காவி அலையில் காணாமல் போன காங்கிரஸ்!

-சாக்ரடீஸ்

0

பாஜகவுக்கு அதிர்ச்சிக் கொடுத்து

ஆட்சியைப் பிடித்த ஆம்ஆத்மி..!

2 dhanalakshmi joseph

5 மாநில தேர்தல் முடிவுகள்

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தர காண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங் களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை ஆம்ஆத்மி கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

- Advertisement -

சமாஜ்வாடி

எதிர்பார்த்தப்படியே உத்தரபிரதேசத்தில் பாஜக கூட்டணி 274 (பாஜக 256) இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. காங்கிரஸ் ஒற்றை இலக்கமான 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. உ.பி.யை ஒரு காலத்தில் ஆண்ட கட்சி என்ற பெருமையுடைய மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பெரிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று இரு சிறுகட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட சமாஜ்வாடி கூட்டணி 124 (சமாஜ்வாடி 110) இடங்களில் வெற்றி பெற்றது.

பாஜக கடுமையான போட்டி

உ.பி. தேர்தல் முடிவு குறித்து  அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், “500க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 80 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டி, உ.பி.யில் எதிர்க்கட்சிக் கூட்டணி வலிமையாக இருந்திருந்தால் பாஜக கடுமையான போட்டியைச் சந்தித்து 200 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றிருக்கும். எதிர்க்கட்சிகளும் 200 இடங்களில் வெற்றிப் பெற்று சமபலத்துடன் இருந்திருக்கும்” என்கிறார்கள்.

ஆம்ஆத்மி கட்சி

பஞ்சாபில் கருத்துக் கணிப்பைத் தாண்டி ஆம்ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றிப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி இன்னொரு மாநிலத்தில் ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4 இடங்களில் ஆம்ஆத்மி வெற்றிபெற்று 25% வாக்கு வங்கி வைத்திருந்தது. மேலும் பஞ்சாப் தலைநகர் சண்டிகர் பகுதியைச் சார்ந்தவர் ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் கெஜிரிவால் என்பதால் இந்த வெற்றி சாத்தியமானது. வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் ஒராண்டு காலம் தொடர்ந்து போராடிய போது டில்லி அரசின் சார்பில் கெஜ்ரிவால் பல உதவிகளைச் செய்ததும் இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். வடமாநிலங்களில் காவிஅலை வீசிய இந்த நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பாஜக ஒற்றை இலக்கமான 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

4 bismi svs

காங்கிரஸ் கட்சி

பஞ்சாப் மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு 18 இடங்களில் மட்டுமே வெற்றியைத் தந்துள்ளனர் அம்மாநில மக்கள். காங்கிரஸ் கட்சியின் முதல்வர், முன்னாள் முதல்வர், மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர், அமைச்சர்கள் எனப் பலரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.  அதேபோல் பஞ்சாப் மாநில கட்சியான சிரோமணி அகாலிதளம் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கோவாவில் காங்கிரஸ் கட்டமைப்பு

‘நித்தியகண்டம் பூரண ஆயுசு, திரிசங்கு சொர்க்கம்’ என்பது போல கோவா மக்கள் வழக்கம் போல் யாருக்கும் அறுதிபெரும்பான்மையைத் தந்துவிடவில்லை. தனிப்பெரும் கட்சியாக மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜகவுக்கு 20 இடங்களில் வெற்றியைத் தந்துள்ளார்கள். காங்கிரஸ் கட்சிக்குப் பழுதில்லாமல் 11 இடங்களையும் ஆம்ஆத்மிக்கு 2 இடங்களையும் சுயேட்சைகள் 3 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்கவிடாமல் ஆட்சி அமைத்த பாஜக இப்போது அந்தப் பிரச்சனைகள் எதுவுமில்லாமல் 3 சுயேட்சைகளின் ஆதரவோடு கோவாவில் பாஜக ஆட்சியில் அமர்கிறது. காங்கிரஸ் நூலிழையில் வெற்றிப்பெறும் என்று எதிர்பார்த்தது பொய்த்துப்போனது. என்றாலும் உ.பி.யைப் போல கட்டமைப்பு குலையாமல் கோவாவில் காங்கிரஸ் கட்டமைப்பு வலுவாகவே உள்ளது என்பது ஆறுதலான  செய்தியாகும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பாஜக, கடந்த ஒராண்டில் 3 முதல்வர்களை மாற்றியது. இதனால் கட்சியில் உட்பூசல் வெடித்தது. மக்கள் மத்தியில் பாஜக ஆட்சியின் மீதான வெறுப்பை வெளிப்படையாகவே தெரிவித்தனர். இங்கே காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்ற எண்ணம் கடந்த 6 மாத காலமாகவே வெளிப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குப் பெரும்பான்மைக்குத் தேவைப்படும் 36ஐ தாண்டி 47 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சிக்கு 19 இடங்களை மட்டுமே கொடுத்து மக்கள் காங்கிரஸ் கனவில் மண்ணை அள்ளிப் போட்டனர். இங்கு பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 32 இடங்களில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த 2017 தேர்தலில் 21 இடங்களில் வென்ற பாஜக கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைத்தது. இப்போது பாஜக பல படிகள் முன்னேறி அறுதிப்பெரும்பான்மையைத் தாண்டி இடங்களைப் பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது.  மணிப்பூர் மாநில கட்சிகளான தேசிய மக்கள் கட்சி 7 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாகா மக்கள் முன்னணி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தால் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தவிர்த்திருக்க முடியும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தத் தேர்தல் 2024இல் நடைபெறப் போகும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கானக் கருத்துக் கணிப்பாகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

பாஜகவின் உ.பி., மணிப்பூர், கோவா, உத்ரகாண்ட் வெற்றிகள் பாஜகவிற்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி கருத்து தெரிவிக்கும் போது, “இந்தத் தேர்தலில் சாதி, வாரிசு அரசியல் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. வளர்ச்சியை முன்னிறுத்திய எங்களுக்கு வெற்றியைத் தந்துள்ளார்கள். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வளர்ச்சியை முன்னிறுத்தி மீண்டும் வெற்றிபெறுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, “5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி குறித்து விரைவில் கூடவுள்ள செயற்குழுவில் ஆராயப்படும். 2024 நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கான வியூகங்களும் ஆலோசிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால், “அடுத்த ஆண்டு சட்டப்பேரவை நடைபெறவுள்ள மத்திய பிரதேசம், இராஜஸ்தான், கர்நாடகம், மகாராஷ்டிரா மாநிலங்களிலும் எங்களின் வெற்றியை உறுதி செய்வோம். பாஜகவுக்கு மாற்று ஆம்ஆத்மி என்பதை உறுதிசெய்வோம்” என்று கூறியுள்ளார்.

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளும் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தால், பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைய வாய்ப்புகள் அதிகம். பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைவதில் பல கட்சிகளுக்குப் பல பிரச்சனைகள் உள்ளன. எதிர்கட்சிகள் தனித்து போட்டியிட்டால் பாஜக வெல்லமுடியாத கட்சியாகவே தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.