தூத்துக்குடி கள ஆய்வுப் பணியை உதயநிதி ஸ்டாலின் பாதியில் முடித்து சென்றது ஏன்? – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கேள்வி !
அதிமுக கள ஆய்வுக் கூட்டங்கள் கலவரம் என்று கூறும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி கள ஆய்வுப் பணியை பாதியில் முடித்து சென்றது ஏன்? என்பதாக, முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அதிமுகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் கட்சி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செம்மலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கட்சி உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர்கள் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், 2026 இல் சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினர்.
இந்தக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ தலைமை உரையாற்றுகையில், “திமுக ஆட்சி மக்களால் வெறுக்கப்படும் ஆட்சியாக உள்ளது. ஸ்டாலின் தான் வருவாரு விடியல் தருவார் என்று பாட்டெல்லாம் போட்டு வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.
திமுக ஆட்சி குறைகளைப் பற்றி நாம் பேசி வந்த நிலையில் தற்போது மக்கள் குறை கூறி வருகின்றனர். எப்போது தேர்தல் வரும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதிமுகவை தேர்தலுக்கு தயாராகும் படி மக்கள் சொல்லும் நிலைமை உள்ளது. தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதால் இன்றைக்கு திமுக கூட்டணி கட்சிகளை கெஞ்சி வருகிறது.
அதிமுக கள ஆய்வு பணிகளை கலவரப் பணிகள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். தூத்துக்குடியில் கள ஆய்வு பணி மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாதியிலே முடித்துக் கொண்டது போனது ஏன்?
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இல்லாமல், ஆய்வு பணி நடத்தியது குறித்து முதலமைச்சர் அதிருப்தியை வெளிப்படுத்தியதை தொடர்ந்து, அவசர அவசரமாக தூத்துக்குடியில் இருந்து விமானத்தைப் பிடித்து சென்றவர் தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
அதிமுகவின் கள ஆய்வுப் பணிகளில் கட்சியினர் பேசுவது கருத்து பரிமாற்றம். தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சிகள் நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் இருக்கும் திமுக நிர்வாகிகளுக்கு எதிராகவே இன்றைக்கு திமுகவினர் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். நெல்லை கோவையில் திமுக நிறுத்திய மேயர் வேட்பாளர்களுக்கு எதிராகவே திமுகவினர் போட்டியிட்டதை பார்க்க முடிந்தது. திமுகவின் உள்கட்சி பிரச்சனையால் கதை கந்தலாகி வருகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அதிமுக நடத்தும் கள ஆய்வுக் கூட்டத்தினால், அதிமுக புத்துணர்ச்சி பெற்று வருகிறது. இதனைப் பார்த்து தான் திமுக களப்பணிகளை கலவரம் என்று கூறுகிறது. அவர்கள் இதை கலவரமாக எடுத்துக் கொண்டாலும், திமுக ஆட்சி அகற்றுவரை இந்த கலவரம் தொடரும். திமுக ஆட்சியில் நிறைகள் இல்லை குறைகள் மட்டும் தான் உள்ளது. அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை தான். இதை சமீபத்தில் நடைபெற்ற ஜானகி அம்மாவின் நூற்றாண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தெரிவித்துள்ளார்” என்றார்.
– மணிபாரதி.