ஓசியில … எவ்ளோ ஜவ்லாடா வர்றாளுங்க பாரேன்… !
”அரை மணி நேரமா நிக்கிறோம் தம்பி. ஃப்ரீ பஸ் நாலு பேரு வந்தானுங்க. ரெண்டு பேரு நிக்காமலே போய்ட்டான். இன்னொருத்தன் அங்கேயே நிப்பாட்டுறான். ஓடிப்போய் ஏறுறதுக்குள்ள, பஸ் எடுத்தர்றாங்க . என்னால, ஓடவும் முடியல. ரெண்டு நாளா வயிறு வலி வேற…” னு ரொம்பவே சலிச்சுகிட்டாங்க” அந்த அக்கா.
”ரொம்ப பண்றானுங்க தம்பி. எவ்வளவு பேர் நிக்கிறோம் பாரு? படிக்கிற பிள்ளைங்க, காலேஜ் பிள்ளைங்க, எல்லாம் ரொம்ப நேரமா நிக்குதுங்க. ஏன் மேஸ்திரிகாரன் இருக்கான் பாரு.. லேட்டா போன அவன் கேக்குற கேள்வி எல்லாம் காதுலயே வாங்க முடியாதுப்பா”னு அந்த அக்கா சொல்லிட்டு இருக்கும்போதே பஸ்ஸும் வந்து சேர்ந்தது.
”உள்ள வா….யாருமா, இந்த பைய இங்க வச்சிருக்கிறது? கையில எடும்மா… தள்ளு… வழியை வுடு…. தம்பி எங்க போற டிக்கெட்ட வாங்கு…. நீ ஏம்மா இங்கே நிக்கிற உள்ள தள்ளிப்போமா…. ஃப்ரீ பஸ்ஸ வுட்டு எங்க எழவை எடுக்குறாங்க …. ”னு அந்த ரணகளமான பயணத்துலயும் அவ்வளவு பேச்ச நான்ஸ்டாப்பா பேசிகிட்டே இருந்தாரு கண்டக்டரு.
”காசு கொடுத்து டிக்கெட் வாங்குற நாங்க நின்னுகிட்டே வரோம். ஓசியில வர்றவளுங்க உட்கார்ந்குகிட்டு, எவ்வளவு ஜவ்லாடா வர்ராளுங்க பாரு.”னு கண்டக்டருக்கு வக்காலத்து வாங்குனாரு, ’குடி’மகன் ஒருத்தரு.
“அண்ணே, கொஞ்சம் நகந்துதான் நின்னுங்களேன். ரொம்ப நேரமா, மேல சாஞ்சிட்டே இருக்கீங்க.”னு பெண் சொல்ல, “ இங்கே எங்கே – மா இடம் இருக்கீது. நகரு நகருன்ற… யாரும் உரசாம மோதாம போனும்னா தனியா, ஆட்டோ, கார் புடுச்சி போலாம்ல..”னு விரசா பதில் கொடுத்தாரு ஆண்மகன் ஒருத்தரு. “பஸ் ஃபுல்லா வெறும் பொம்பளைங்களா தான் இருக்காளுங்க… ”னு திரும்பவும் ஒத்து ஊதினார், அந்த ’குடி’மகன்.
”கவர்மெண்ட் ஃப்ரியா பஸ் வுடுது .. இவுங்களுக்கு என்ன வந்துச்சு?” இன்னொரு அக்கா கேட்க, “பொம்பளைங்கன்னா அவ்வளவு எளக்காரமா போச்சா?”னு எல்லோரும் கேட்கிற மாதிரியே பஸ் முழுக்க எதிரொலிச்சது ஒரு பாட்டியின் குரல். அந்த குரல் வந்த தைரியத்துலயே, “அதானே, இப்படி எல்லாம் பேசுறவங்களுக்கு அக்கா தங்கச்சி அம்மா பொண்டாட்டி எல்லாம் பொம்பளைங்க தானே நாசமா போறவனுங்க…”னு நடுத்தர வயசுக்கார பெண்மணி ஒருவர் ஆதங்கத்தை கொட்டிச்சு.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
”எல்லாம் கவர்மெண்ட் சொல்லணும். பொம்பளைங்களுக்கு ஓசில கொடுத்து கெடுத்து வச்சிருக்கானுங்க. பஸ்ல ஓசிங்கரதால இவளுங்க இஷ்டத்துக்கு எங்க வேணாலும் போறாளுக வராளுக…” ன்னுஅந்த குடிகாரன் பேசி வாய மூடுறதுக்குள்ள .. என்னை அறியாமலே எந்திரிச்சு போத தெளியிற மாதிரியே ஓங்கி விட்டேன் ஒரு அரை.
“இந்த ஃப்ரீ பஸ்ல போகணும் வரணும்னா பொம்பளைங்க மரியாதைய எதிர்பார்க்க முடியாதுப்பா… எவன் எதோ பேசினாலும் வாயைத் திறக்காமல் கம்முனு தான் நிறைய பேரு வருவாங்க… ”னு ஆதங்கத்தோட சொல்லிக்கிட்டு இருந்துச்சு செல்வி அக்கா.
— செ.கார்க்கி.