வெளிநாட்டு வேலை ! ரூ.7.76 இலட்சம் பறித்த வடமாநில இளைஞா்கள்!
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் இந்துமதி (37) க/பெ சுரேஷ்குமார், இவர் பி.எஸ்.சி. நர்சிங் முடித்துவிட்டு 12 ஆண்டுகள் சவுதியில் வேலை செய்துள்ளார். தற்போது உடையார்பாளையத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் வெளிநாட்டில் வேலை தேடி வந்த இந்துமதி சில வலைதளங்களில் தனது சுய விபரங்களை பதிவு செய்துள்ளார்.
இணையத்தில் இந்துமதியின் விபரங்களை பார்த்த இணைய மோசடிக்காரர்கள், இந்துமதி-யை செல்போனில் தொடர்பு கொண்டு தனது பெயர் ராகுல் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு துபாயில் செவிலியர் வேலை இருப்பதாக கூறி, Info@envisionglobalservices.com என்ற வலைதளத்தில் இந்துமதியின் சுய விவரங்களை பதிவு செய்ய கூறியுள்ளனர்.
அதன் பின்னர் இணைய மோசடிக்காரர்கள் இந்துமதியிடம் இருந்து Registration fee – ரூபாய் 2500, இணையத்தில் போலியான நேர்காணல் நடத்தி, Processing Fee -ரூபாய் 9890 , Family Visa , Custom Fee , NRI account open, Courier Fee மற்றும் Service Fee என்று பல காரணங்கள் கூறி மொத்தம் 7,76,893 ( ஏழு லட்சத்தி 76 ஆயிரத்து 893 ரூபாய்) வங்கி பரிவர்த்தனை மற்றும் GPay மூலம் பெற்றுள்ளனர்.
பணம் பெற்றுக் கொண்டு நீண்ட நாட்கள் ஆகியும் இந்துமதியால் மோசடிக்காரர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த இந்துமதி இணைய குற்ற உதவி எண்ணான 1930-க்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் 01.09.2025 அன்று அரியலூர் மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில். Cr.No : 14/2025 u/s 318(4) BNS, 66D IT amendment Act 2008 வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல்துறையினர் இணைய மோசடிக்காரர்களின் வலைதள பக்கத்தின் IP address, மின்னஞ்சல் முகவரி, தொடர்பு கொண்ட செல்போன் எண், பணம் அனுப்பிய Gpay Number, மற்றும் வங்கி பணவர்த்தனை தகவல்கள் ஆகியவற்றை ஆராய்ந்து எதிரிகளை தேடி வந்த நிலையில், எதிரிகள் டெல்லியில் இருப்பதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து எதிரிகளை கைது செய்ய வேண்டி, திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன் இ.கா.ப. அறிவுரையின்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பாசாஸ்திரி இ.கா.ப, உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன் வழிகாட்டுதலின்படியும், அரியலூர் இணைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இசைவாணி தலைமையில், உதவி ஆய்வாளர் மணிகண்டன், தலைமைக் காவலர் சுரேஷ் பாபு, முதல் நிலைக் காவலர்கள் சுதாகர்,வசந்தி மற்றும் காவல ரஞ்சித்குமார் ஆகியோர் டெல்லி சென்று எதிரிகளை தேடி வந்தனர்.
இந்த இணைய மோசடியில், வெளிநாட்டில் வேலை தேடுபவர்களை மோசடி செய்யும் நோக்கில் போலியான வலைதளத்தை (Info@envisionglobalservices.com) உருவாக்கிய டெல்லியைச் சேர்ந்த எதிரி அங்கித் குமார் சிங் (வயது 26) த/பெ அமரேந்திர பிரசாத்சிங் மற்றும் இந்த மோசடிக்கு நிதி உதவி அளித்து செயல்பட்டு வந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எதிரி தனிஷ் கனி (வயது 30) த/பெ சாகித் அகமது ஆகிய இருவரையும் அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல்துறையினர் கைது செய்து, அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். எதிரிகளிடமிருந்து 03 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 24.02.2026 அரியலூர் மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல்துறையினர் எதிரிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். இத்தகைய இணைய மோசடியில் ஈடுபட்ட பிற நபர்கள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.










Comments are closed, but trackbacks and pingbacks are open.