்.
தொடக்கத்திலேயே தயக்கம் காட்டிய அந்தப் பெண் அதிகாரி, முதல்வரின் பாதுகாப்பு பணி தொடர்பாக விவாதிக்க வேண்டுமென்கிறார், வயதில் மூத்தவர், உயர் அதிகாரி என்ற மரியாதையின் காரணமாக அவரது காரில் ஏறுகிறார். அப்பொழுதே, அவர் காரில் ஏறச் சொன்னதற்கான நோக்கம் அந்தப் போலீசு அதிகாரிக்குப் புரிந்துவிடுகிறது.வழியிலேயே, காரை நிறுத்தச் சொல்லி இறங்கியும் விடுகிறார்.
ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பான உயர் போலீசு அதிகாரி, சக ஐ.பி.எஸ். அதிகாரியான தன்னிடமே மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார் என்ற ஆத்திரத்தில் உடனடியாக, அப்போதைய டி.ஜி.பி. திரிபாதியிடம் புகார் தெரிவிக்க சென்னை புறப்படுகிறார்.
தான் போட்டக் கணக்கு தப்பாகியதோடு, மேலிடத்துக்குப் புகார் போனால் மானம் போய்விடுமே என பதைபதைத்த ராஜேஸ்தாஸ், அப்போதைய விழுப்புரம் எஸ்.பி.கண்ணனை தொடர்புகொண்டு அந்த பெண் எஸ்.பி.யை வழியிலேயே தடுத்து நிறுத்துமாறு பணிக்கிறார்.
அவரும், “ஆபிசர் போட்ட உத்தரவை” நிறைவேற்ற, செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் தனது படையாட்களோடு நிற்கிறார். அந்த பெண் எஸ்.பி.யை வழி மறிக்கிறார். அவரின் கார் சாவியை பிடுங்கிக்கொள்கிறார். அதற்கும் அசராத அந்தப் பெண் அதிகாரி, தனது பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் உதவியோடு மேலிடத்துக்கு தகவல் சொல்ல, அதன்பிறகே அவர் விடுவிக்கப்படுகிறார்.
அதன்பிறகு, அவர் புகார் கொடுத்து… விசாக கமிட்டி அமைக்கப்பட்டு… மாநில போலீசிலிருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றப்பட்டு… விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்காகி… ஜவ்வாக இழுக்கும் வழக்கை விரைந்து முடிக்குமாறு மீண்டும் ஒரு வழக்கு தொடுத்து… இடையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்திருந்த ஆதாரங்கள் காணாமல் போனது … என பல்வேறு கூத்துக்களையெல்லாம் கடந்துதான் இந்த தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. அதிலும், ராஜேஸ்தாஸின் அடியாள் போல, வாகனத்தை வழிமறித்த எஸ்.பி.கண்ணனுக்கு வெறும் 500 மட்டுமே அபராதம் விதித்திருக்கிறது, நீதிமன்றம்.
பத்தோடு பதினொன்றாக கடந்து போகக்கூடிய பாலியல் குற்றச்சாட்டு வழக்கு அல்ல இது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.யாக பணியில் இருக்கும் ஓர் ஐ.பி.எஸ். அதிகாரி, முதல்வரின் பாதுகாப்பு பணிகளை கவனிக்க வேண்டிய தருணத்தில், தனக்கு கீழ் பணிபுரியும் சக ஐ.பி.எஸ். பெண் அதிகாரியிடமே பாலியல் அத்துமீறலை அரங்கேற்றியிருக்கிறார் என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்க விசயம்.
பாதிக்கப்பட்டது, சாதாரண போலீசு ஏட்டு அல்ல; அவரும் சக ஐ.பி.எஸ். அதிகாரி. அப்போது, ஒரு மாவட்டத்தின் எஸ்.பி.யாக பணியாற்றிய அதிகாரி. உச்ச அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற அதிகார போதையும், ஆணாதிக்கத் திமிரும்தான் தவறை துணிந்து செய்யும் மன தைரியத்தை வழங்கியிருக்க முடியும்.
இதில் குறிப்பிடத்தகுந்த இன்னொரு விசயம். ராஜேஸ்தாஸ் ஐ.பி.எஸ். அதிகாரி. அவரது மனைவி பீலா ராஜேஸ் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. சிறப்பு டி.ஜி.பி.யாக கணவன் பணியாற்றிய சமயத்தில் அவர் சுகாதாரத்துறை செயலராக பணியாற்றியவர். ராஜேஸ்தாஸின் மாமியாரும் பீலா ராஜேஷின் தாயாருமான ராணி வெங்கடேசன் காங்கிரசு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
போலீசு துறையில் உச்ச பதவியில் இருந்த ஒருவருக்கு எதிராக, அரசு அதிகாரி என்ற வகையிலும் அரசியல்வாதி என்ற வகையிலும் அதிகாரத் தாழ்வாரத்தில் லாபி செய்யத் தெரிந்த ராஜேஸ்தாஸுக்கு எதிராக, அந்தப் பெண் எஸ்.பி. எதிர்த்து நின்று வழக்கில் வென்றிருக்கிறார் என்பது அசாத்தியமான ஒன்று. சங்கம் வைக்கும் உரிமையில்லாத போலீசு துறையில், நீதிமன்றத்தை மட்டுமே நம்பி வென்றும் காட்டியிருக்கிறார் என்பது தனிச்சிறப்பான ஒன்று.
– ஆதிரன்