சாலை தடுப்புகளை தூக்கி எறிந்த அரசு பேருந்து ! அதிர்ஷ்டவசமாக உயிா் தப்பிய பயணிகள் !
மதுரையில் இருந்து நெல்லை சென்ற அரசு பேருந்து கயத்தாறு – கழுகுமலை அருகில் விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் எவ்வித ஆபத்துகளும் இன்றி மீட்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து போலீசாா் வழக்கு செய்துள்ளனா்.
இன்று காலை மதுரையில் இருந்து நெல்லைக்கு அரசு பேருந்து ஒன்று 52 பயணிகளை ஏற்றி கொண்டு சென்றுள்ளது. பேருந்தினை மதுரையை சேர்ந்த ஜெயபாண்டி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
பேருந்து கயத்தார் சாலைப்புதூர் சுங்கச்சாவடியை தாண்டி சென்று கொண்டிருந்த போது கயத்தாறு – கழுகுமலை சந்திப்பில் இருந்த சோலார் மின் விளக்கு கம்பத்தில் மோதியது மட்டுமின்றி சாலையின் நடுவில் இருந்த தடுப்புகளை தூக்கி எறிந்து நின்றது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பேருந்து மோதிய வேகத்தில் சோலார் மின்விளக்கு கம்பம் கீழே விழுந்து சேதமடைந்தது மட்டுமின்றி, பேருந்தின் முன்பக்கம் இருந்த வீல் இரண்டு டயருடன் தனியாக பிரிந்து சென்றது குறிப்பிடத்தக்கது. பேருந்தில் முன்பக்க கண்ணாடி முற்றிலுமாக சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த ஒரே ஒரு மூதாட்டிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. மற்ற பயணிகள் எவ்வித பாதிப்பு இல்லாமல் தப்பித்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கயத்தார் போலீசார் விரைந்து வந்து விபத்தாகி நின்ற அரசு பேருந்து அங்கிருந்து கிரேன் உதவி மூலமாக அப்புறப்படுத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
— மணிவண்ணன்.