காத்திருக்கப் பழகு – அனுபவங்கள் ஆயிரம்(9)
ஒரு நாள் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துக் கொண்டிருந்தேன். அவர் தன் உடலை “சட்டை” எனக் குறிப்பிட்டு, அதை களைந்த நாளில் தனது சேவையாளரிடம் சொன்ன கடைசி வார்த்தைகள் என வாசித்தேன்.
“தியானம் செய்..!
நான் அழைக்கும் வரை காத்திரு…!”
அந்த ஒரு வரி என் மனத்தில் இடம் பிடித்தது. சில வார்த்தைகள் மனதைக் குலைத்து விடும் அவை வழிகாட்டிகளாக மாறிவிடும். அப்படித்தான் இந்த வார்த்தையும் எனது எண்ணத்தில் தங்கியிருக்கிறது. அந்த நாளிலிருந்து “காத்திருப்பது” என்ற சொல்லின் அர்த்தத்தைப் பற்றி நான் சிந்திக்கத் தொடங்கினேன்.
நாம் எத்தனை விஷயங்களில் அவசரப்படுகிறோம் என்று நினைத்துப் பார்த்தீர்களா?
உணவு உடனே வெந்துவிட வேண்டும், குளிர் காய்ச்சல் உடனே போய்விட வேண்டும், கனவுகள் உடனே நிறைவேற வேண்டும், பயிர் உடனே விளைய வேண்டும், உறவுகள் உடனே புரிந்துகொள்ள வேண்டும், மனிதர்கள் உடனே மாற வேண்டும்… ஆனால் வாழ்க்கை அப்படி இயங்குவதில்லை. இயற்கை எப்போதும் தன் வேகத்தில் மட்டுமே இயங்கும். அந்த வேகத்தை நாமே சிதைக்க முயல்கிறோம்.
பசிக்கும் வரை காத்திரு… உடல் நீர் கேட்கும் வரை காத்திரு… காய்ச்சல் உடலை சுத்தம் செய்யும் வரை காத்திரு… சளி வெளியேறும் வரை காத்திரு… பயிர் விளையும் வரை காத்திரு… உலையில் அரிசி வேகும் வரை காத்திரு… கனி கனியும் வரை காத்திரு… செடி மரமாகும் வரை காத்திரு… ஒவ்வொன்றுக்கும் அதன் “காலம்” உண்டு அந்த காலம் தான் அதற்கான ஆற்றலையும், அர்த்தத்தையும் தந்துள்ளது. அந்த காலத்தைக் கடந்து செல்லும் பொழுது தான் “நிறைவு” என்ற உணர்வு பிறக்கிறது.
நான் சிறுவயதில் பாட்டி சொன்ன ஒரு சொல் நினைவுக்கு வந்தது …வெந்தால் தான் சுவை வரும் !!!! அவர் உணவைக் குறித்து சொன்னாலும், அதில் வாழ்வின் சத்தியம் இருந்தது. ஒரு நாள் சமையலறையில் அரிசி வெந்த வாசனையை உணர்ந்தபோது, அந்த நிமிஷம் மனதிற்கு ஒரு அமைதி அளித்தது. “வெந்தது” என்றால் “முழுமை” என்றுதான் பொருள். அதற்குத் தேவையானது காலமும் காத்திருப்பும்.
அதேபோல வாழ்க்கையிலும் ஒரு கனவு நிறைவேற வேண்டுமானால், ஒரு உறவு வலுவாக உருவாக வேண்டுமானால், ஒரு குழந்தை கற்றுக்கொள்ள வேண்டுமானால், ஒரு மனம் ஆற வேண்டுமானால், அவை எல்லாம் காத்திருப்பைக் கேட்கின்றன. நாம் இன்று ஓட்டத்தில் இருக்கிறோம். அனைவரும் ஒரு ஓட்டப்பந்தயத்தில் போல ஓடுகிறார்கள். ஆனால், யாராவது நின்று பார் அங்கே அழகு இருக்கிறது. நீ நின்றால்தான் வாழ்க்கை பேசத் தொடங்கும். ஒடாதே. நில். விழி. பார். ரசி. சுவை. உணர். பேசு. பழகு. விரும்பு. அந்த நிமிஷங்களில் தான் “வாழ்க்கை” இருக்கிறது. அவசரத்தில் நம்மை நாமே இழந்து விடுகிறோம்.
நம்முடைய வாழ்க்கைமுறைக்கு பொருந்தாத பல விஷயங்கள் நம்மை ஆக்கிரமிக்கின்றன. அவசர உணவுகள், அவசர செய்திகள், அவசர தீர்மானங்கள்… அந்த எல்லாவற்றும் நம்மை வேரோடு பிய்த்துக் கொண்டே செல்கின்றன. ஆனால் காத்திருப்பது ஒரு தியானம், ஒரு மருந்து, ஒரு சக்தி.
நீ உள்நோக்கி திரும்புவாய் என்று இறைவனும் காத்திருக்கிறான். அந்த காத்திருப்பை நாம் உணர்ந்த நொடியில், உள்ளம் அமைதியாக மாறுகிறது. புற உலகின் சத்தம் குறைகிறது. மனம் தன்னிடம் திரும்புகிறது. அப்போதே நாம் உணர்கிறோம் காத்திருப்பது ஒரு கலை மட்டுமல்ல, அது வாழ்வின் ரகசியம்.
நாம் காத்திருக்கப் பழகினால் அதற்குப் பிறகு வரும் ஒவ்வொரு அனுபவமும் இனிமையாக இருக்கும். அந்த காத்திருப்பு நமக்குள் அமைதியை விதைக்கும். அமைதி வளர்ந்தால், அதிலிருந்து மகிழ்ச்சி மலரும். காத்திருப்பதில்தான் வாழ்வின் ராகம். காத்திருக்கப் பழகினால் வாழப் பழகுவாய்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
— மதுமிதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.