”இல்லம் தேடி வரும் எஃப்.ஐ.ஆர்” – தமிழகத்தை திரும்பிப்பார்க்க வைத்த எஸ்.பி. ஜோஸ் தங்கையா !
”இல்லம் தேடிக் கல்வி”த் திட்டம் கேள்வி பட்டிருக்கிறோம். ”இல்லம் தேடி வரும் எஃப்.ஐ.ஆர்.” திட்டத்தை கேள்வி பட்டிருக்கிறீர்களா?
”அட, இல்லம் தேடி எஃப்.ஐ.ஆரா? வாய்ப்பே இல்லை. புகார் கொடுத்தா உடனே எல்லாம் வாங்க மாட்டாங்க. இன்ஸ்பெக்டர் இல்லைனு ரெண்டு நாள் அலைய விடுவாங்க. அப்படியே வாங்கினாலும், உடனே எஃப்.ஐ.ஆர். போட மாட்டாங்க. அவ்வளவு ஏன், சி.எஸ்.ஆர்.கூட கொடுக்க மாட்டாங்க. வசதி உள்ளவன் கோர்ட்ல கேசு போட்டு டைரக்ஷன் வாங்குவாங்க. அதுக்கு வழியில்லாதவன், ஸ்டேஷனுக்கு நடையா நடப்பாங்க. எஃப்.ஐ.ஆர். போடாமலேயே விசாரிப்பார்கள்.” என்றுதானே நினைக்கிறீர்கள். அது என்னவோ, வாஸ்தவம்தான். இன்று நேற்று இல்லை. இவையெல்லாம் தொன்றுதொட்டு, தமிழக போலீசாருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளாகவே நீடித்து வருகின்றன. அஜித்குமார் மரணத்தில் எழுப்பப்பட்ட பிரதான கேள்வியாகவும் இது அமைந்திருந்தது.

இந்த பின்னணியில்தான், சத்தமே இல்லாமல் சிறப்பான சம்பவம் ஒன்றை செய்து அசத்தியிருக்கிறார் கரூர் மாவட்ட எஸ்.பி. ஜோஸ் தங்கையா.
கரூர் மாவட்டத்தில் கரூர் டவுன், கரூர் ஊரகம், குளித்தலை ஆகிய மூன்று உட்கோட்டங்களில் 18 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள்; 03 மகளிர் காவல் நிலையங்கள் ; சைபர் கிரைம், மாவட்ட குற்றப்பிரிவு உள்ளிட்ட காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
மேற்கண்ட காவல்நிலையங்களில் ஒவ்வொரு நாளும் பதிவாகும் முதல் தகவல் அறிக்கைகளை, புகார் அளித்தவரின் இல்லம் தேடி வழங்கும் புதிய திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார், எஸ்.பி. ஜோஸ் தங்கையா. கடந்த ஜூலை 21 ஆம் தேதி முதலாக, அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இதுவரையில் 76 முதல் தகவல் அறிக்கைகளை நேரடியாக வழங்கியிருக்கிறார்கள்.
தமிழக காவல்துறையில் இதுபோன்ற முன்னுதாரணம் இதுவரை எந்த மாவட்டத்திலும் அமல்படுத்தப்படவில்லை. இதுவே முதல்முறை. கடந்த 2021 கொரோனா காலத்தில், ஊரடங்கு அமலில் இருந்த சமயத்தில் அப்போது வேலூர் மாவட்டத்தில் கோட்டாட்சியராக பணியாற்றிய கணேஷ் தலைமையிலான வருவாய்த்துறையினர் இறந்தவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று இறப்பு சான்றிதழ்களை வழங்கியிருந்தனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
கரூர் மாவட்டத்தின் 34-வது எஸ்.பி.யாக ஜோஸ் தங்கையா பதவியேற்றதும் தனது முதல் நடவடிக்கையாக இந்த முன்னோடி திட்டத்தை அமல் படுத்தியிருக்கிறார். தான் பதவியேற்ற சமயத்தில், கரூர் மாவட்டத்தில், “சட்டம், ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்படும். இணையவழி குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக, அதிகளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். குற்றங்களை தடுக்க அதிகளவில் ‘சிசிடிவி’ கேமராக்கள் மாவட்டத்தில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை, மணல் திருட்டு தொடர்பான புகார்கள் மற்றும் லாட்டரி விற்பனை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அச்சம் இல்லாமல், காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். அவர் சொன்னபடி, ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தவும் தொடங்கியிருக்கிறார்.

இதற்கு முன்னர், பொருளாதாரக்குற்றப்பிரிவில் எஸ்.பி.யாக பணியாற்றிய சமயத்தில் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய நியோமேக்ஸ் வழக்கில், மனு மேளா வை நடத்தி காட்டியவர். மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி புகாரில் சிக்கிய தேவநாதனை கைது செய்து அதிரடி காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஒரு கிராமத்தை தேர்வு செய்து அதிகாரிகளுடன் அந்த கிராமத்தில் ஒருநாள் இரவு தங்கியிருந்து மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும், “ உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உழவரைத்தேடி திட்டம் தொடங்கி, மூத்த குடிமக்கள் உடல் நலிவுற்றோர்களின் இல்லம் தேடி ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டமும் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
”உங்கள் வீடு தேடி வரும் அரசு!”, ”உங்களுடன் முதல்வர், உங்களுடன் ஸ்டாலின்” என்பன போன்ற முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறியும் முன்னோடி திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலேயே முதல்முறையாக ”இல்லம் தேடி வரும் எஃப்.ஐ.ஆர்.” திட்டத்தை அமல்படுத்தியதன் வழியே தமிழகத்தை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார், மாவட்டத்தின் எஸ்.பி. ஜோஸ் தங்கையா.
”உங்கள் வீடு தேடி வரும் அரசு” திட்டத்தின் தொடர்ச்சியாக, இனி ”இல்லம் தேடி வரும் எஃப்.ஐ.ஆர்.” என்ற முன்னோடி திட்டம் தமிழக காவல் நிலையங்கள் அனைத்திற்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்!
— ஆதிரன்.