*”நான் பணவெறி பிடித்தவனா?”*- பொய்யர்களை பொளந்து கட்டிய யோகி பாபு!
வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘ஜோரா கைய தட்டுங்க’.
இப்படத்தில் ஹரிஸ் பெராடி, வசந்தி, ஜாகிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.என். அருணகிரி இசையமைத்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மது அம்பாட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் வரும் 16 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, நேற்று ( மே.08) மாலை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
இந்நிகழ்வினில் பேசியோர்…
*தயாரிப்பாளர் ஜாகிர் அலி*
“நான் ஒரு மலையாளி. தமிழ் சினிமா மீதான நம்பிக்கையில், யோகிபாபு மீதான அன்பில், இப்படத்தை எடுத்துள்ளோம். நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். யோகிபாபு இப்படத்திற்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தார்.படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்”.
*எடிட்டர் சாபு ஜோசப்*
“10 வருடம் முன்பு வினீஷ் இயக்கிய தீப்பிடிக்கும் பச்சை மரம் படத்திற்கு என் மனைவி தான் எடிட்டர், இப்போது பத்து வருடங்கள் கழித்து, இப்படத்திற்கு நான் எடிட்டர். என்னிடம் கதை சொல்லும் பல இயக்குநர்கள், யோகிபாபு தான் ஹீரோ என்பார்கள். யோகிபாபு எல்லோரும் அணுகக்கூடிய நாயகனாக இருக்கிறார். அவர் அதிக படங்கள் செய்தால் சினிமா நன்றாக இருக்கும். இந்தப்படத்திற்கு மது அம்பாட் கேமராமேன், பல தேசிய விருதுகள் வென்றவர், அவர் படத்தில் நான் இருப்பது எனக்குப் பெருமை. இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்”.
நடன இயக்குநர், நடிகை *வசந்தி*
“படத்திற்கு யோகிபாபு நிறைய ஒத்துழைப்பு தந்தார். எனக்கு ஊக்கம் தந்தார். அவர் நிறைய உதவும் குணம் கொண்டவர். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது”.
*நடிகர் அருவி பாலா*
“இந்தப்படம் செய்யும் போது தான் வேட்டையன் பட வாய்ப்பு கிடைத்தது. மது அம்பாட் சார் மூலம் தான் இந்த பட வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவருக்கு நன்றி. வாய்ப்பு தந்த இயக்குநர் விநீஷ் அண்ணாவிற்கு நன்றி. தயாரிப்பாளருக்கு நன்றி. யோகிபாபு அண்ணன் நிஜத்திலும் அண்ணனாகவே நடந்து கொண்டார். அவருடன் பல படங்களில் நடித்துள்ளேன். என்னை கைட் பண்ணிக் கொண்டே இருப்பார்”
*ஒளிப்பதிவாளர் மது அம்பாட்*
“இந்தப்படத்திற்காக விநீஷ் என்னை அழைத்தது மகிழ்ச்சி. யோகிபாபு மிக நல்ல நடிகர். சிறப்பாக நடித்துள்ளார். எல்லோரும் மிக சந்தோசத்துடன் வேலை பார்த்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன்”.
*தயாரிப்பாளர் தனஞ்செயன்*
“தயாரிப்பாளர் ஜாகிர் அலிக்கு வாழ்த்துகள். யோகிபாபு பல சின்ன பட்ஜெட் படங்களில் தொடர்ந்து நடிப்பது சினிமாவுக்கு நல்லது. யோகிபாபுவை கலகலப்பு படத்திலிருந்து பார்க்கிறேன், அவரது இந்த உயரத்திற்கு கடின உழைப்பு தான் காரணம். யோகிபாபு புரமோசனுக்கு வருவதற்கு 7 லட்சம் கேட்கிறார் என புகார் கூறுகிறார்கள். ஆனால் அவர் அப்படியில்லை என எனக்குத் தெரியும். அவர் 1 நாள் நடித்த படத்தின் புரமோவுக்குகூப்பிடுவதெல்லாம் ரொம்ப ஓவர். அவர் பல படங்களுக்கு புரமோசனுக்கு வருகிறார். அவரைப் பற்றி தப்பாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்”
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
*இயக்குநர் விநீஷ் மில்லினியம்*
“நான் கொஞ்சம் மலையாளி, கொஞ்சம் தமிழன். மலையாளத்தின் தாய்மொழி தமிழ் தான். 2013 ல் புதுமுகங்களை வைத்து தீக்குளிக்கும் பச்சை மரம் படம் எடுத்தேன். அப்போது என்னிடம் 400 பேர் நடிக்கக் கேட்டு வந்தார்கள். அதில் ஒருவருக்கு ஒரு நாளுக்கு 1000 ரூபாய் சம்பளம் பேசி 25 நாள் நடிக்கச் சொன்னேன். ஆனால் நான் நிறைய படம் நடித்துள்ளேன், எனக்கு 2000 சம்பளம் தாருங்கள் என்றார். ஆனால் நான் நடிக்க விருப்பமிருந்தால் நடி இல்லையென்றால் ஓடிவிடு என்றேன். அவர் தான் யோகிபாபு. ஆனால் சில வருடம் கழித்து நான் போன் செய்த போது, அன்போடு என்னை அழைத்துப் பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் படம் செய்யப்போகிறேன் என்று சொன்ன போது, கதையெல்லாம் சொல்ல வேண்டாம், உங்களுக்காக நடிக்கிறேன் எனச் சொன்னார். அவருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்தப்படம் கண்டிப்பாக அவரது நடிப்பில் மிக வித்தியாசமான படமாக இருக்கும். மது அம்பாட் சார் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவார், இப்போது சொன்னாலும் மலை ஏறுவார். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர் என் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எனக்குத் தமிழில் முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர் தாணு சார் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி”
*கலைப்புலி தாணு*

” நண்பர் தயாரிப்பாளர் ஜாகிர் அலியை வரவேற்கிறேன். யோகிபாபு எல்லோருக்கும் நல்லவராகத் தான் இருக்கிறார். நான் ஒரு முறை போன் செய்தபோது, ஒரு தயாரிப்பாளருக்குப் பணமே வாங்காமல் நடித்துத் தந்தார். அவரது பெயருக்குக் களங்கம் வரக்கூடாது. இந்தப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்”.
*யோகிபாபு*
“தயாரிப்பாளர் ஜாகிர் அலி மிகவும் கஷ்டப்பட்டு இப்படம் செய்துள்ளார். அது என்னால் இல்லை. அதற்கு வேறு பல காரணங்கள். ஆனால் படத்தை நன்றாக எடுத்துள்ளார். இயக்குநர் விநீஷ் சார் சொன்னது உண்மை தான். தீக்குளிக்கும் பச்சை மரம் 2013ல் நடித்த போது 1000 ரூபாய் சம்பளம். மீண்டும் பல வருடம் கழித்து போன் செய்து அவர் பேசியவுடனே சொல்லுங்கள் விநீஷ் சார் என்றவுடன் ஆச்சரியப்பட்டார். நான் எப்போதும் பழசை மறக்க மாட்டேன்.

நான் எல்லோருக்கும் சப்போர்ட் செய்து தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் உதவியாளராக இருந்தவர் ஹீரோவாக நடித்தார். அந்தப்படத்தில் ஒரு நாள் நடித்தேன். அந்தப்படத்திற்குத் தான் 7 லட்சம் கேட்டேன் எனப் புகார் சொல்லியுள்ளார்கள். இது நான் நடித்த படம் அதனால் நான் வரவேண்டும், வந்துள்ளேன். நான் என் சம்பளத்தை, நிர்ணயிப்பதில்லை. ஆனால் எனக்குச் சொன்ன சம்பளம் வருவதே இல்லை. எனக்கு வர வேண்டிய சம்பளம் மிகப்பெரிய லிஸ்ட் இருக்கிறது, அதனால் யாரும் தவறாகப் பேசாதீர்கள். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது எல்லோரும் ஆதரவு தாருங்கள்”.
— மதுரை மாறன்.