உண்மையில் யாருக்கான அரசு !
யாருக்கான அரசு! மூன்றாண்டுகளாக திமுக அரசு மீது சமூக ஊடகங்களில் கிளப்பப்படும் பிரச்சனைகள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் எடுபடாமல் போவதை எப்படி புரிந்து கொள்வது? டாஸ்மாக் தொடங்கி கோயில் சிலைக்கடத்தல் வரை சமூக ஊடகத்தில் பெரிதாக்கப்பட்ட எத்தனையோ பிரச்சனைகளை பட்டியலிடலாம். ஏன் எதுவுமே மக்கள் மத்தியில் பேசு பொருளாகவில்லை?
2019 தேர்தலில் தேசிய அளவில் மோடிக்கு இருந்த களம் தான் இன்றைக்கு கிட்டத்தட்ட ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது. 50% க்கும் அதிகமான ஆதரவுடன் ஸ்டாலின் தனிப்பெரும் தலைவராக இருக்கிறார். மீதமுள்ள 50% ஆதரவை எடப்பாடி பழனிசாமி தொடங்கி சீமான் வரை அனைவரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
50% மக்கள் ஆதரவுள்ள தலைவர் மீது அழுத்தமில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி அதில் வெற்றி பெறுவது தமிழ்நாடு போன்ற அரசியல் தெளிவுள்ள மாநிலத்தில் சுலபமில்லை.
வேங்கைவயல் சம்பவத்திற்கு பிறகு தற்பொழுது உ ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் ‘தலித்’ அரசியலை கையில் எடுத்திருக்கிறார்கள்.
உண்மையில் திமுக அரசு தலித்துகளுக்கு ஆதரவாக இல்லையா?
திமுக அரசின் அதிகாரமட்டத்தில் பேசிப் பாருங்கள். ‘தலித்துகளுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார் ஸ்டாலின்’ என்று பேசுவார்கள். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் உள்துறைச் செயலர் செல்வி. அமுதா தலித் அதிகாரி. முதலமைச்சரின் செயலர்களில் முதன்மையான திரு.முருகானந்தம் தலித் அதிகாரி. சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆக இருந்து தற்பொழுது சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கும் அருண் தலித் அதிகாரி. ரத்தோர் தலித். முக்கியமான துறைகளை கவனிக்கும் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலித் அதிகாரிகள்தான்.
இப்படி அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்புகளில் எல்லாம் தலித் அதிகாரிகளை நியமித்து திமுக அரசாங்கம் தலித்துகளுக்கான அரசாகத்தானே செயல்படுகிறது? ஆனால் தலித் போராளி என்று சொல்லிக் கொள்கிறவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

வேங்கைவயல் என்ன ஆனது என்பார்கள்….வேங்கைவயல் பிரச்சனையில் மலத்தை கலந்தது சில தலித்துகள் தான் என்று அவர்களுக்குமே தெரியும். திமுக அரசு மென்மையாக விட்டு விட்டது. அவர்களைக் கைது செய்து கூண்டில் ஏற்றியிருந்தால் ‘அய்யோ பலியை தலித் மீதே போடுகிறது ஸ்டாலின் அரசு’ என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கும்.
போன அதிமுக ஆட்சி வரையிலும் ‘தென் மாவட்டங்களில் பதட்டம்’ என்ற செய்தியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தானே நாம்? திமுக ஆட்சியின் மூன்றாண்டுகளில் ஏன் அப்படி ஒரு செய்தி வரவே இல்லை? தென் மாவட்டங்களில் தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.
2016-2021 அதிமுக ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட எளிய பட்டியலினத்தவரின் எண்ணிக்கை மட்டும் 340. இன்றைய தலித் போராளிகள் யாரேனும் நேரடியாக குரல் எழுப்பியதாக நினைவில் இருக்கிறதா?
அதிமுக ஆட்சியில் எழாத குரல், பாஜகவை நோக்கி எழாத குரல் இன்று திமுக அரசு நோக்கி எழுவதற்கான காரணமே திமுக அரசும், முதலமைச்சர் ஸ்டாலினும் அளித்திருக்கும் சுதந்திரம்தான் என்பதை மானாமதுரையிலும், கீழ்பென்னாத்தூரிலும் வாழும் ஒரு எளிய தலித் புரிந்து கொண்டிருக்கிறான். அதனால்தான் ஏழை-எளிய தலித் மக்கள் பெருந்திரளாக ஸ்டாலின் பின்னால் நிற்கிறார்கள். அது உறுத்துகிறது. இல்லையா?

ஆம்ஸ்ட்ராங்குக்கும், ஆற்காடு சுரேஷ் என்ற ரவுடியின் கூட்டத்திற்குமான தனிப்பட்ட பகையில் நிகழ்ந்த கொலையை முன் வைத்து சட்டம் ஒழுங்கு சரியில்லை; ஸ்டாலின் தலித்துகளுக்கு எதிரானவர்கள் என்று கூச்சலிடுகிறார்கள். பெரியாரை தலித்துகளுக்கு எதிரானவர்கள் என்றார்கள். திமுகவை தலித்துக்கு எதிரான கட்சி என்று எம்.ஜி.ஆர் பின்னாலும் ஜெயலலிதா பின்னாலும் நிறுத்தினார்கள்.
கடந்த கால வரலாற்றையெல்லாம் உடைத்து எளிய தலித் மக்களுக்கான தலைவராக ஸ்டாலின் உருவாகியிருக்கிறார். ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையும், விடியல் பஸ் பயணமும் பெரும்பாலான பெண்களை- குறிப்பாக தலித் பெண்களை ஸ்டாலின் ஆதரவாளராக மாற்றியிருக்கிறது. காலை சிற்றுண்டி திட்டத்தில் பெரும்பாலான தலித் குழந்தைகள் பலனடைகிறார்கள். சத்தமில்லாமல் ஒரு மாநிலத்தின் பெரும்பான்மையில் தலித் மக்கள் அங்கமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் யாரையோ பதட்டமடையைச் செய்திருக்கிறது. யாருடைய அஜெண்டாவையோ யாரோ செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் தலித் மக்கள் அளித்திருக்கும் ஆதரவை தனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஸ்டாலினின் அரசு அங்கீகரித்தே வருகிறது. திருவண்ணாமலையில் முடங்கிக் கிடந்த இருளர்களுக்கான சங்கக் கட்டிடத்தை திறப்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறது. தலித்துகளுக்குச் செய்யும் நற்காரியங்களை பூதாகரமாக்கினால் பிற சமூகங்கள் வெறுப்படைவார்கள். பாஜகவும் அதிமுகவும் ஊதிப்பெருக்கும். திமுக அடக்கி வாசித்தால் தலித் ஆக்டிவிஸ்ட்கள் ‘ஒன்றுமே செய்யவில்லை’ என்பார்கள். அரசியலில் இது சாதாரணம்தான்.
ஆக்டிவிஸ்டுகளுக்கு என்ன பிரச்சனை தெரியுமா? ‘திமுகவுக்கு தலித் ஓட்டு போட்டிருக்கிறார்கள்…எனவே திமுக அரசு தலித் அரசாகச் செயல்பட வேண்டும்’ என்கிறார்கள். தலித்துகளுக்கான அரசாகச் செயல்படுவதற்கும், தலித் அரசாகச் செயல்படுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. அது தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் அவசியமே இல்லை.
முதல் பத்தியில் சொன்னதுதான். மக்கள் செல்வாக்குள்ள தலைவர் மீது வைக்கப்படும் அழுத்தமில்லாத ஒவ்வொரு விமர்சனத்திற்கும் அதிகபட்சம் ஐந்து நாட்கள்தான் ஆயுள்.ஸ்டாலின் செல்லும் பாதை மிகச் சரியானது. கூச்சல்களை மு.க.ஸ்டாலின் பொருட்படுத்த வேண்டியதில்லை. உங்களின் அரசு யாருடைய அரசாகவும் இருக்க வேண்டியதில்லை; அனைவருக்குமான அரசாகவே இருக்கட்டும். அது தான் மாநிலத்திற்கு நல்லது !
– சிறகு
திமுக குறித்த சரியான பார்வை இந்த கட்டுரை ….
மகிழ்ச்சி சார்..
இந்த கட்டுரையை எழுதின முட்டாப் பையன் தமிழ்நாட்டில் தான் இருக்கிறானா.?
என்ன பிரச்சனை சார்..