தமிழகத்தின் டாப் மோசடி மன்னர்கள் 😱 யார் இந்த குடுமியான்மலை ரவிச்சந்திரன்
ரோட்டு முனைக்கடையில் நின்று, “சிங்கிள் டீ வாங்கித் தாருங்கள். கையைப் பார்த்து ஜோசியம் சொல்கிறேன்” என்று சொன்னவர். தனது பிறந்தநாளுக்கு புது டிரஸ் எடுக்கக்கூட வழியின்றி பரிதவித்து நின்றவர். இன்று, பத்து விரல்களிலும் பளபளக்கும் மோதிரங்களை மாட்டிக் கொண்டு மேடையேறும் நிலைக்கு உயர்ந்தவர். தனக்குப் பிடித்தமான நடிகைக்கு வைர மோதிரத்தையும் நெக்லஸையும் பரிசளிக்கும் நிலைக்கு உயர்ந்த அந்த மாமனிதர் குடுமியான் மலை ரவிச்சந்திரனின் கதை சற்றே விசித்திரமானதுதான்.
1973 ஆம் வருடம் ஜூன் மாதம் 04 ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை கிராமத்தை சேர்ந்த அருள்தாஸ் – சந்திரா தம்பதியினரின் மூத்த மகனாக பிறந்தவர் ரவிச்சந்திரன். பிறவியிலேயே மாற்றுத்திறனாளியான இவர் குடுமியான்மலையில் தொடக்கக்கல்வியையும், பரம்பூரில் உயர்நிலைக்கல்வியையும், பின்னர் அன்னவாசலில் மேநிலைக்கல்வியையும் முடித்தவர். மதுரை காமராஜர் பல்கலையில் ஜோதிடம் மற்றும் வரலாற்று பாடப்பிரிவுகளில் இளங்கலை பயின்றிருக்கிறார்.
முதியோர் கல்வி இயக்கமாக தமிழகத்தில் அறிமுகமான, “அறிவொளி” இயக்கத்தில் தன்னை தன்னார்வலராக இணைத்துக் கொண்டு, கிராமங்கள் தோறும் பாடங்களை எடுத்திருக்கிறார். பின்னர், அன்னவாசல் காவல் நிலையத்தில், “காவல் நண்பர்கள் குழு”விலும் அங்கம் வகித்திருக்கிறார். இதன்வழியே கிடைக்கப்பெற்ற அறிமுகத்தை பிசினஸாக மாற்ற நினைக்கிறார், ரவிச்சந்திரன்.
நண்பர்கள் நல்லகுமார், டேனியல் ஜான் கென்னடி ஆகியோரின் உதவியுடன், 2006 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி, சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை என்ற பெயரில் புதிய டிரஸ்ட் ஒன்றை ஆரம்பிக்கிறார்.
தாத்தா சவரிமுத்து வாத்தியார். வெளியூரிலிருந்து குடுமியான்மலைக்கு பிழைக்க வந்தவர். அப்பா அருள்தாஸ் ஆகியோரிடம் ஜோசியம் கற்றுக் கொள்கிறார். மணப்பாறையில் வெள்ளை சட்டை – வெள்ளை பேண்ட் மாட்டிக் கொண்டு ரோட்டு முனை கடையில் நின்று கொண்டு ஒரு டீ வாங்கித் தாருங்கள் ஜோசியம் சொல்கிறேன் என்று தொடக்க காலத்தில் ஜோசியராக வலம் வந்த ரவிச்சந்திரன் காட்டில் மழை பெய்ய, எட்டாவது கொடை வள்ளலாக, ஆன்மீக ரத்னாவாக உருவெடுக்கிறார்.

சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் முதன்மை செயலாக்க இருக்குநராகிறார் ரவிச்சந்திரன். நல்லகுமாரை அறங்காவலராகவும், டேனியல் ஜான் கென்னடியை பொருளாளராகவும் நியமித்து டிரஸ்ட்-டை வைத்து பிசினஸை வளர்த்தெடுக்கிறார்.
டிரஸ்டுக்கு ஒரு இலட்சம் கொடுத்தால் ஒரு கோடி தருகிறேன் என்பதாக முதலில் விளம்பரம் செய்கிறார். ஊரில் ஒருத்தனும் நம்பவில்லை. இது வேலைக்கு ஆகாது என்று, சினிமா பிரபலங்களை கூட்டி வருகிறார். பிரம்மாண்ட விழாக்களை நடத்துகிறார். பலரும் வரிசை கட்டி பணத்தை கொட்டுகிறார்கள். ரவிச்சந்திரனும் வசூலான பணத்தை வாரியிறைக்கிறார். மூன்றெழுத்து நடிகைக்கு வைர நெக்லஸ் அன்பாக பரிசளிக்கும் அளவுக்கு உயர்கிறது, ரவிச்சந்திரனின் ஸ்டேட்டஸ்.
குடுமியான்மலை ரவிச்சந்திரனின் வசியப்பேச்சில் மயங்கி, பலரும் வீழ்கிறார்கள். விவசாய நிலத்தை விற்று பணத்தைக் கொட்டுகிறார்கள். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பலரும் இலட்சங்களை வாரியிறைக்கிறார்கள். இவர்களையெல்லாம், குடுமியான்மலை ரவிச்சந்திரன் மொட்டையடித்த கதை இன்னும் சுவாரஸ்யமானது.
தொடர்ந்து பேசுவோம்.
— ஆதிரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.