கொடநாடு முதல் ராமஜெயம் கொலை வரை என்னாச்சு முதல்வரே ?
தி.மு.க. ஆட்சி நாற்காலியில் அமர்ந்த உடன் கொடநாடு கொலை வழக்கு, ஜெ., மரணம், ராமஜெயம் கொலை மற்றும் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் ஆகிய 4 முக்கிய வழக்குகளிலும் உண்மையான குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத்தருவோம் என தேர்தல் வாக்குறுதியாகவே வழங்கியிருந்தார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.
வெறும் தேர்தல் பிரச்சாரம் மட்டுமின்றி ஆட்சி அமைந்தவுடன், இந்த 4 வழக்குகளையும் விசாரணை செய்ய தனிக்குழுக்களை அமைத்தும் உத்தரவிட்டிருந்தார். ”தொடக்கம் என்னவோ நல்லாத்தான் இருந்துச்சு … அப்புறம் அவ்ளோதான் … சொல்லிக்கொள்வது போல் இல்லை” என்கிறார்கள் அரசியல் உள்வட்டம் அறிந்தவர்கள். பொள்ளாச்சி வழக்கு மட்டும்தான் க்ளைமேக்ஸ் சீனை எட்டியுள்ளது. மற்றவையெல்லாம் கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்து வருகிறது என்கிறார்கள்.
பொள்ளாச்சி சம்பவம்!
“2026- சட்ட மன்றத் தேர்தல் ஒருபக்கம் நெருங்கி வரும் நிலையில், சமீபத்தில் தமிழகத்தையே பதற வைத்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு சாகும் வரையிலான ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இவை அரசியல் ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தியதுடன் மட்டுமல்லாது; எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காரணம், தமிழக முதல்வர் ஸ்டாலின் கையிலெடுத்த 4 சம்பவங்களும் அ.தி.மு.க. – வினர் பொற்கால ஆட்சி என்று கூறும் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் நடந்தவையாகும்.

இவை ஒவ்வொரு முடிச்சாக அவிழத் தொடங்கினால் அ.தி.மு.கவுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாய்ப்பு என்பது மிகப்பெரிய சவாலாகதான் இருக்கும். ஆனால், கொடநாடு வழக்கு, ஜெ. மரணம், ராமஜெயம் கொலை ஆகிய வழக்குகளில் நடந்துவரும் விசாரணை என்பது தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் முடிவுக்கு வராத சூழலில் தான் ஜவ்வாக இழுத்து வருகிறது” என்கிறார்கள், அரசியல் உள்வட்டம் அறிந்தவர்கள்.
ஜெ.. மரணம் !
ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் அதிகாரிகளிடம் பேசியபோது, ”தமிழ்நாட்டின் இரும்பு பெண்மனியாக கருதப்பட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவர் கடந்த 2016 டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். இவரது மரணம் அதிமுகவினருக்கு பெரிய இழப்பு என்பதை காட்டிலும், அவரது மரணத்திற்கு பின் உள்ள மர்மம் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இதுகுறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்தது திமுக அரசாங்கம்.

அதன்மூலம் விசாரணை அறிக்கையை சட்ட மன்றத்தில் சமர்பித்த அவ்வாணையம், ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நாளன்று அவர் முதல் மாடியில் உள்ள தனது அறையின் குளியலறையில் இருந்து திரும்பி படுக்கையை அடைந்தபோது மயங்கி விழுந்தார். அப்போது அங்கிருந்த சசிகலா உள்ளிட்டோர் அவரைத் தாங்கிப் பிடித்தனர்.
ஜெயலலிதா மயக்கமடைந்த நிலையிலேயே அவரது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் மயக்கமடைந்த பின்னர் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் சசிகலாவால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சசிகலா 2012 க்கு பிறகு ஜெ- வுடன் இணையும் போது சுமுகமான உறவுடன் இல்லை என்பதும், அந்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், சசிகலா, மருத்துவர் கே.எஸ் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருக்ஷ்ணன் ஆகியோரும் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருப்பதுடன், விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார். ஆனால், இதுவரையிலும் யாரையும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை” என்றனர்.
கொடநாடு !
கொடநாடு வழக்கு விசாரணை குறித்து வழக்கின் முக்கிய சாட்சியான ஜெ-வின் கார் டிரைவராக இருந்து விபத்தில் பலியான கனகராஜியின் அண்ணன் தனபாலிடம் பேசியபோது, ”தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. மரணத்திற்கு பின், நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதின்று நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் 250-க்கும் மேற்பட்டோரை விசாரணை வலையில் கொண்டுவந்து விசாரித்துள்ளனர்.

இதில், என்னையும் அழைப்பாணை விடுத்து விசாரித்தனர். அதில், எனது தம்பி கனகராஜின் மரணத்தில் எடப்பாடி பழனிசாமி, அவரது மைத்துனர் சங்ககிரி வெங்கடேசன் மற்றும் பழனிசாமியின் நிழல் பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன் ஆகியோர்தான் காரணம். அதற்கான ஆதாரங்களையும் வழங்கியுள்ளோம். இந்த நிலையில் தான் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாவலராக இருந்துவந்த வீரப்பெருமாள் என்பவரை கோவை காந்திபுரம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்துள்ளனர்” என்றார்.
ராமஜெயம் கொலை.!
தமிழக அரசியலில் கோலோச்சி நிற்பவர் தான் சிட்டிங் அமைச்சரான கே.என்.நேரு. தி.மு,க-வில் பல்வேறு பொறுப்புகளை தாங்கி நிற்கும் இவர், திருச்சி மாவட்ட அரசியலின் அச்சாணியாக இருந்து வருகிறார். சமீபத்தில் திருச்சியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்கு வந்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ”நேருக்கு நிகர் நேரு தான்.. என்பதை பலமுறை பலமேடைகளில் பதிவு செய்துள்ளேன். கட்சிக்காக நேரு செய்த தியாகங்கள் எண்ணிலங்காதவை” என்று பெருமையாக பதிவு செய்திருந்தார்.

இவரது தம்பி கே.என். ராமஜெயம் வீட்டிலிருந்து நடைபயிற்சி சென்றவர், 2012 மார்ச் 28 ஆம் தேதி அன்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். ஆண்டுகள் பல கடந்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், சிபிசிஐடி, சிபிஐ விசாரணை அமைத்தும் குற்றவாளிகளை இதுவரை நெருங்க முடியவில்லை. அதன்பின் தி.மு.க ஆட்சியில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கு விசாரணை பரபரப்பானது.

தமிழகத்தின் பிரபல ரவுடிகளான திண்டுக்கல் மோகன் ராம், சாமி ரவி, மயிலாடுதுறை சத்யா, நரைமுடி கணேசன், தினேக்ஷ், குடவாசல் எம்.ஆர் (ராஜேந்திரன்) மகன் சண்முகம் உட்பட 13 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அதில், ராமஜெயம் இறந்தபோது நீங்கள் எங்கு இருந்தீர்கள்? ராமஜெயத்தின் மோதிரத்தை எடுத்தீர்களா? என்கிற 12 கேள்விகள் கேட்கப்பட்டு அதனை பதிவு செய்து வைத்துக் கொண்டனர். ஆனால், இதில், ஒரு தீர்வுக் கிடைப்பதற்குள் புலனாய்வுக் குழுவின் எஸ்.பி ஜெயக்குமார் அதிரடியாக மாற்றப்பட்டார். மீண்டும் வழக்கு கோமா நிலைக்கு சென்றது.
இந்நிலையில், நீதிமன்ற விசாரணையில் போலீசார் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் ஐ.பி.எஸ். மேற்பார்வையில் வழக்கு விசாரணை தொடர்ந்து வருகிறது. சத்தம் இல்லாமல் அவரும் சில வேலைகளை செய்து வருவதாகவும் சொல்கிறார்கள். எப்படியும் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான், ஆட்சித்தலைமையும் வருண்குமாரை டிக் செய்திருக்கிறது என்கிறார்கள்.
ராமஜெயம் கொலை வழக்கு குறித்து, திருச்சி மாவட்ட தி.மு.க செய்தி தொடர்பாளர் ராஜசேகரிடம் பேசியபோது, ”சட்டம் தன் கடமை செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வழக்கையும் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்” என்றார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக சொன்னது, அடுத்த தேர்தல் நெருங்கி வரும் நிலையிலாவது முடிவுக்கு வருமா? இல்லை, அடுத்த தேர்தலிலும் இதே வாக்குறுதியை மீண்டும் கொடுக்கப் போகிறார்களா, முதல்வரே !
– ஜான் கென்னடி