தம்பி ராமையாவின் கிளுகிளு டான்ஸ்! சம்பந்தி அர்ஜுன் டென்ஷன்
‘மிக மிக அவசரம்’ ‘மாநாடு’ படங்களின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசை நடிகர் தம்பி ராமையா. இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்க, நடிகர் சமுத்திரக்கனி இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் மூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் டிசம்பர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ராஜா கிளி’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 20- ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மற்றும் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசியோர்…..
நடிகர் பிரவீன், “தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நிறுவனத்தில் நான் தயாரிப்பு பணிகளில் பணியாற்றி வந்தேன். அவர் ஒவ்வொரு படத்திற்கும் கதையை தேர்வு செய்யும் விதம் வியப்பாக இருக்கும். இப்படி கமர்சியலாக இல்லாமல் படங்களை தேர்வு செய்கிறாரே என நினைத்தால் அசால்டாக அதை டீல் செய்து விட்டு போவார். அப்படி இந்த நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் எனக்குள்ளும் இருக்கும் நடிப்பு ஆசையை அவரிடம் வெளிப்படுத்த தயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் அவரே என்னை தம்பி ராமையாவிடம் அனுப்பி வைத்தார். அந்த வகையில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தை தம்பி ராமையா கொடுத்தார்.
எந்த அளவிற்கு மீட்டருக்குள் நடிக்க வேண்டுமோ அந்த நடிப்பை அழகாக சொல்லிக் கொடுத்து பெற்றுக் கொண்டார்கள்.தம்பி ராமையா அண்ணன் இன்னும் கைவசம் நாலு கதைகள் வைத்திருக்கிறார்.. இன்றைய இயக்குனர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும்”.
நடிகர் முபாஸிர் பேசும்போது, “இந்த படத்தில் பிரவீன் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்திற்காக தான் நான் ஆடிஷன் சென்றேன். ஆனால் என் மனைவி டாக்டர் என்பதால் எனக்கும் ஒரு டாக்டர் கதாபாத்திரத்தை கொடுத்து விட்டார்கள். அண்ணன் ராமையா கொடுத்த படைப்புகளிலேயே பெஸ்ட் அவரது மகன் உமாபதி ராமையா தான். உமாபதி கூட யார் பழகினாலும் அவர்களுக்கு லவ் வந்துவிடும். அந்த அளவிற்கு நல்ல மனிதர். படத்தில் பணியாற்றிய அனைவரையுமே டார்லிங் என்றுதான் அழைப்பார்”.
இயக்குநர் உமாபதி ராமையா, “இந்த படத்திற்கு இயக்குநராக நான் வந்ததே ஒரு விபத்து என்று தான் சொல்லலாம். சுரேஷ் காமாட்சி சாரை பொருத்தவரை திறமையானவர்களை சரியாக தேர்ந்தெடுப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப் போகும் சமயத்தில் தான் சுரேஷ் காமாட்சி சார் என்னை அழைத்து தன்னம்பிக்கை அளித்து இயக்குநராக ஆக்கினார். இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்குமே தனித்தனியாக ஒரு பாடி லாங்குவேஜை உருவாக்கி கொடுத்து விட்டார். அதனால் எனக்கு படப்பிடிப்பில் எளிதாக இருந்தது. கிட்டத்தட்ட 80 சதவீதம் அவர் பண்ணிவிட்டார். ஆனால் திரைக்கதையில் அப்பா, சுரேஷ் காமாட்சி இருவரும் எனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள்.
சமுத்திரக்கனி அண்ணனுக்கும் எனக்கும் இருப்பது ரொம்ப வித்தியாசமான ஒரு பிணைப்பு. என் அப்பா அவரை தம்பி என்று அழைப்பார் நான் அவரை அண்ணன் என்று அழைப்பேன். என் திருமணம் முதற்கொண்டு எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர் எனக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே ஒரு புது இயக்குநரான எனக்கு ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இந்த படத்தில் அப்பாவை வித்தியாசமான மனிதராக பார்ப்பீர்கள். எல்லோருக்கும் அப்பாதான் ஹீரோ என்பார்கள். என் படத்திலேயே அப்பாதான் ஹீரோ எனும் போது அவரை வைத்து கொஞ்சம் ஏதாவது புதுசாக செய்ய ஆசைப்படுவது இயல்பு தானே.நல்ல படம் கொடுத் திருக்கிறோம். இதயத்தில் இருந்து எடுத்துச் சொல்வது போல ஒரு நல்ல கருத்தையும் இதில் சொல்லி இருக்கிறோம்”.
கதையின் நாயகன் தம்பி ராமையா, “எல்லா நேரத்திலும் பசிக்கு அடுத்தவர்களை எதிர் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா ? நமக்கு தேவையான போது நாமும் சமைக்க வேண்டும் தானே ? அப்படி தான் இந்த கதையை சமைத்தேன்.
படத்தின் கதையை உருவாக்கியபோது நான் தான் இதை இயக்குவேன் என சொல்லிக்கொண்டு இருந்தேன். ஆனால் நானே நடித்துக் கொண்டு இயக்குநராக இருப்பது சரி வருமா என நினைத்து உமாபதியை இந்த படத்தை இயக்கும்படி கூறினேன். ஆனால் அவர் தயங்கினார். உடனே சுரேஷ் காமாட்சி அவரை அழைத்து நீ தான் படத்தை இயக்க வேண்டும் என்று இயக்குநராக கொண்டு வந்திருக்கிறார். இந்த ராஜா கிளி படம் ஒரு கூண்டுக்கிளியாக இருந்தது. இப்போது வெளியே வந்து பறக்க இருக்கிறது”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,
“இந்தப் படம் தான் உமாபதிக்கு உச்சம் என சொல்ல மாட்டேன். இதுவும் ஒரு படம். ஆனால் அவரிடம் இன்னும் அதிக படைப்புத்திறமை ஒளிந்திருக்கிறது.
மாநாடு சமயத்தில் எனக்கு போன் செய்து வாழ்த்தியது இரண்டு நடிகர்கள் மட்டுமே ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்னொருவர் இயக்குனர் சமுத்திரக்கனி.தம்பி ராமையா தான் கதாநாயகன் என தெரிந்தும் நடிக்க ஒப்புக்கொண்ட சுவேதா, சுபா இருவருக்கும் நன்றி.படம் எடுப்பது மட்டுமே எங்களது வேலை. அது நல்ல படமா இல்லையா என்பதை அதன் வெற்றி மட்டும் தான் தீர்மானிக்கிறது. அதன் பட்ஜெட் தீர்மானிக்காது. இந்த படம் ஒரு மனிதனின் வாழ்வியல். இது மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும். இந்தப் படத்தை நவ-29ல் தான் வெளியிடலாம் என இருந்தோம். ஆனால் புஷ்பா 2 ரிலீஸ் காரணமாக இப்போது டிசம்பர் 13ல் வெளியிட முடிவு செய்துள்ளோம்”.
இயக்குனர் சமுத்திரக்கனி,
“நானும் தம்பி ராமையாவும் பேசிய பல கதைகளில் ஒன்று தான் இந்த ராஜா கிளி. காலம் ஒரு மனிதனை எங்கே எல்லாம் கொண்டு போய் நிறுத்துகிறது. ஆனால் காலத்திற்கு பதில் சொல்லாமல் இந்த உலகத்தில் இருந்து யாரும் தப்பித்துப் போய்விடவே முடியாது. அதனால் முடிந்தவரை உண்மையாக இருங்கள். எளிமையாக இருந்து விடுங்கள். காலம் நம்மை கைப்பிடித்து தூக்கிச் செல்லும் என்பது தான் இந்தப் படத்தின் கதை”.
நடிகர் அர்ஜுன், “இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை என்றாலும் இந்த படம் எனக்கு ஒரு ஸ்பெஷல் தான். என்னுடைய குடும்ப படம் போல தான் இருக்கிறது. ஏனென்றால் என் சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்.. நான் கூட இதுவரை நடிக்காத அளவிற்கு ஒரு ரொமாண்டிக் பாடலில் சம்பந்தி ராமையா நடித்து இருப்பதாக சொன்னார்கள். இது சரியில்லை சம்பந்தி. நானும் எனது மாப்பிள்ளையும் ஒன்றாக இருக்கும் முதல் மேடை இது. இனி நிறைய பார்க்கப் போகிறீர்கள்.. எங்கள் கூட்டணியில் பல படங்களை உருவாக்கப் போகிறோம். சொல்லக்கூடாது செய்து காட்ட வேண்டும். சுரேஷ் காமாட்சி நல்ல நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைக்கிறார் என்று சொல்கிறார்கள். அவருக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என வாழ்த்துகிறேன்”.
— மதுரை மாறன்.