‘குடி’யால் கெட்ட ஒரு கவிஞனின் வாழ்க்கை தான் ‘குட் டே’
’நியூ மங்க் பிக்சர்ஸ்’ பேனரில் பிரித்விராஜ் ராமலிங்கம் தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘குட் டே’. அறிமுக இயக்குனர் என்.அரவிந்த் இயக்கத்தில் வருகிற 27—ஆம் தேதி ரிலீசாகப் போகும் இப்படத்தில் காளிவெங்கட், ‘மைனா’ நந்தினி, திருநங்கை ஜீவா, பக்ஸ், ஆடுகளம் முருகதாஸ், போஸ் வெங்கட், வேலராமமூர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். படத்திற்கு திரைக்கதை-வசனம்: பூர்ணா ஜே.எஸ்.மைக்கேல், கூடுதல் வசனம் & பாடல்கள்: கார்த்திக் நேத்தா, ஒளிப்பதிவு & எடிட்டிங் : மதன்குணதேவ், இசை : கோவிந்த் வசந்தா, ஆர்ட் டைரக்டர்: சங்கர். பி.ஆர்.ஓ. : சதீஷ் & சிவா [எய்ம்]. தமிழ்நாடு ரிலீஸ் : ‘ட்ரீம் வாரியர்ஸ்’ எஸ்.ஆர்.பிரபு.
இருபது ஆண்டுகள் குடியால் வாழ்க்கைப் பாதையே மாறி, கெட்ட நாட்களாகி,[பேட் டே], அதிலிருந்து மீண்டு, இப்போது ஜெயித்துக் கொண்டிருக்கும் கவிஞர் கார்த்திக் நேத்தாவின் வாழ்க்கை தான் இந்த ‘குட் டே’ சினிமா. குடிக்கு அடிமையானவர்களைப் பற்றி மட்டுமல்ல, அவர்கள் இந்த சமூகத்தில் இருக்கும் பல காரணிகளால் குடிகாரர்களாகி, தங்கள் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தும் பேரவலத்தை இப்படம் பேசுகிறது. அதே நேரம் குடி நோயாளிகளுக்கு எந்தவிதத்திலும் இப்படம் வக்காலத்து வாங்காது என்பதை தனது பேச்சில் ஆணித்தரமாக வலியுறுத்தினார் ‘குட் டே’வின் ஹீரோவும் தயாரிப்பாளருமான பிரித்விராஜ் ராமலிங்கம்.

படம் 27—ஆம் தேதி ரிலீசாவதையொட்டி, 21—ஆம் தேதி மதியம் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் படத்தின் டிரைலரும் ஒரு பாடலும் வெளியிடப்பட்டன. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் ராஜு முருகன், பாலாஜி தரணிதரன், ‘டரீம் வாரியர்ஸ்’ குகன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
“ஒரே இரவில் கதை நடப்பதால், பல சிரமங்களுக்கிடையே படப்பிடிப்பு நடத்தி, சமூகத்திற்கு நல்ல படைப்பைக் கொடுத்திருக்கோம். எங்களால் முடிந்தளவு சிறப்பாக செய்துள்ளோம். இதற்கு மக்களின் ஆதரவு கிடைக்க மீடியாக்கள் உதவி கண்டிப்பாக தேவை” என்றார் ஒளிப்பதிவாளரும் எடிட்டருமான மதன்குணதேவ்.
”எங்களின் மூன்று வருட உழைப்பு தான் இப்படம். படத்தில் ஆரம்பத்தில் இரண்டு நிமிடங்கள்தான் இண்டர்கட் இருக்கும். அதன் பிறகு கட்டே இருக்காது. ஒரு கேரக்டரை கேமரா ஃபாலோ செய்து கொண்டே இருக்கும். இந்த புதிய முயற்சியும் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்” என்றார் பூர்ணா ஜே.எஸ்.மைக்கேல்.

கவிஞர் கார்த்திக் நேத்தா பேசும் போது, “குடி ஒருபக்கம் குற்ற உணர்வையும் மறுபக்கம் அச்சத்தையும் தரும். இந்த இரண்டையும் இருபது வருடங்கள் அனுபவித்தவன் நான், போதைக்குள்ளேயே வாழ்ந்தவன் நான். ஒருவன் குடிகாரனாக மாற சமூகத்தின் பொருளாதார ஏற்றத் தாழ்வு முக்கியக் காரணி. ஒரு சிலரிடம் பணம் கொழிக்கிறது. பலரிடம் பணமே இல்லை. பணம் இல்லாதவர்கள், அது கிடைக்காதவர்களின் ஏக்கமும் ஏமாற்றமும் தான் குடியில் தள்ளுகிறது. இதையெல்லாம் அழுத்தம்திருத்தமாக இப்படம் பேசுகிறது” என்றார்.
”பகலில் ஆரம்பித்து இரவு வரை தொடர்ச்ச்சியாக குடியில் விழுந்து கிடந்த நான், விஜய் மல்லையாவின் ஒரு வீடியோவைப் பார்த்ததும் குடியை நிறுத்திவிட்டேன்” என்றார் ராஜு முருகன்.
”இந்தப் படத்தில் நடித்த கலைஞர்கள், வேலை செய்த தொழில்நுட்பக் கலைஞர்களால் இப்படம் சாத்தியமானது” என்றார் இயக்குனர் அரவிந்தன்.
ஹீரோ & தயாரிப்பாளர் பிரித்விராஜ் பேசும் போது, “திருப்பூர் தான் கதைக்களம். பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக அல்லாடும் தொழிலாலர்களின் மனதில் ஏற்படும் விரக்தியையும் வேதனையுயைம் தான் இப்படத்தில் சொல்லியுள்ளோம். இப்படம் உருவாக காரணம் எனது நண்பர்கள் தந்த நம்பிக்கை தான். எனது முதல் படமே எனக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இதன் பின்னணியில் இருந்தவர் இயக்குனர் அரவிந்த் தான். இப்படத்தில் நம் எல்லோரது கனவும் பயணமும் இருக்கு. இதற்கு உங்களின் ஆதரவு தேவை” என்றார்.
— மதுரை மாறன்






