” விவாதங்களை எழுப்புவது தான் நல்ல சினிமா!”–‘மெய்யழகன்’ காரத்தி சொன்னது!
2டி எண்டெர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது..
படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் குறையவில்லை. இதனால் மகிழ்ந்த ‘மெய்யழகன்’ படக்குழுவினர் இதன் வெற்றி விழாவை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக கொண்டாடினர். இந்த நிகழ்வு அக்டோபர் 05 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் பேசியவர்கள்…
அர்விந்த்சாமி,
“நான் பணியாற்றிய படங்களிலேயே மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று. அதற்கு படக்குழுவினருக்கு நன்றி. இந்த படத்தின் ரிலீஸை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் அழகாக செய்து கொடுத்தார். வெளிநாட்டில் இருந்தாலும் கார்த்தி, இயக்குனர் பிரேம்குமார், ராஜசேகர் ஆகியோருடன் தொலைபேசியில் அவ்வப்போது படம் குறித்து பேசிக் கொள்வேன். பத்திரிகையாளர்கள் எனது நடிப்பை பாராட்டியதை விட கார்த்திக்கின் நடிப்பை பாராட்டியதுதான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது. இயக்குனர் என்ன விரும்பினாரோ அதை சிறிதும் மாற்றாமல் அந்தக் கதாபாத்திரங்களை அப்படியே வெளிப்படுத்த நானும் கார்த்தியும் மற்றவர்களும் முயற்சித்தோம். நான் மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க வேண்டும் என நடிப்பதில்லை. நான் அவ்வளவு படம் எல்லாம் நடிப்பதும் இல்லை. எந்த போட்டியிலும் நான் இல்லை. செய்யும் வேலையை ரசித்து செய்ய வேண்டும். இது போன்ற ஒரு அழகான சூழலில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணம்”.
கார்த்தி,
“இந்தப் படத்தை புரிந்து கொண்டு இதனைப் பாராட்டி விதவிதமான வரிகளில் விமர்சனங்களை எழுதிய ஊடகங்களுக்கு மிகப்பெரிய நன்றி. இன்னொரு பக்கம் உலகத்தில் சின்னச் சின்ன மூலைகளில் இருந்தும் கூட இந்த படம் ஒவ்வொருவரிடமும் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று எழுத்துப் பதிவுகளாகவும் மீம்ஸ்களாகவும் ரீல்ஸ்களாகவும் வெளியிட்டு வரும் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இதற்கு முன்பு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் குடும்ப உறவுகளை மையப்படுத்தி அவ்வளவு அழகான கதைகளை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அப்படி ஒரு படம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இந்தக் கதை என்னிடம் வந்த போது அதை எப்படி மிஸ் பண்ணுவேன்.
இந்தப் படம் எவ்வளவு உரையாடல்களை உருவாக்கி இருக்கிறது. நல்ல கலை படைப்புக்கு முக்கியமான விஷயமே உரையாடலை ஏற்படுத்துவது, விவாதத்தை ஏற்படுத்துவது தான். அப்படி நிறைய விஷயங்களை இந்தப் படம் பேச வைத்திருக்கிறது. அதுவும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. எல்லா கலையம்சத்தையும் சேர்த்த கலைப்படைப்பு என காட்டிக் கொள்வதற்கு எப்போதாவது சில நல்ல படங்கள் அமையும்.அப்படி ஒரு படமாகத் தான் இதை பார்க்கிறேன்.
30 வயதுக்கு மேற்பட்டவர்கள், வாழ்க்கையில் கொஞ்சமாவது கஷ்டத்தை பார்த்தவர்கள் எல்லோருக்கும் இந்த படம் நிச்சயம் புரியும் என நம்பினேன். தொழிலுக்காக சொந்த ஊரை விட்டு வருவது, நம் கலாச்சாரங்களை விட்டுப் போய்விடுவது, நம் சரித்திரத்தை மறந்து விடுவது என நாம் மறந்த, அதே சமயம் நம் மனதில் இப்போதும் ஆழமாக இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் எடுத்து கண் முன் வைத்தது போல் இந்த கதை இருந்தது.
அண்ணன் சூர்யா அடிக்கடி என்னிடம் உன்னால் எவ்வளவு பெருந்தன்மையாக இருக்க முடியுமோ அப்படி இரு என்று சொல்வார். அப்படி பெருந்தன்மையாக இருந்தால் தான் சில தருணங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும். எல்லோரிடமும் அன்பாக இருக்க முடியும். கோபப்பட்டவர்களிடம் கூட அன்பு காட்ட முடியும்.
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் உணர்வுகளை பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் அளவிற்கு இந்தப் படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவிலும் கேரளாவிலும் அதே அளவிற்கு என வரவேற்பு இருக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள் இன்னும் அதிகமாக இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள். தொலைதூரத்தில் இருப்பவர்கள் என்பதால் அவர்களுக்கு இதன் மதிப்பு அதிகம் தெரிகிறது. இயக்குனர் பிரேம் ஒரு வரலாற்றுக் கதை வைத்திருக்கிறார். அதன் எழுத்து நடையை படித்து முடித்ததும் உரிமையுடன் யார்யா நீ என்று கேட்கிற அளவிற்கு மரியாதை போய் அவரிடம் உரிமை வந்துவிட்டது. அதை எப்போது எழுதி முடிப்பார் என நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்”.
இயக்குநர் பிரேம்குமார்
“இந்தப் படத்தின் வெற்றிக்கு என்னுடன் துணை நின்ற படக் குழுவினர் அத்தனை பேருக்கும் நன்றி. நானும் ஒளிப்பதிவாளர் மகேந்திரனும் ஒன்றாகவே படித்தவர்கள். ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள். நடிகர் சிவகுமார் சார் என்னிடம் பேசும்போது ஏண்டா ஒண்ணா படிச்சீங்கன்னா கூட ஒரே மாதிரியா இருப்பீங்க என்று நகைச்சுவையாக கேட்பார். 96 படத்தை விட இந்த படத்தில் மகேந்திரனின் வேலைகள் எனக்கு சற்று பிடிபடவில்லை. ஆனாலும் படம் வெளியானபோது அதற்கு குவியும் பாராட்டுகளைப் பார்த்தபோது தான் நான் 8 வருடம் டச் விட்டுப் போனதால் ஒளிப்பதிவில் இன்னும் எவ்வளவு பின்தங்கி இருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் இவ்வளவு ஒழுங்கு, இவ்வளவு சுதந்திரம் என இதற்கு முன் நான் பார்த்ததில்லை.2டி இந்த படத்தை தயாரிக்கவில்லை என்றால் இந்த படம் இந்த அளவிற்கு வந்திருக்குமா, இந்த படத்தை இயக்கி இருப்பேனா என்பது சந்தேகம்தான். அந்த விதத்தில் சூர்யா சார், ஜோதிகா மேம் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி. மெய்யழகன் மெய்யழகனாகவே வந்ததற்கு முக்கிய காரணம் அவர்கள் தான். படத்தின் கண்களாக இருக்கும் கார்த்தி, அர்விந்த்சாமி இருவருக்கும் நன்றி”.
2டி இணை தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தர பாண்டியன்,
“சமூக அக்கறை கொண்ட படங்களை பண்ண வேண்டும் என்பதுதான் 2டியின் அடிப்படை நோக்கம். அது நிறைய படங்களில் நிறைவேறி இருக்கிறது. ஆனால் அந்த படங்களுக்கு எல்லாம் மகுடம் சூட்டியது போல் இந்த மெய்யழகன் அமைந்துவிட்டது. படம் பார்த்துவிட்டு பேசுபவர்கள் எல்லோருமே அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இந்தப் படத்தை தயாரித்ததற்கு நன்றி எனக் கூறும் போது அவர்களின் எண்ணங்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. பிரேம் குமாருடன் பணியாற்றியது அற்புதமான விஷயம். அவரைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும். ஆனால் இங்கே எதையும் ஓப்பனாக பேச முடியாது. அவர் ஒரு சிறந்த மனிதர். அவருடன் நிறைய விஷயத்தில் சண்டை போடுவேன். படம் தொடர்பான வேலைகளுக்கு எந்த ஊருக்கு சென்று வந்தாலும் கூட நாங்கள் கொடுத்த பணத்தை அப்படியே எங்களிடம் திருப்பிக் கொடுத்து விடுவார். வேறு யாரிடமும் இதை நாங்கள் பார்க்கவில்லை. பிரேமிடம் எனக்குப் பிடித்த விஷயம் அவரது நேர்மை”.
ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜூ,
“பத்திரிகையாளர்கள் எனக்கு கொடுத்த பாராட்டுக்களில் என்னுடைய உதவியாளர்கள் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. கார்த்தி, அர்விந்த்சாமி இருவருடனும் பணியாற்றிய நாட்கள் என்பதை விட அவர்களுடன் இருந்த நாட்கள் என்பது ரொம்பவே அழகானவை. அது எப்போதுமே என் மனதில் நீங்காத நினைவுகளாக இருக்கும். ஆடல், பாடல், சண்டைக் காட்சிகள் கொண்ட படங்கள் வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் இந்த மாதிரி படங்கள் வருவது அபூர்வம். இந்தப் படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி”.
ஆடை வடிவமைப்பாளர் சுபஸ்ரீ,
“ஒரு நல்ல படம் அதற்கான ஆட்களை தானே தேடிக் கொள்ளும் என்பார்கள். அப்படித்தான் மெய்யழகன் படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி உட்பட எல்லோரும் வந்தது”.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா
“இனி வரும் நாட்களில் நான் செல்லக்கூடிய உயரம் என்பது தான், இயக்குனர் பிரேமுக்கு நான் செலுத்தும் நன்றியாக இருக்கும். நிச்சயம் அந்த உயரத்திற்கு செல்வேன். அவர் கண் முன்னால் அந்த வளர்ச்சி இருக்கும்”.
பாடலாசிரியர் உமாதேவி,
“இந்த படத்தில் நான் எழுதிய இரண்டு பாடல்களும் மிக உருக்கமான பாடல்கள். என் உணர்வுக்கும் வாழ்வுக்கும் நெருக்கமான பாடல்கள். இந்த இரண்டு பாடல்களையும் என்னுடைய உணர்ச்சிகளுடன் நான் வெளிப்படுத்தியுள்ளேன். கூடுதலாக என்னுடைய வலிகளுக்கு பெரும் மருந்தாக இயக்குனர் பிரேம், கமல் சாரை இதில் ஒருங்கிணைத்தது தான் மிகப்பெரிய ஆறுதல். 96 படத்திற்கு பிறகு அதே அன்புடன் இந்த மெய்யழகன் படத்தில் கோவிந்த் வசந்தா குழுவினருடன் மீண்டும் சேர்ந்திருக்கிறோம்”.
*நடிகை தேவதர்ஷினி
“இந்தக் கதையின் ஆழத்தை புரிந்து கொண்டு இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்த சூர்யா, ஜோதிகாவுக்கு நன்றி”.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன்
“மெய்யழகன் படம் நிறைய மெய்யழகன்களால் சேர்ந்து உருவாக்கப்பட்டது. நீங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக வாழ்க்கையை பார்த்தால் மட்டும்தான் இந்த மெய்யழகனை புரிந்து கொள்ள முடியும்.பிரேம்குமார் அன்பை மட்டுமே நம்பி இந்த படத்தை பண்ணியிருக்கிறார். இப்படி ஒரு இயக்குனர் வரும்போது அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டியது நம் திரைத்துறையில் இருக்கும் அனைவரின் கடமை. அதை அனைத்து பத்திரிகையாளர்களும் செய்திருந்தார்கள்”.
பேசி முடித்ததும்
கார்த்தி, அர்விந்த்சாமி தயாரிப்பாளர் ராஜசேகர், இயக்குனர் பிரேம்குமார் ஆகியோரை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு ஜல்லிக்கட்டு மாட்டை அடக்கும் மாவீரன் சிலையைபா பரிசளித்தார் சக்திவேலன்.
— மதுரை மாறன்.