ரூ.100 கோடிக்கு ஏலம் போன தங்கத்தில் ஆன டாய்லெட் !
நம்ம ஊர்ல தங்கம் இருக்கிற விலைக்கு, அடேய் அநியாயம் பண்றிங்கடான்னு சொல்ற மாதிரி சுமார் 101 கிலோ தங்கத்தால் தயாரிக்கப்பட்ட டாய்லெட் ஏலம் விடப்பட்டிருக்கிறது. நியூயார்க்கில் நடந்த இந்த ஏலத்தில், 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் கோப்பை, சுமார் 12.1 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.100 கோடி) விற்பனையாகியுள்ளது.

பிரபல இத்தாலிய கலைஞர் மௌரிசியோ கேடலான் என்பவரால் இந்த தங்க டாய்லெட் உருவாக்கப்பட்டது. விசித்திரமான கலைப்படைப்புகளுக்கு பெயர் பெற்ற இவர், இதற்கு முன்பு, சுவரில் வாழைப்பழம் ஒன்றை டேப் போட்டு ஒட்டி அதை ஒரு கலைப்படைப்பாக விற்று பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த டாய்லெட் வெறும் தங்க முலாம் பூசப்பட்டது அல்ல. சுமார் 101 கிலோ எடையுள்ள, 18 காரட் திட தங்கத்தால் ஆனது என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இது ஒரு சாதாரண டாய்லெட் போலவே முழுமையாக செயல்படும் திறன் கொண்டது.
நியூயார்க்கில் உள்ள சோதபி ஏல மையத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த டாய்லெட் ஏலம் விடப்பட்டது. இதனை ‘ரிப்லீஸ் பிலீவ் இட் ஆர் நாட்’ (Ripley’s Believe It or Not!) என்ற புகழ்பெற்ற நிறுவனம் வாங்கியுள்ளது. விசித்திரமான பொருட்களை சேகரிக்கும் இந்த அருங்காட்சியகம், இந்த தங்க டாய்லெட்டை தங்களது சேகரிப்பிலேயே மதிப்புமிக்க பொருளாக அறிவித்துள்ளது. விரைவில் இது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
— மு. குபேரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.