மேப் சர்வே செய்த கூகுள் குழு ! அடித்து உதைத்த கிராம மக்கள்!
நம்மில் பலர் புதிதாக ஒரு ஊருக்கு செல்லும் போது வழி தெரியாத சமயங்களில் அங்கு இருப்பவர்களிடம் வழி கேட்க கூச்சப்பட்டு கொண்டு நாம் முதலில் வழியை தேடுவது கூகுள் மேப்பில் தான், அந்த வகையில் இந்த கூகுள் மேப்ஸை மேம்படுத்தும் பணிகளில் கூகுள் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்காக கிராமப்புற சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட இடங்களை மேப் சர்வே செய்யும் பணியில் கூகுள் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிர்கார் என்ற ஒரு கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு தெருக்களை மேப் சர்வே செய்யும் பணியில் கூகுள் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட டெக் மஹிந்திரா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதன்படி அக்குழுவினரும், பிர்கார் கிராமத்திற்கு சென்று அங்குள்ள தெருக்களை புகைப்படம் எடுத்து மேப் சர்வே செய்து கொண்டிருந்தனர். இதற்காக தெருக்களை பிரத்தியேகமாக படம் பிடிக்கும் தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றையும் அக்குழுவினர் உடன் எடுத்துச் சென்றிருந்தனர்.
அந்த கேமரா பொருத்தப்பட்ட வாகனத்தின் உதவியோடு கூகுள் மேப்ஸ் குழுவினர் வேலை செய்து கொண்டிருந்ததை பார்த்த கிராம மக்கள், அவர்களை திருடர்கள் என சந்தேகப்பட்டனர். இதனால் கூகுள் மேப்ஸ் குழுவினருடன் கிராம மக்கள் தகராறில் ஈடுபட்டனர். கூகுள் மேப் குழுவினரோ எவ்வளவு எடுத்துக் கூறியும் கிராமத்தினர் கேட்பதாக இல்லை. அந்த பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் போட்டோ எடுத்து இவர்கள் திருடர்களுக்கு உதவுவதாக நினைத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் கிராம மக்கள் கூகுள் மேப்ஸ் குழுவினர் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர்.
இச்சம்பவம் குறித்து அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த ஊர் மக்களிடமிருந்து கூகுள் மேப்ஸ் குழுவினரை மீட்டனர். போலீசார் கிராம மக்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். கிராம மக்கள் தவறுதலாக நினைத்து தாக்குதல் நடத்தியதால் கூகுள் மேப்ஸ் குழுவினரும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தவில்லை. கிராம மக்கள் தங்களை தாக்கியதாக அவர்கள் புகாரையும் கொடுக்கவில்லை. திருடர்கள் என தவறுதலாக நினைத்து கூகுள் மேப்ஸ் குழுவினரை கிராமத்தினர் அடித்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— மு. குபேரன்