நட்பு வேற… அரசியல் வேற…நண்பனாக இருந்தாலும் ஆக்ஷன் பாயும்..!
கடு...கடு... மு.க.ஸ்டாலின்..!
சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. என்றாலும் பல்வேறு இடங்களில் திமுகவின் அதிருப்தி வேட்பாளர்களின் தலையீடு காரணமாக பெரும்பாலான இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். இந்நிலை நகராட்சி தலைவர் துணைத் தலைவர் தேர்தலிலும் எதிரொலித்தது.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சிபிஎம் கட்சித் மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் ஆகியோர் மு.க.ஸ்டாலினிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து வெற்றி பெற்ற உடன்பிறப்புகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதோடு, தன்னை வந்து சந்திக்க வேண்டும்”என உத்தரவிட்டார். இந்த உத்தரவு கூட்டணி கட்சியினரிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து சில இடங்களில் திமுக அதிருப்தி வேட்பாளர்கள் தங்களுடையை பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். அதேசமயம் பல பகுதிகளில் உடன்பிறப்புகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். சில பகுதிகளில் ராஜினாமா செய்ய முடியாது என்றும் மறைமுகமாக கூறிவிட்டனர். இதனால் கோபத்திற்கு ஆளான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மு.க.ஸ்டாலின், திமுக மாநில இளைஞரணி செயலாளராக இருந்த போது திமுகவில் இளைஞரணி மாவட்ட பொறுப்பாளராக தடம் பதித்தவர் சுரேஷ்ராஜன். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் சுரேஷ்ராஜன் ‘மு.க.ஸ்டாலின் நிழல்’ என அழைக்கப்பட்டார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சுரேஷ்ராஜனுக்கு மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் அடிப்படையில் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 33 மட்டுமே.! இப்படியாக 10 ஆண்டுகள் அமைச்சராகவும் 20 ஆண்டுகாலம் மாவட்ட செயலாளர் பொறுப்பிலும் வலம் வந்த சுரேஷ்ராஜன், நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவ கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் மனோ தங்கராஜ் வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்கினார் மு.க.ஸ்டாலின். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் சுரேஷ்ராஜனா – மனோ தங்கராஜா என்ற அதிகாரபோட்டி தலைதூக்கியது.
இந்நிலையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாகர்கோவில் மாநகரச் செயலாளர் மகேஷ் மேயர் வேட்பாளராக கருதப்பட்டார். இவர் அமைச்சர் மனோ தங்கராஜின் ஆதரவாளர். இதை விரும்பாத சுரேஷ் ராஜன் தன்னுடைய ஆதரவாளர் ஒருவரை மேயராக வேட்பாளராக அறிவிக்க முயற்சி செய்தார். ஆனால் தலைமை மகேஷை மேயர் வேட்பாளராக அறிவித்தது. இந்நிலையில் நடைபெற்ற மேயர் தேர்தலில் 32 வாக்குகள் பெற வேண்டிய திமுக வேட்பாளர் மகேஷிற்கு விழுந்ததோ 28 வாக்குகள் மட்டுமே. 4 வாக்குகள் பிஜேபி வசமானது. மேலும் துணை மேயர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து திமுகவின் அதிருப்தி வேட்பாளர் களமிறங்கினார். ஆனாலும் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரே வெற்றி பெற்றார். இது மட்டுமல்லாது குளச்சல் நகரசபை தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஜான் சார்லஸை எதிர்த்து திமுக வேட்பாளர் நசீர் வெற்றி பெற்றார்.
இப்படி கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் உள்ளடி வேலைகளை நடத்தியது திமுக தலைமையை கோபப்பட செய்திருக்கிறது. இந்த உள்ளடியில் பின்னணியாக இருந்து செயல்படுவது சுரேஷ்ராஜன் என தலைமைக்கு தகவல் கிடைக்க, ‘மு.க.ஸ்டாலின் நிழல்’ என கருதப்பட்ட சுரேஷ் ராஜன் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மாநகராட்சி மேயர் மகேஷ் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நண்பனாக இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை பாயும் என்ற மு.க.ஸ்டாலினின் அதிரடி, தமிழகம் முழுவதும் உடன்பிறப்புகளை எச்சரித்துள்ளது.