நட்புக்காக சென்ற நால்வருக்கு நேர்ந்த பரிதாபம் !
நட்புக்காக சென்ற நால்வருக்கு நேர்ந்த பரிதாபம் ! அங்குசம் !
வெளிநாட்டு வேலைக்காக செல்லும் நண்பனை வழியனுப்புவதற்காக சென்ற நண்பர்கள் நான்கு பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் திருச்சியில் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
திருச்சி மாவட்டம் லால்குடியை சந்தோஷ். எலக்ட்ரீஷியன் பணிக்காக துபாய் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். திருச்சி ஏர்போர்ட் வரை சென்று அவரை வழியனுப்பி வைப்பதற்காக, அவரது நண்பர்கள் குழுவாக அடுத்தடுத்து இரண்டு கார்களில் பயணித்துள்ளனர். அப்போது, இலால்குடி மாந்துரை அருகே ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே மூவர் இறந்துவிட, மருத்துவ சிகிச்சையில் மற்றொருவர் இறந்து போயிருக்கிறார். எல்லோருமே, 19, 20 வயதுடைய இளைஞர்கள். நண்பனை வழியனுப்பச் சென்ற நால்வர் மரணித்த சம்பவம் துயரில் ஆழ்த்துகிறது.
குடும்ப வறுமை காரணமாகவோ, வெளிநாட்டில் வேலை செய்து வாழ்வில் செட்டில் ஆகிவிட வேண்டுமென்ற எண்ணம் காரணமாகவோ, பலரும் வெளிநாட்டு வேலையை தேர்ந்தெடுக்கிறார்கள். ஐ.டி. துறையில் படித்துவிட்டு கௌரவமான பணிக்காக வெளிநாடு செல்வது ஒரு ரகம். குடும்ப வறுமைக்காக, குடும்பத்தை பிரிந்து அத்துக்கூலி வேலைக்காக வெளிநாடு வேலைக்கு செல்வது மற்றொரு ரகம். இரண்டிலும் பிரிவு துயரம் தரக்கூடியதுதான். குடும்ப உறவுகளின் பாசப்பிணைப்பும், நெகிழ்வும் இயல்பான ஒன்றுதான். தவிர்க்க முடியாத ஒன்று.
ஆனாலும், இதுபோன்று வெளிநாடு வேலைக்கு செல்பவர்களை வழியனுப்பும் சாக்கில், அதையும் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு ஆளாக்கியிருக்கும் போக்குதான் கவலைக்குரிய ஒன்று. கடன்பட்டுத்தான் வெளிநாட்டு பயணத்தையை மேற்கொள்கிறார்கள். ஆனாலும், அந்த கடனோடு கடனாக, நண்பர்களுக்கு சரக்கு பார்ட்டி வைத்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. அதே கொண்டாட்ட மனநிலையுடன், ஏர்போர்ட் வரையில் பயணித்து வழியனுப்பி வைக்க செல்வதாகவும் இருக்கிறது.
நண்பர்களின் வழியனுப்பும் படலம், வீட்டோடு முடிந்திருந்தால் இந்த இழப்பை தவிர்த்திருக்கலாமோ? என்றே ஏங்க வைக்கிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய, நெருங்கிய ரத்த உறவுகள் மாத்திரம் ஏர்போர்ட் வரை வந்து வழியனுப்பி வைத்தாலே போதுமானதுதானே? என்ற கேள்வியை எழுப்புகிறது.
நம்மை வழியனுப்பி வைப்பதற்காக, வந்த நண்பர்கள் நிரந்தரமாக தன்னை விட்டு பிரிந்தார்களே என்ற வாட்டத்தோடு விமானம் ஏற நேர்ந்த அந்த நண்பனின் மனநிலையை சற்று யோசித்து பாருங்கள். நண்பனை வழியனுப்புவதற்காக, சென்ற மகன் உயிரோடு வீடு திரும்பாத சோகத்தோடு நிரந்தர வலியும் வேதனையோடு வாழ்வை நகர்த்தப்போகும் அந்த பெற்றோர்களின் மனநிலையிலிருந்து இந்த விசயத்தை அணுகி பாருங்களேன்.
துபாய் வரை வேலைக்கு செல்லும் நண்பனின் பிரிவு வேதனை தரக்கூடியதுதான். ஆனால், அது தற்காலிகமானது. ஆனால், அந்த நால்வரின் பிரிவோ நிரந்தரமாகிவிட்டதே!
— கலைமதி