680 கிராம் பிறந்த குழந்தை! அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது என்ன?
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், வரலொட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி-சுரேஷ்குமார் தம்பதிக்கு, பனிக்குடம் உடைந்து 6 மாத குறைப்பிரசவத்தில் பிறந்த வெறும் 680 கிராம் எடையுள்ள குழந்தை, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 76 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று, 1.3 கிலோ கிராம் எடையுடன் நலமாக வீடு திரும்பியுள்ளது.
பிறக்கும்போதே அதிதீவிர குறைமாதக் குழந்தையாக (Extreme Preterm, Very Low Birth Weight Baby) ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை, மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் தீவிர பராமரிப்பு பிரிவில் (NICU) சிறப்பாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் ஜெயசிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“இந்த அதிதீவிர சிகிச்சையும் நவீன மருத்துவ நுட்பங்களும் குழந்தையின் உயிரையும் நலனையும் காப்பாற்றின. இதில் குழந்தையின் தொடர் கண்காணிப்பு, சிறப்பான மருத்துவக் குழுவினர், புரிந்துணர்வு மிக்க செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோரின் உறுதியான ஒத்துழைப்பு ஆகியவை முக்கியப் பங்கு வகித்தன. இத்தகைய வெற்றிகள் அரசு மருத்துவமனைகளின் திறனையும் மக்களின் நம்பிக்கையையும் கணிசமாக உயர்த்தும் என்பதில் எங்கள் மருத்துவக் குழு முழுவதுமாக நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார்.
மேலும் குழந்தையின் தாயார் பிரியதர்ஷினி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததும், ஒரு வாரத்திற்கு எனது தாய்ப்பாலைத் திரட்டி தாய்ப்பால் வங்கிக்கு (Milk Bank) கொடுத்தேன். பின்னர் அந்தப் பாலே குழந்தைக்குக் கொடுக்கப்பட்டது. 76 நாட்களும் குழந்தைக்கு மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளித்து, இன்று நலமுடன் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
— மாரீஸ்வரன்